“இவர் என் முதலாளியோட அண்ணன்... அவங்க ரொம்ப நல்ல மாதிரி... எனக்கு நிறைய ஹெல்ப் செய்திருக்காங்க... இவர் மேல கேஸ் எல்லாம் போட்டீங்கன்னா அவங்க ரொம்ப வருத்தப் படுவாங்க...”
“ஹ்ம்ம்ம்ம்... சரி... சரி... உனக்காக இந்த ஒரு தடவை விடுறேன்... ஆனால் அவன் வீட்டுல இருக்க பெரியவங்க யாரையாவது பேசி, கண்டிச்சு வைக்க சொல்லு...”
“சரிண்ணா...”
மித்ரன் அப்போதும் எதுவோ பிதற்றியப் படி இருந்தான்... அதை கவனித்த கிருஷ்ணன், “அவனால நிக்க கூட முடியலை... இங்கே இருந்து எப்படி வீடு போவான்...?” என்றார் எரிச்சலுடன்.
அதுவரை அவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த டிரைவர், “நான் காரை ஓட்டிட்டு போறேன் சார்,” என்றான்.
“அதை முன்னாடியே செய்திருக்கலாமே...! சரி, சரி சரண்யா நல்ல பொண்ணு, இவ்வளவு சொல்றாளேன்னு விடுறேன்... இன்னொரு தடவை இந்த மாதிரி இந்த பக்கம் பார்த்தேன்... இரண்டு பேரும் நேரா ஜெயில்ல தான் போய் இருப்பீங்க...”
“இல்லை சார்... அப்படி எல்லாம் நடக்காது,” என்று கான்ஸ்டபிளிடம் சொன்ன டிரைவர், சரண்யாவிடம், “தேங்க் யூ மேடம்...” என்று சொல்லிவிட்டு மித்ரனை பொறுமையாக, மெதுவாக பின் இருக்கையில் உட்கார செய்தான். அதற்கு மேல் தாமதிக்காமல் உடனேயே காரை கிளப்பி சென்றான்.
✽✽✽
மித்ரன் காலையில் கண் விழித்தப் போது தலை மீது பாறாங்கல்லை தூக்கி சுமப்பதைப் போல கனமாக இருந்தது...