புன்னகையுடன் அதை எடுத்தவன்,
“என்ன நந்திதா, நீங்க இது எடுத்துக்கலையா? ரொம்ப நல்லதுங்க...” என்றபடி ஒரு ஸ்பூன் பொரியலை நந்திதாவின் தட்டில் வைத்தான்.
பிடிக்காததை பிடிக்காது என்று நேரே சொல்லிவிடும் நந்திதாவால் ஏனோ சட்டென உதய் இப்படி அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு அவள் தட்டில் பொரியலை வைத்து சாப்பிட சொல்வதற்கு கோபமாக எதுவும் சொல்ல முடியவில்லை... உண்மையில் சொல்ல தோன்றவில்லை.
“எனக்கு வெண்டக்காய் பிடிக்காது,” என்றாள் மெல்லிய குரலில்.
“ஓ! சாரி...! நான் வேணா எடுத்துக்கட்டா??”
அவள் தட்டில் இருந்து அவன் எடுத்துக் கொள்வதா?
ராஜசேகரும் சரத்தும் அலுவலக விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்ததால் மற்றவர்கள் அனைவரின் கவனமும் அதிலேயே தான் இருந்தது... அதனால் யாரும் இவர்கள் இருவர் பக்கம் பார்க்கவில்லை... ஆனாலும்....!
“இல்லை... பரவாயில்லை... இருக்கட்டும்,” என்றாள் நந்திதா.
“சாரி, உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியாது!”
ஹ்ம்ம்... எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் என் கண் முன்னே இருக்கும் போது எடுக்காமல் இருந்தேன்! என மனதினுள் சொல்லிக் கொண்ட நந்திதா, நேரில் அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கும் எண்ணத்துடன் சின்ன புன்னகையை பதிலாக கொடுத்தாள்.
உதயும் மேலே பேச்சை தொடரவில்லை.