அவளையா இப்படி ஒரு நோய் எடுத்துக் கொள்ள வேண்டும்!
நினைக்கும் போதே ரோஷனிக்கு தொண்டையை அடைத்தது!
“அம்மா வேணும்!!!” சத்தமாக அழுத ரேஷ்மியின் குரலில் சிந்தனையில் இருந்து வெளியே வந்து குழந்தையை பார்த்தாள் ரோஷனி.
பூங்கோதை ரேஷ்மியின் கண்ணில் இருந்து வழிந்துக் கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே ஆறுதலாக என்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள்! அவளின் கையை தள்ளி விட்டு, விட்டு ரேஷ்மி அழுதுக் கொண்டிருந்தாள்!
சுமித்ராவின் இறுதி ஊர்வலத்திற்கு சென்று வந்து அறைக்குள் புகுந்துக் கொண்டிருந்த கமல் வெளியே வரவே இல்லை என்பது மனதில் உரைக்க, மெல்ல நடந்து ரேஷ்மியின் பக்கத்தில் சென்றாள் ரோஷனி.
ரோஷனி இது நாள் வரை ரேஷ்மியை தனியாக செல்லம் கொஞ்சியதில்லை. பக்கத்தில் வந்தால் பேசுவாள் அவ்வளவு தான்... ஆனால், இப்போது அழுது அடம் பிடித்துக் கொண்டிருந்த குழந்தையை அழட்டும் என விட்டு விட அவளுக்கு மனம் வரவில்லை.
“ரேஷ்மி! என் கிட்ட வாடா!” ரோஷனி மெல்ல சொல்லி கையை நீட்ட ரேஷ்மியின் கண் முன் ரோஷனியின் சேலை பட்டது. அதை கையில் பிடித்து பார்த்ததும் என்ன நினைத்தாளோ, குழந்தை ரோஷனியிடம் வர யத்தனித்தாள்!
பூங்கோதை ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாக பார்க்க, ரோஷனி குழந்தையை கையில் தூக்கிக் கொண்டாள்.
அழுகை நின்றிருந்தாலும் விம்மலுடன் ரோஷனியின் தோளில் தலை வைத்துக் கொண்டாள் ரேஷ்மி!
பூங்கோதையும், கவிதாவும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரோஷனிக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது!