“நந்து, ப்ரியா,” என்று எதையோ சொல்ல தொடங்கிய துளசி, உதயை கவனித்து விட்டு,
“உதய், அத்தை ஏதோ புக் எழுதுறாங்களாமே, நீ சொல்லவே இல்லை?” என அவனிடம் கேட்டாள்.
“அது சும்மா ரூமர் அண்ணி, நம்பாதீங்க. ப்ரியா அம்மாவோட ஃப்ரென்ட்டோட பொண்ணு.... அவ அம்மா இப்போ இல்லை, அப்பா இருந்தும் இல்லாத மாதிரி, அதான் அம்மா ஹெல்ப் செய்றாங்க,” என்றான் உதய்.
“அப்படியா?” என்றபடி ப்ரியாவை பார்த்தாள் துளசி.
“அவர் தான் சும்மா சொல்றார். ஆன்ட்டி அப்படி எல்லாம் சும்மா வேலை தருவாங்களா? உங்களுக்கு தெரியாதா என்ன?” என்றாள் ப்ரியா!
“ப்ரியா சொல்றதிலேயும் பாயின்ட் இருக்கு!”
“இருக்கும் அண்ணி, ஏன் இருக்காது? இதை அப்படியே அம்மா கிட்ட சொல்றேன். அவங்க வார்த்தைக்கு வார்த்தை உன் அண்ணி அப்படி இப்படின்னு புகழ்ந்துட்டு இருக்காங்க... கூடவே அவங்களுக்கும் உங்களை போலவே மருமகள் வேணுமாம்...”
பேசிக் கொண்டே போன உதயின் கண்கள் தானாக அவர்களின் பேச்சை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த நந்திதா பக்கம் சென்றது...
அதுவரை அவன் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த நந்திதா அவசரமாக பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்...
உதயின் பார்வை சென்ற திக்கை ப்ரியாவும் கவனிக்க தவறவில்லை! அதையும் மனதினுள் குறித்துக் கொண்டாள்.