Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 09 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
‘ஃபோகஸ் எலெக்ட்ரானிக்ஸ்’ என்ற பெயரை வண்ணம் மிகு பெரிய எழுத்துக்களாய் காட்டிய அந்த ஃப்ளெக்ஸ் போர்டை பார்த்து தயங்கி நின்றாள் சரண்யா.
என்ன தைரியத்தில் கிளம்பி வந்தாள் என்றே அவளுக்கு புரியவில்லை.
மித்ரனிடம் நேராக ஃபோன் செய்து சொல்லாமல் உமாவை அழைத்து உடல் நலம் சரி இல்லாததால் அன்று அவள் வேலைக்கு வர இயலாது என மித்ரனிடம் சொல்ல சொல்லி இருந்தாள்.
மித்ரனிடம் எதற்கு பேசுவது என்று பேருக்கு சொல்லிக் கொண்டாலும், உண்மையில், மித்ரனிடம் பேசி திட்டு வாங்கி கட்டிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை என்பது அவளின் உள் மனதிற்கு மட்டுமே தெரிந்த நிஜம்.
“யாரை பார்க்கனுங்க?”
கம்பெனியின் வாசலில் தயக்கத்துடன் நின்றிருந்தவளை கவனித்து, அந்த பெரிய கேட்டை திறந்த படி கேட்டார் செக்யூரிட்டி. அவரின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் விழித்தாள் சரண்யா.
“ரொம்ப நேரமா கேட் பக்கத்துல நிக்குறீங்களே, அதான் கேட்டேன்,” என்றார் அவர்!
அவர் குரலில் நட்பும் இல்லை, மிரட்டலும் இல்லை. ஏதோ விதத்தில் அது சரண்யாவுக்கு இதமாக இருந்தது.
“மைத்ரேயி மேடமை பார்க்கனும்... அவங்க கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்காம வந்துட்டேன்,” என்றாள் தயக்கத்துடன்.
“பரவாயில்லைங்க, நான் அவங்க செக்ரட்டரி கிட்ட பேசுறேன். மேடம் ஃப்ரீயா இருந்தா இன்னைக்கே பேசுவாங்க... இல்லைனா உங்களை என்னைக்கு வரனும்னு சொல்வாங்க... உங்க பேரு, என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...”