அதற்குள் காரில் இருந்து இறங்கி கான்ஸ்டபிளின் அருகே வந்த டிரைவர், “சார், சாரி சார்... அவர் புரியாம பேசுறார்... வெளி நாட்டுல இருந்து வந்திருக்கார்,” என்றான் கெஞ்சலாக.
“எங்கே இருந்து வந்தா என்ன? தப்பு தப்பு தான்...”
“பெரிய இடத்து பையன் சார்....”
“அதுக்காக... என்ன வேணா பேசுவானா? இறங்க சொல்லு அவனை... இரண்டு நாள் ஜெயில்ல இருக்கட்டும்...”
ஐஐடி’யில் அன்று நடந்த தொழில் நுட்பம் தொடர்பான கூட்டத்தில் தான் கற்றுக் கொண்டதை பற்றி யோசித்தபடி வீடு நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த சரண்யா, கான்ஸ்டபில் கிருஷ்ணனுடன் காரில் இருந்த படி வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்த மித்ரனை கண்டு திகைத்து நின்றாள்.
என்னவோ விஷயம் என்பது சரண்யாவிற்கு புரிந்தது. ஆனாலும் என்ன ஏது என்று உடனே அவளுக்கு புரியவில்லை.
கான்ஸ்டபிளுடன் மித்ரன் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்த இடத்தை தாண்டி தான் அவள் போக வேண்டும் என்பதால் யோசித்தப்படியே நடந்தாள்.
பக்கத்தில் செல்ல செல்ல இருவரின் பேச்சும் அவளுக்கு புரிந்தது...
குடித்து விட்டு கார் ஒட்டியதற்காக மித்ரன் மீது கேஸ் ரெஜிஸ்டர் செய்ய போவதாக கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்க, மித்ரன் அவன் இருந்த நிலையில் புரியாமல் ஏதேதோ குளறியபடி உளறிக் கொண்டிருந்தான்.
நடு நடுவே மித்ரனின் டிரைவர் கிருஷ்ணனை சமாதானப் படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்! ஆனால் கிருஷ்ணன் டிரைவரின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல் மித்ரனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்வதில் குறியாக இருந்தார்.