Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 15 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சேகர் கவலையுடன் டிரைவரை பார்க்க, அவனும் கவலையுடன் நின்றான்...
“நாம சொன்னா கேட்க மாட்டார்... நீ அவர் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கோ,” என்றார் சேகர்.
டிரைவருக்கும் அவர் சொன்னதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பது புரிய, காரின் டிரைவர் சீட்டிற்கு பக்கத்தில் இருந்த சீட்டில் அமர்ந்தான்.
மித்ரன் காரை கிளப்பவும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் டிரைவர்! மித்ரன் அவ்வப்போது வழி கேட்கவும், பாதுகாப்பிற்காக மெயின் ரோடுகளில் போகாமல் கிளை சாலைகளில் செல்வதுப் போலவே வழி சொன்னான்...
திடீரென ஒரு சாலையில் சிகப்பு விளக்கை காண்பித்து காரை நிறுத்துமாறு சைகை செய்தார் ஒரு போலீஸ் கான்ஸ்டபில்...
“மித்ரன் சார், போலீஸ்... நிறுத்தி மாட்டினீங்கன்னா கஷ்டம்... நிறுத்தாம போகலாமா?” என்று பதற்றத்துடன் கேட்டான் டிரைவர்.
“நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறது,” என்ற மித்ரன், காரை வேண்டுமென்றே அந்த கான்ஸ்டபிளின் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தினான்.
“ரூட்டின் செக் தான்... லைசன்ஸ் வச்சிருக்கீங்களா?” என்று கேட்டபடி மித்ரனின் அருகே வந்த கான்ஸ்டபில், மது வாடை உணர்ந்து, “குடிச்சிட்டா வண்டி ஓட்டுற?” என்றார்.
“என் வண்டி நான் ஓட்டுவேன்... உனக்கு என்ன வந்தது? உனக்கு வேண்டியது ஆயிரமா, ரெண்டாயிரமா சொல்லு... தூக்கி போட்டுட்டு போறேன்... உங்களை பத்தி தெரியாது,” என்றான் மித்ரன் ஏளனமாக!
“டேய்... ட்ரின்க் அண்ட் டிரைவ் செய்ததும் இல்லாம, என் கிட்டேயே லஞ்சம் அது இதுன்னா பேசுற... இறங்குடா... காரை விட்டு இறங்கு...”