விசில் அடித்தப் படி கண்ணாடியைப் பார்த்து தலை பின்னிக் கொண்டிருந்தாள் ரேஷ்மி.
“ரேஷ்மி... ரேஷ்மி கண்ணா... டைம் ஆகுது சீக்கிரம் சாப்பிட வா...” ரோஷ்னியின் குரல் அவளை அழைத்தது.
“வரேன் சித்தி,” என்று சத்தமாக பதில் கொடுத்தவள், சொன்னதை செயல்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல் பொறுமையாக தன் கூந்தலை பின்னுவதை தொடர்ந்தாள்.
ஒரு நிமிடம் சென்ற பின் ரோஷ்னியே கோபத்துடன் அவள் இருந்த அறையின் வாசலில் வந்து நின்றாள்... ரேஷ்மி அப்போதும் அவளை கவனிக்கவில்லை! மும்முரமாக கூந்தலை சரி செய்வதில் ஈடுப்பட்டிருந்தாள்.
கோபம் இருந்தாலும் ரோஷனியின் கண்கள் பாசத்துடன் ரேஷ்மி மீது பதிந்தது! ரேஷ்மியிடம் எப்போதுமே இருக்கும் துள்ளல் இப்போதும் தெரிந்தது. இளம்பெண்ணாக வளர்ந்திருந்தாலும் ரோஷனியின் கண்களுக்கு இன்னமும் குழந்தையாகவே தெரிந்தாள்...
“ரேஷ்மி....”
ரோஷனியின் பக்கம் திரும்பி பார்க்காமலே அவள் டிஃபனுடன் வந்திருப்பதை ஊகித்தவளாக, “ஆ... சித்தி...” என்றாள் ரேஷ்மி.
ரோஷ்னி முகத்தில் சின்னதாக இருந்த கோபமும் காணாமல் போக, “உனக்கு நான் தான் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன்னு உன் பாட்டி சொல்றது தப்பே இல்லை போலிருக்கே,” என்றாள்.
சித்தி பக்கமாக திரும்பி, “என்னது பாட்டி உங்க கிட்ட இப்படிலாம் சொல்றாங்களா? சரியே இல்லை... என் பியூட்டிஃபுல் சித்தி கிட்ட இப்படி எல்லாம் சொல்ல அவங்களுக்கு எவ்வளவு இருக்கனும்...! அடி கொடுக்குறேன் பாருங்க,” என்றாள் ரேஷ்மி குறும்பு கொப்பளிக்க...
எப்போதும் போல அவளின் குறும்புத்தனத்தை ரசித்த படி, “அது என்னவோ எனக்கு தெரியாது...