✽✽✽
மித்ரன் அன்று ஜி.எஸ் வந்து சேர்ந்த போது நண்பகல் கடந்திருந்தது!
இப்போதும் சரண்யாவின் உதவி பற்றிய சிந்தனை அவனுள் இருந்தது...
அன்றைய வேலைகளை கவனிக்க தொடங்கினாலும், அவனின் மனதின் ஓரத்தில் என்ன என்று விளக்க முடியாத சலனம் போன்ற ஏதோ ஒன்று இருந்துக் கொண்டே இருந்தது...
முழு மனதுடன் வேலைகளை கவனிக்க முடியாமல் பார்வையை கம்ப்யூட்டர் திரையில் இருந்து திருப்பினான்...
கோர்வையாக இல்லாமல், குழம்பிய நிலையில், மனதில் வந்த ஏதேதோ சிந்தனைகளுடன், தன் சுழல் நாற்காலியை சுழற்றியபடி, இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் அந்த அறையின் கதவுக்கு பின்னால் இருந்த சின்ன அலமாரி பட்டது!
மித்ரனின் விழிகள் கேள்வியுடன் அதன் மேல் படர்ந்தது! அந்த அலமாரி நின்ற நிலையும், நிறமும் அது அதே இடத்தில் பல வருடங்களாக இருப்பதை அவனுக்கு உணர்த்தியது!
இதுவரை அவன் அதை கவனிக்கவே இல்லை!
ஜி.எஸ்’ஸை வாங்கிய நாள் முதலே இது தான் அவன் பயன்படுத்தும் அறை என்றாலும், அவனின் பின்னே இருந்த சுவருடன் சேர்ந்து கதவுடன் ஒட்டி இருந்ததால் இவ்வளவு நாளாக அதை கவனிக்காமல் விட்டிருக்கிறான்...
என்ன அது என்ற ஆர்வம் தானாக தோன்ற, எழுந்து சென்று அந்த அலமாரியின் கதவை திறக்க முயன்றான் மித்ரன்! அந்த மர அலமாரியின் கதவுகள் பூட்டப் பட்டிருந்தது...
“கந்தசாமி...” சத்தமாக அவன் அழைக்கவும், உடனடியாக, ஓடி வராத குறையாக அவன் முன்