Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 07 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சத்யாவின் முகத்தைப் பார்த்து கண்மணிக்கு சிரிப்பு பொங்கியது! இருந்தாலும், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி விட்டு,
"சரிங்க சார், நீங்க வாங்கிட்டு வந்த காஃபி வேஸ்ட் ஆக வேண்டாம்! நீங்க இரண்டு பேரும் பேசிட்டே குடிங்க... நான் வரேன்," என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். போகும் முன் தேன்மொழியை பார்த்து கண்களை சிமிட்டி விட்டு தான் சென்றாள்!
தேன்மொழியின் முகத்திலும் புன்னகை எட்டிப் பார்த்தது! அதை சத்யாவிற்கு மறைக்க அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு தன் நாற்காலியில் அமர, சத்யா அங்கே இருந்த காலி நாற்காலியில் அமர்ந்தான்.
"சாரி தேன்மொழி, என்னால தானே உங்களுக்கு வேலை ஜாஸ்தி? இப்படி அவசரப் பட வேண்டாம், மன்டே முடிச்சு அனுப்பினாலே போதும்," என்றான் சத்யா மெல்லிய குற்ற உணர்வுடன்.
"இதுக்கு எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க? நான் நாளைக்கு லீவ். அதனால தான் இன்னைக்கு வேலை அதிகம். ஸோ, நீங்க மட்டும் இதுக்கு காரணம் இல்லை...!"
அதென்னவோ சத்யாவை நேராக பார்த்துச் சொல்ல இப்போதும் என்னவோ போல இருக்கவும் தலையை குனிந்து ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தாள் தேன்மொழி.
"ஓ! நீங்க நாளைக்கு லீவா? தலைவலின்னு சொன்னீங்களே, உடம்பு ஏதும் சரி இல்லையா?"
சத்யாவின் அக்கறை கலந்த கேள்வி தேன்மொழிக்கு குழப்பத்தைக் கொடுத்தது!
இவன் ஏன் இப்படி கேட்கிறான்? அண்ணி இவனும், இவனுடைய அம்மாவும் அவர்களின் வீட்டிற்கு வர போவதாக சொல்லித் தானே லீவ் எடுக்க சொன்னார்கள்???
ஒருவேளை இவனுக்கு தெரியாதோ? இல்லை என்றால்... அவனுக்கு பிடிக்கவில்லையோ? பிடிக்காவிட்டால் எதற்காக அவளிடம் வந்து அவனாகவே பேசிக் கொண்டிருக்கிறான்???