மெல்ல மெல்ல அந்த கம்பெனி மீதிருந்த ஈடுபாட்டை குறைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்... கம்பெனியை விற்பதாக முடிவு செய்த போதே அவள் அதை செய்திருக்க வேண்டும்...! ஏதோ இப்போதாவது அவளுக்கு அறிவு வந்ததே...
மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால், அவள் செய்ய கூடியது எதுவுமில்லையே...! எல்லாமே அவளின் கையை மீறி சென்றிருந்தது...!
மிதரன் அவளிடம் ருத்ராமூர்த்தியாக நடந்துக் கொண்டாலும், கம்பெனியை வழி நடத்துவதில் சிறப்பாக செய்வதாக தான் அவளுக்கு தோன்றியது.
இப்படி ஒருவனை அவளுக்கு முன்பே தெரிந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது...
ஆனால் தெரிந்திருந்தாலும் அவன் அவளுக்கு உதவுபவனாகவும் இருக்க வேண்டுமே! இந்த மித்ரன் எந்த ஜென்மத்திலும் அவளுக்காக சின்ன உதவியை கூட செய்யக் கூடியவனல்ல...!
பெருமூச்சுடன் நடந்த சரண்யா, மெல்ல தலையை சிலுப்பிக் கொண்டு நடைமுறைக்கு வந்தாள்.
அவள் மலையென நம்பி இருந்த மைத்ரேயியிடம் இருந்து பதில் எதுவும் வராதது அவளுக்கு கவலையை கொடுத்திருந்தது.
ஒரே ஒரு நாள் தானே ஆகி இருக்கிறது... என மனதை சமாதானப் படுத்த முயன்றாலும் அவளால் முடியவில்லை...
ஒருவேளை மைத்ரேயியால் அவளுக்கு வேலை தர முடியவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்றும் அவளுக்கு குழப்பமாக இருந்தது.
யோசனையுடனே நடந்தவளின் கண்ணில் மளிகை கடை பட்டது. நிஷாவிற்கு பிஸ்கட் வாங்கலாம் என முடிவு செய்து கடைக்கு சென்றாள்.