ஆனாலும், “சும்மா பொய் சொல்லாதே அஜய்...! இது வரைக்கும் எத்தனை நாள் லீவ் போட்டு இருக்கன்னு எனக்கு கொஞ்சம் சொல்லு,” என்றாள் அதே தோரணையில்!
அதுவரை அமைதியாக இருந்த விஜய், “அம்மா, அண்ணா கல்யாணத்துக்கு அப்புறம் எடுக்க லீவ் எல்லாத்தையும் சேர்த்து வச்சிருக்கான்னு நினைக்கிறேன்,” என்றான் கிண்டலாக!
“டேய் விஜய், வாயை மூடிட்டு சாப்பிட்டுட்டு ஆஃபிஸுக்கு கிளம்பு... அம்மா கிட்ட இப்படி பத்தி வைக்குற வேலை எல்லாம் செய்யாதே,” என்று சீறினான் அஜய்!
அஜயின் கோபத்தை கண்டுக்கொள்ளாமல், “அதெப்படிண்ணா வாயை மூடிட்டு சாப்பிடுறது???” என சீரியஸாக வினவினான் விஜய்!
“டேய்ய்ய்ய்ய்...” என அஜய் பல்லை கடிக்கவும்...
அஜயின் கோபத்தை பார்த்து சாரதாவும், விஜயும் வாய் விட்டு சிரித்தார்கள்.
“இப்போ என்ன சொல்றீங்கம்மா? மத்தியானம் ஒரு மணிக்கு நான் உங்களை வந்து பிக்கப் செய்யனும், அதானே?” என எரிச்சலுடன் வினவினான் அஜய்!
“ஆமாம் அஜய்! டைமுக்கு ஏர்போர்ட் போகனும். வரது சின்ன பொண்ணு...”
“சின்ன பொண்ணுன்னா என்ன, அஞ்சு வயசுப் பொண்ணா???” என விஜய் நடுவே கேட்கவும்,
“விஜய் நடுல பேசாதே...” என இளைய மகனை தடுத்த சாரதா, மூத்தவனிடம், “இவளுக்கு இருபத்தி மூணு, நாலு வயசு இருக்கும். ஆனா முதல் முறையா சென்னைக்கு வரா. அவளை பத்திரமா வீட்டுக்கு அழைச்சுட்டு வர பொறுப்பு நமக்கு இருக்கு,” என்றாள்.
“ப்ச்... சித்தி பேசாம இந்த பொண்ணை அவங்களே நம்ம வீட்டுக்கு வந்து விட்டுட்டு போயிருந்திருக்கலாம்,” என இப்போதும் அலுத்துக் கொண்டான் அஜய்!