✽✽✽
“மைத்தி சாப்பிட வா...”
அம்மா நளினியின் குரல் உரத்து ஒலிக்க, “வரேன்ம்மா,” என்று பதில் சொல்லிக் கொண்டே தன் குழந்தை மோனிக்காவுடன் உணவறைக்கு வந்தாள் மைத்ரேயி. அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த மித்ரனை பார்த்து முறைத்துக் கொண்டே கணவன் ஜெயந்தின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“அவனை பார்த்து ஏன் மைத்தி முறைக்குற?” என்ற அம்மா நளினியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், மீண்டும் மித்ரனை பார்த்து முறைத்து விட்டு வேலையாட்கள் டேபிளில் கொண்டு வந்து வைத்த உணவை எடுத்து கணவனின் தட்டில் பரிமாற தொடங்கினாள் மைத்ரேயி.
நளினி சொன்னதற்கு பிறகே மைத்ரேயியின் பார்வையை கவனித்த மித்ரன்,
“மைத்ரேயி, நானும் சிங்கப்பூர்ல இருந்து வந்த நாள்ல இருந்து பார்க்கிறேன், அன்னைக்கு மோனி குட்டியோட கதவை திறந்த நேரத்துல இருந்து இப்படியே முறைச்சிட்டே தான் இருக்க... நான் உன் அண்ணன் ஞாபகம் இருக்கட்டும்,” என்றான்.
“அண்ணன்! ஆமாம் ஆமாம்! ரொம்ப பெரிய அண்ணன்... நீயே தான்,” என்று கசப்பான குரலில் சொன்னாள் மைத்ரேயி.
“சாப்பிடுற நேரத்துல இப்போ எதுக்கு சண்டை? மித்து, மைத்தி இரண்டு பேரும் அமைதியா சாப்பிடுங்க,” என்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற நளினியை பார்த்து மைத்ரேயிக்கு சிரிப்பு வந்தது. ஏன் சிடுமூஞ்சியான மித்ரனின் முகத்தில் கூட சின்னதாக மலர்ச்சி தெரிந்தது!
“என்ன சிரிப்பு இரண்டு பேருக்கும்?”
“இல்லம்மா... இன்னும் எங்களை குட்டி பசங்க மாதிரி மிரட்டுறீங்களே, அதான் சிரிச்சேன்...”