Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 15 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஹேமாவின் மருத்துவமனை வரவேற்பறையில் அமர்ந்திருந்த கமல் கையில் இருந்த வாட்சில் நேரம் பார்த்தான். ஆறு மணியை தாண்டி இருந்தது.
பொதுவாக இந்த நேரத்தில் தான் அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்புவான்.
இன்று ஹேமா ஃபோன் செய்து அவனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி இருந்ததால் வேறு வழி இல்லாமல் சீக்கிரமே கிளம்பி வந்திருந்தான்.
என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
ஹேமா ஃபோனில் பேசிய போதே கேட்டிருந்திருக்க வேண்டும். அப்போது வேறு வேலையில் ஆழ்ந்திருந்ததால் அவனுக்கு அது தோன்றவே இல்லை.
இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லையே என்று கமல் யோசித்துக் கொண்டிருக்க, ஒரு நர்ஸ் அவனின் அருகே வந்து,
“டாக்டர் உங்களை வர சொன்னாங்க,” என்றாள்.
நர்ஸிடம் நன்றி சொல்லி விட்டு எழுந்து சென்றவன், டாக்டர் அறையில் இருந்த ஹேமாவை பார்த்து நட்புடன் புன்னகைத்தான்.
“எப்படி இருக்கீங்க டாக்டர்?”
ஹேமாவை டாக்டர் என்று அழைப்பதே இப்போதும் கமலின் வாடிக்கையாக இருந்தது.
ஹேமா மட்டுமல்லாமல், சுமித்ராவும் கூட அவனை மாற்ற முயன்று தோற்று போய் இருந்தார்கள்!
வழக்கத்திற்கு மாறாக, பெயருக்கும் அவனின் புன்னகைக்கு பதில் சொல்லாத ஹேமா, “உட்காருங்க கமல்,” என்றாள்.