Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 18 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தில்லை தெருவிற்கு நடுவில் வரவும் அவனது அடியாட்கள் நின்ற இடத்தில் இருந்து அலறினார்கள்
”அண்ணே ஒளிஞ்சிக்கண்ணா, நிக்காத அவனுங்க உன்னை போட்டுத்தள்ளத்தான் வந்திருக்கானுங்க போண்ணா” என கத்த அது அவன் காதில் விழவில்லை, அவனது கண்கள் சம்யுக்தாவையே பார்த்தது, அவளோ இளப்பமாகச் சிரித்தாள் அதில் அவனுக்கு கோபமே வந்தது.
துணிச்சலாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து எதிரியிருந்த வண்டியிடம் சென்று தைரியமாக நின்றான், அவன் வரவும் எதிரியின் வண்டியும் நின்றது அதில் இருந்த மூவரும் இப்போது கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவன் முன் வந்து நின்றனர்
”இன்னிக்கு உன் கதையை முடிக்க சொல்லி கருணா அண்ணா சொல்லிட்டாரு உன்னால தப்பிக்க முடியாது வசமா மாட்டினியா” என சொல்ல அவனோ
”டேய் இது என் ஏரியா, என்னை உன்னால கொல்ல முடியாது, அப்படியே கொன்னாலும் உன்னால இந்த ஏரியாவிட்டு என்ன ஒரு அடி கூட திரும்பி போக முடியாது வசமா மாட்டினது நான் இல்லை நீங்கதான்” என சொல்லும் போதே தில்லையின் அடியாட்கள் எதிரியின் ஆட்களுக்கு பின்னால் துப்பாக்கியுடன் சுற்றிலும் நின்றுவிட அதைக் கண்ட எதிரியின் ஆட்களோ நடுங்கினார்கள், தைரியமாக தில்லையே வெளியே வந்ததால் அவனை நம்பி அவனது அடியாட்களும் வெளியே வந்து சுற்றிலும் நின்று விட்டார்கள். அவனுக்கும் பாதுகாப்பு தந்ததோடு எதிரியாட்களையும் பிடித்துக் கொண்டார்கள்.
தில்லையோ எதிரியாட்களிடம்
”சுடுங்கடா அதுக்குதானே வந்தீங்க சுடுங்க” என தில்லையே சத்தம் போட அவர்களும் சட்டென ஆயுதங்களை அவனை நோக்கி காட்டினார்கள்.
உடனே தில்லையின் ஆட்களோ அவர்களின் பின்னாடி இருந்து தங்களிடம் இருந்த துப்பாக்கியின் முனையை அவர்களின் பின்னந்தலையில் வைத்து அழுத்த அதோடு வந்தவர்கள் அடங்கினார்கள்.