Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 20 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
புரியாத வயது என்பதால் ‘அம்மா வேணும்’ என அழுது, அடம் பிடித்த ரேஷ்மியை தேற்ற கவிதா, பூங்கோதை எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் ரேஷ்மி அவர்களின் பேச்சுக்களை கேட்பதாக இல்லை. அழுது அழுது அவளின் தொண்டையே கட்டி போயிருந்தது.
ரோஷினி எப்போதும் போல நடப்பவற்றை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் விமலை திருமணம் செய்து இந்த வீட்டிற்கு வந்த நாள் முதலே இப்படி தான். கணவன் ஒருவனை தவிர மற்றவர்கள் யாரிடமும் அவளுக்கு நெருங்கிய பழக்கமில்லை. கவிதாவும் சரி, பூங்கோதையும் சரி அவளை சுமித்ராவுடன் ஒப்பிட்டு பேசி வம்புக்கு இழுத்திருக்கிறார்களே தவிர அன்புடனோ, பாசத்துடனோ எப்போதும் பேசியதில்லை. இதனாலேயே ரோஷனிக்கும் அவர்கள் இருவர் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லை. அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அவளும் பதிலுக்கு நூறு வார்த்தை சொல்வாள்!
ஆனால், இப்போது சுமித்ராவின் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கவிதாவும், பூங்கோதையும் அழுவதும், புலம்புவதுமாக இருக்க, அது ரோஷனியையும் அசைத்தது! அதை எல்லாம் விட சுமித்ராவின் திடீர் மறைவு அவளை ரொம்பவே அதிகமாக தாக்கப் படுத்தி இருந்தது.
அவளை போல அல்லாமல், சுமித்ராவிற்கு பூங்கோதை, கவிதா இருவருடனுமே நல்ல உறவு இருந்தது. மாமியாருடன் சண்டை போடும் நேரங்களில் ரோஷனி சுமித்ராவை பற்றி ஏதாவது சொன்னாலும் கூட, சுமித்ரா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டது இல்லை. எப்போதும் வாக்குவாதங்களை முடிக்க ஏதாவது சமாதானம் சொல்வதும், பிறகு ரோஷனியை பார்க்கும் போது ஒன்றுமே நடக்காதது போல சாதாரணமாக நட்புடன் பேசுவதும் சுமித்ராவின் பாங்கு.
அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ரோஷனியின் மனம் சுடும்! அவள் ஒன்றும் கெட்டவளில்லையே! தேவை இல்லாமல் சண்டைக்கு இழுக்கும் மாமியார், நாத்தனாருடன் மோதுவது வேறு, எப்போதும் நட்புடன் இருக்கும் சுமித்ராவை பற்றி பேசுவது வேறு!
சுமித்ராவின் இந்த திடீர் மறைவை ரோஷனியாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! எப்போதுமே ஒரு புன்னகை உதட்டில் மின்ன இருக்கும் சுமித்ராவை பார்த்தாலே மனசுக்குள் ஒரு நல்ல உணர்வு வரும்! எந்த மனநிலையில் இருந்தாலும் ஒரு அமைதி மனதுக்குள் வரும்!