“அப்பாக்கு சாப்பாடு வேண்டாமாம்மா...”
“சொல்ல மறந்துட்டேன் சுமி, அவன் எதுவோ சாப்பிட்டு வந்தானாம்... நைட் சாப்பாடு வேண்டாம்னு என் கிட்டே அப்போவே சொன்னான்,” என்றாள் பூங்கோதை.
“ரொம்ப நல்லதா போச்சு... வாங்க அண்ணி, இன்னைக்காவது ஜாலியா பேசிட்டே சாப்பிடலாம்,” என்றாள் கவிதா!
எல்லோரும் எந்த தடையும் இல்லாமல் சாப்பிட, சுமித்ராவிற்கு மட்டும் உணவு இறங்க மறுத்தது.
கமல் மாலையில் சாப்பிட்டு வந்து விட்டதாக சொன்னதை நம்ப அவளின் மனம் மறுத்தது... எதுவோ சரி இல்லை...!
கமலிடம் நேராக சென்று என்ன விஷயம் என்று கேட்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இருக்க தான் செய்தது.
ஆனால் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்து, பேருக்கு கொஞ்சமாக கொரித்தவள், எல்லோரும் சாப்பிட்டு முடித்து சென்ற பின், மீதம் வந்த உணவில் கொஞ்சமாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு மீதத்தை ஃப்ரிட்ஜில் வைத்தாள்.
சமையலறை ‘சிங்க்’கில் கழுவ இருந்த பாத்திரங்களை பார்த்தவள், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து தட்டை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
போகும் வழியில், “கவி, ரேஷ்மி உன்னோட இருக்காளா?” என்றுக் கவிதாவிடம் கேட்டாள்...
“ஆமா அண்ணி இங்கே இருக்கா... இன்னைக்கும் இங்கேயே தூங்குறாளாம்,” என்று பதில் குரல் கொடுத்தாள் கவிதா.