(Reading time: 24 - 48 minutes)

15. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியாவின் தாயோ என்ன நடக்குமோ என்று ராஜகோபலையே பார்த்துக் கொண்டிருக்க, இனியாவோ இளவரசனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை விட அவன் முகத்தில் அதிக உணர்ச்சிகள் தென் பட்டன. அதைக் கண்ட இனியா மனதை திடப் படுத்துவது போல் கண்களை மூடி திறந்து விட்டு தன் தந்தை முகத்தை பார்த்தாள்.

ராஜகோபாலோ இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார். தன் மனைவியின் முகத்தை பார்த்தார். லக்ஷ்மியின் முகத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் குழப்பமே அவருக்கு தென்பட்டது.

திரும்பி தன் மகளை பார்த்தார். கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்க தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளை பார்த்தவுடன் “ஆண்டவா எந்த சண்டையும் நேராமல் இந்த பிரச்சனையை முடித்து விடு” என்று வேண்டிக் கொண்டார்.

பின்பு திரும்பு தன் தங்கையை ஒரு முடிவுடன் பார்த்தார். செல்வியோ தீர்க்கமாக தன் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்த பேச்சு வேண்டாம் செல்வி. இது சரி வராது”

“ஏன் சரி வராது. இல்ல ஏன் சரி வராதுன்னு கேட்கறேன். என் பையனுக்கு உன் பொண்ணை கட்டற முறை இல்லையா. இல்ல உன் அந்தஸ்துக்கு நான் ஏத்தவ இல்லன்னு சொல்றியா. அதுவும் இல்லாம என் மகன் தான் படிக்காம தற்குறியா திரியறானா, எனக்கு இதுக்கு சரியான பதில் மட்டும் சொல்லு. அப்படி நீ சொன்னா நான் அடுத்து எதுவுமே கேட்காம போய்டறேன்”

“நீ சொன்ன எதுவுமே இதுக்கு காரணம் இல்லை. முதல்ல இங்க சண்டை போடற மாதிரி பேசாத. என் பொண்ணை நான் தொலைவா கட்டி குடுக்கற எண்ணத்துல இல்லை. என் பொண்ணை இங்கேயே தான் கல்யாணம் பண்ணிக் குடுப்பேன். ஏற்கனவே ஒரு இடத்துல பேசி கூட வச்சிட்டேன். இன்னும் என் பொண்ணு ஒரு முடிவு சொல்லாததால தான் கல்யாணம் இன்னும் நடக்காம இருக்கு”

முதலில் ராஜகோபால் “இது சரி வராது” என்றவுடன் சந்தோசப் பட்டு அப்பாடா என்று நினைத்த இளவரசனும் இனியாவும் “ஏற்கனவே பேசி வச்சிருக்கேன்” என்பதை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னண்ணே சொல்ற நீ, நம்ம ஊரு ஒரு தொலைவா. உன்னை என்ன வேற தேசத்துலையா உன் பொண்ணை கட்டிக் குடுக்க சொன்னேன். நம்ம ஊரை போய் ஒரு தொலைவுன்னு சொல்ற. நீயெல்லாம் அங்கிருந்து தானே வந்திருக்க.”

“என் பையனுக்கு கட்டிக் குடுக்க மாட்டேன்னு வேணும்னா நேரடியா சொல்ல வேண்டியது தானே, அதுக்கு ஏன் சொல்லையா ஒரு காரணம் சொல்ற. உன் பெரிய பொண்ணை தான் சொந்தத்துல பசங்க இருக்கும் போதே வேற எங்கேயோ குடுத்துட்ட. இப்ப ரெண்டாவது பொண்ணையும் எங்கேயோ குடுக்கறேன்னு சொல்ற. உனக்கு நம்ம சொந்தம் விட்டு போக கூடாதுன்னு எண்ணமே இல்லையா”

“ஏன் செல்வி எனக்கு பொண்ணே இல்லைன்னு வச்சிக்க. அப்ப என்ன பண்ணுவ. அதுக்காக நம்ம சொந்தம் விட்டு போயிடுமா என்ன. இப்ப எனக்கு பொண்ணு இருந்து உனக்கு குடுக்க முடியாத நிலைமை. அதுக்கு என்ன பண்ண சொல்ற. எதுக்கு இப்படி எல்லாம் பேசுற.”

“இது நீ பேசலண்ணே. நீ யார் சொல்லி பேசறன்னு எனக்கா தெரியாது. இது சரியில்லண்ணே. உனக்கு தங்கச்சி மேல எதாச்சும் பாசம் இருக்கா. எனக்கும் சுதாக்கும் பையன் இருந்து உனக்கு பொண்ணு பிறக்கும் போது நாங்க என்ன சொன்னோம். எங்க பையனுக்கு குடுத்துடுண்ணேன்னு சொன்னோமா இல்லையா”

“இது என்ன செல்வி நீ இப்படி பேசிட்டு இருக்க. அப்பவே நானும் குழந்தைகளை வச்சி நாமா ஏதும் பேசக் கூடாது. அவங்க பெரியவங்களாகி என்ன வேணும்னா முடிவு எடுப்பாங்கன்னு சொன்னேன் இல்ல. அதுவும் இல்லாம நீங்க ஜோதி பிறக்கும் போது தானே அப்படி கேட்டீங்க. இப்ப இனியா கல்யாணத்துல ஏன் இந்த பேச்சு”

“அது என்னண்ணே அப்படி சொல்லிட்ட. ஜோதி பிறந்தப்ப தான் அப்படி சொன்னோம். ஆனா நீ ஜோதிக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணி சொன்ன உடனே நாங்க ஏதும் பிரச்சனை பண்ணோமா. இல்லையே. நாம முதல்ல கேட்காதது தப்புன்னு தானே நாங்க ஏதும் சொல்லலை. இப்ப ஏதோ பேசி வச்சிருக்கேன். உன் பொண்ணு தான் முடிவு சொல்லனும்ன்னு தானே சொல்ற. உன் பொண்ணுக்கு இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டு என் மகனுக்கு உன் பொண்ணை குடு. ஏன்ணே உன் பொண்ணை நான் நல்லா பார்த்துப்பேனா இல்ல வெளியில குடுத்தா பார்த்துப்பாங்களா சொல்லு”

இனி இவ கிட்ட பேச முடியாது என்று நினைத்தவராக “வேண்டாம். இப்போதைக்கு இதை பேச வேண்டாம் செல்வி. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்.” என்றவாறு தங்கையின் பதிலை எதிர்பாராதவாறு எழுந்து விட்டார்.

செல்வி அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

ராஜகோபால் இளவரசனிடம் “நீ வாப்பா. நாம கிளம்பலாம். இல்லைன்னா அந்த ஆளை அப்புறம் பிடிக்க முடியாது, இரு. நான் போய் கார் சாவி எடுத்துட்டு வரேன்” என்றார்.

“என் கார்லயே போய்டலாம் மாமா” என்றான்.

(இவன் புரிஞ்சிக்க மாட்றானே என்று எண்ணியவாறே) ஓ சரி சரி. இரு என் கண்ணாடியை எடுத்துட்டு வந்துடறேன்” என்றார்.

தன் அறைக்கு நுழைந்த ராஜகோபால் “லக்ஷ்மி இங்க வச்ச கண்ணாடி எங்கே” என்று குரல் குடுத்தார்.

அங்கு விரைந்த லக்ஷ்மி கண்ணாடி அதனிடத்திலே இருப்பதை கண்டு “என்னங்க இங்க தானே இருக்கு” என்றார்.

ராஜகோபாலோ “அதுக்கு உன்னை கூப்பிடலை. நான் போனதுக்கு அப்புறம் செல்வி என்ன பேசினாலும் நீ எதுவும் வாயை விட்டுடாத. நான் அவர் கிட்ட சொல்றேன். அப்படி இப்படின்னு எதுவும் சொல்லிடாத, அவ உன்னை அப்படி என் கிட்ட சொல்ல சொன்னாலும், நான் சொன்னா அவர் எங்கே கேட்கறாரு. இப்ப அவர் சொன்ன சம்மந்தத்துக்கே நான் ஏதோ சொல்ல போய் இதுல நீ ஏதும் பேசாதன்னு சொல்லிட்டாருன்னு சொல்லு. சரியா” என்று விட்டு சென்றார்.

லக்ஷ்மிக்கோ ஒரே ஆச்சரியமாக இருந்தது. தன் கணவனுக்கு அவர் தங்கைகள் என்றால் மிகவும் பிரியம் என்று அவருக்கு தெரியும். இடையில் அவர் சிறிது மாறியிருந்தாலும் இந்த அளவுக்கு மாற்றத்தை லக்ஷ்மி எதிர்பார்க்கவில்லை.

இளவரசன் இனியாவிற்கு நம்பிக்கை கொடுப்பதை போல் தன் கண்களை மூடி திறந்து “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கண்ணாலே கூறிக் கொண்டிருந்தான்..

இனியாவும் “சரி” என்பதை போல் தலையசைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.