“சரிங்க... தேங்க்ஸ்...” என்ற சரண்யாவின் முகத்தில் தானாகவே புன்னகை எட்டி பார்த்தது.
‘இங்கே வேலை செய்தால் நன்றாக தான் இருக்கும்’ என்ற எண்ணம் அவளுக்குள்ளே தோன்றியது... ஆவலுடனே அலுவலக கட்டிடத்தை நோக்கி சென்றாள்.
ஃப்ரன்ட் டெஸ்கில் இருந்த பெண் செக்யூரிட்டி, சரண்யாவின் முகத்தையும் பாஸில் இருந்த ஃபோட்டோவையும் பல முறை பார்த்து, இரண்டும் அவளே தான் என உறுதி படுத்தி விட்டு, “இங்கே உட்காருங்க... மேடம் கூப்பிடுவாங்க,” என்றார்.
நாற்காலியில் அமர்ந்த சரண்யாவிற்கு மைத்ரேயிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று குழப்பமாக இருந்தது...
தகுதிகள் சொல்லி வேலை கேட்க அவளிடம் என்ன தகுதி இருக்கிறது? படித்த பட்ட படிப்பை வேண்டுமென்றால் சொல்லலாம்... மற்றபடி கம்பெனியை சூப்பர்வைஸ் செய்தேன் என்று சொல்லி வேலை கேட்கமுடியுமா?
தன்னையும் அறியாமல் மெல்ல கைகளை பிசைந்தபடி யோசனையை தொடர்ந்தாள் சரண்யா...
என்ன ஆனாலும் தன் நிலைமையை சொல்லி அழுதோ, கெஞ்சியோ மட்டும் வேலை கேட்க கூடாது என்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டாள்.
திடீரென, “ஹலோ சரண்யா,” என்ற அழைப்புடன் அவள் தோள் மீது ஒரு கரம் படிந்தது.
துள்ளிக் குதிக்காத குறையாக திகைத்து எழுந்து நின்றாள் சரண்யா.
“ஹேய், சாரி சாரி... பயமுறுத்திட்டேனா???”
வெகு இயல்பாக சொன்னவளை குழப்பத்துடன் பார்த்தாள் சரண்யா...