மித்ரன் ஜெயில் கம்பிகளின் பின் இருப்பதாக கண்ணில் தெரிந்த கற்பனை சரண்யாவிற்கு சந்தோஷத்தையே கொடுத்தது.
நன்றாக வேண்டும் அவனுக்கு... படட்டும்...
ஆஃபிசில் அத்தனை பேர் முன்பு அவளிடம் எப்படி எல்லாம் பேசி இருக்கிறான்... அதுவும் ஒன்றிரண்டு தடவையா கத்தினான்...
அந்த எண்ண ஓட்டத்தின் நடுவே, சட்டென, மித்ரன் மைத்ரேயியின் அண்ணன் என்பது சரண்யாவிற்கு ஞாபகம் வந்தது. கூடவே ஜி.எஸ்சை அவன் திறம் பட நடத்துவதாக சேகர் சொன்னதும் நினைவுக்கு வந்தது...
ஒரு முடிவுக்கு வந்தவளாய், காரின் பக்கத்தில் வந்ததும், கிருஷ்ணனிடம், “என்ன அண்ணா ஆச்சு..?” என்று விசாரித்தாள்
“குடிச்சுட்டு கன்னாபின்னான்னு காரை ஓட்டிட்டு, கேட்டா கேவலமா பேசுறான்... பெரிய இவன் மாதிரி காசை வேற எடுத்து கொடுக்குறான்... இவன் யாரா இருந்தா என்ன, எல்லோரும் இவனுக்கு கூஜா தூக்கனுமா? பிடிச்சு இரண்டு நாள் செல் உள்ள போட்டா, இவன் திமிர் எல்லாம் சரியா போயிடும்,” என்றார் கிருஷ்ணன் கோபத்துடன்!
சரண்யா விரும்பியதும் அதே தான்... ஆனாலும் மைத்ரேயிக்காகவும், கோபியின் கம்பெனிக்காகவும்,
“இவர் எனக்கு தெரிஞ்சவர் தான்ணா... ரொம்ப நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்... இந்த ஒரு டைம் மன்னிச்சு விட்ருங்களேன்... நான் அவர் வீட்டுல சொல்லி இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்க சொல்றேன்,” என்றாள் தண்மையாக.
“என்னம்மா, நீ போய் இந்த மாதிரி ஒருத்தனுக்கு சப்போர்ட் செய்ற....?”