Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 22 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“குழந்தைக்கு என்ன பேர் வைக்க போறீங்க???” பார்வதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மனைவியை பார்த்தான் ராகுல்!
“ராகவின்னு வைக்கலாமா அத்தை??” என்றாள் ஹேமா மெல்லியக் குரலில்!
“ராகவி! நல்லா தான் இருக்கு! அதையே வைங்க,” என்றாள் பார்வதி.
பார்வதி சொன்னதை ஆமோதித்து புன்னகை செய்தாலும் ஹேமாவின் தொண்டை வரை சோகம் நிறைந்திருந்தது! இது சுமித்ரா அவளின் குழந்தைக்காக தேர்ந்தெடுத்த பெயர்! அவளுக்குள் உருவாகி இருக்கும் குழந்தை பற்றி சொன்னதுமே விளையாட்டாக சுமித்ரா சொன்ன பெயர் அது!
“பையன்னா ராகவ், பொண்ணுனா ராகவி! எப்படி இருக்கு? சூப்பரா இருக்கா???”
சுமித்ரா மலர்ந்த விழிகளும், உதட்டில் சிரிப்புமாக சொன்னது இப்போதும் ஹேமாவிற்கு நினைவில் இருந்தது! அந்த குழந்தை பிறக்கும் போது சுமித்ரா உயிருடன் இருக்க மாட்டாள் என்று அவள் நினைத்ததே இல்லை!
ஹேமாவையும் மீறி ஒரு பெருமூச்சு வெளியானது! அதற்கு பிறகு மனதை மறைத்து கணவனிடமும், மாமியாரிடமும் சகஜமாக பேசினாலும் ஹேமாவின் உள் மனம் சுமித்ராவையே சுற்றி வந்துக் கொண்டிருந்தது!
சுமி மட்டும் இருந்திருந்தால்...
தோழியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு சுமித்ரா அவளிடம் கடைசியாக கேட்ட உதவியும் நினைவுக்கு வந்தது!
ரேஷ்மிக்காகவே ரோஷனியிடம் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாள். நேரம் கிடைக்கும் போது பொது படையாக பேசி ரேஷ்மி பற்றியும் அவளிடம் விசாரிப்பாள்... இதுவரையில் ரோஷனியிடம் அவளால் எந்த குறையையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை!