Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 16 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, அவனின் மகள் ரேஷ்மி கவிதாவுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். கமல் வந்ததை கவனிக்காமல் ஓடி வந்து அவன் மீது மோதினாள் ரேஷ்மி.
கமல் இருந்த மனநிலையில், தன்மேல் மோதியது சின்னக் குழந்தை என்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் அடக்கி வைத்திருந்த துக்கத்தை கோபமாக வெளிப் படுத்தினான்.
“அறிவில்லை? இப்படியா கண்ணு மண்ணு தெரியாம விளையாடுறது?” என்று மகளிடம் எரிந்து விழுந்தான்.
அவன் திட்டியதில் பயந்து போய் இரண்டடி பின்னே சென்ற ரேஷ்மியை கவிதா அரவணைத்து கையில் தூக்கிக் கொண்டாள்.
“சின்ன பொண்ணு கிட்ட போய் இப்படியா கத்துறது?” என கமலுக்கு கேட்கும் விதத்தில் முனுமுனுத்தாள் கவிதா.
“பெரிய பொண்ணு நீ சரியா இருந்தா அவ ஏன் இப்படி இருக்கா. என்ன தான் சரியா இருக்கு இந்த வீட்டுல? எல்லாமே இப்படி தான் இருக்கு. போ, போய் புக்குன்னு ஒன்னு இருக்கே அதை எடுத்து படி.”
கமல் கவிதாவிடம் கத்திக் கொண்டிருக்க, அந்த சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் சுமித்ரா.
கமல் கவிதாவிடம் பேசியது அவளுக்கும் கேட்டது ஆனால் அவனின் சிவந்திருந்த கண்களும் வாடி இருந்த முகமும் வேறு எதுவோ இருப்பதாக அவளுக்கு சொல்லியது.
கவிதாவிடம் கத்தியபடி ஏதோ உந்துதலில் சுமித்ரா நின்றிருந்த பக்கம் பார்த்த கமலின் பேச்சு பாதியில் சட்டென்று நின்றுப் போனது.