(Reading time: 43 - 86 minutes)

19. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

 

போனை எடுத்த தன்ராஜ், “பூமா நானே நினச்சேன். நீயே கூப்பிட்ட. சந்தியாவுக்கு பாண்டியனை நாளைக்கு காலையில் பத்து மணி வாக்குல நிச்சயம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். உள்ளூர் சொந்தக்காரவங்க, பக்கத்து வீட்டுக்காரவங்களை மட்டும் கூப்பிட்டு சிம்பிளா வீட்டிலே வச்சிடலாம்ன்னு பாத்தேன். திடீர்ன்னு முடிவு பண்ணதுனால மண்டபம் ரெடி பண்ண முடியலை”, மட மடவென சொல்லி முடித்தார்.

 

“அப்பா உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டா?”

 

“ம்...சொல்லு”

 

"முந்தின நாள் கேட்டா மண்டபம் கூட கிடைக்காத இந்த காலத்தில, பெத்த பொண்ணை மட்டும் எப்படிப்பா பொண்ணு பாக்கிறதுனாலும் சரி, நிச்சயம் பண்றதுனாலும் சரி எந்த நேரம் கேட்டாலும் ரெடியா இருக்கணும்னு எதிர்பாக்கிறீங்க? உங்ககிட்ட எத்தனை தடவை அவகிட்ட பேச சொன்னேன். கேட்டீங்களா இல்லையா?” கோபமாக கேட்டாள்.

 

“கேக்கணும்னு தான் இருந்தேன். அதுக்குள்ள வடிவு பட்டாளத்தோட நிச்சயம் பண்ணனும்னு வந்து இறங்கிட்டாளே! சரி, சட்டு புட்டுன்னு நிச்சயம் பண்ணிட்டா நாமளும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு அதுலே வேலையா இருட்டேன். இப்போவே சந்தியாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டா போச்சு. ” என்றார் சர்வ சாதாரணமாக.

 

“ம்...இப்படி எல்லா ஏற்பாடையும் பண்ணி முடிச்சிட்டு போய் கேட்டா பிடிக்குதோ பிடிக்கலையோ வேற வழியில்லாம தலையாட்ட தான் செய்வா. வாய் ஓயாம பேசி, வீடை ரெண்டாகிட்டு சுத்திகிட்டு இருக்கிறவ இந்த விஷயம் கேள்விபட்டதுல இருந்து ரூம்க்குள்ள முடங்கி கிடக்கறது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ” என பூமா கேட்கும் போதே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. “அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு?” என கேட்டுக் கொண்டே அழுக, கர்பிணியாய் இருந்து அவள் அழுவதை தன்ராஜால் தாங்க முடியவில்லை. பாசத்தை வெளிக்காட்ட தெரியாத அவருக்கு சுள்ளென கோபம் தான் வந்தது.

 

“இப்போ என்ன குடியா முழுகிடுச்சு இப்படி அழுகுற. பெரியவங்க எங்களுக்கு தெரியாத விஷயமா உனக்கு தெரிய போது. உங்ககிட்ட எல்லாம் இப்படி கேட்டுகிட்டா கல்யாணத்தை பண்ணி வைச்சேன். நீங்க எல்லாரும் நல்லாதான இருக்கீங்க. அதே மாதிரி அவளும் நல்லா தான் இருப்பா.” என்று கோபத்தில் திட்டி விட்டு, பின் ஒரு நொடி தாமதத்திற்கு பின், மகள் அழுவதை பார்த்து இளகியவர், “வாயும் வயுருமா இருக்க. இந்த நேரத்தில கண்டதையும் யோசிச்சுகிட்டு இருக்க. நல்லதே நினை. நல்லது தான் நடக்கும். நீ மொத அழுகை நிப்பாட்டு. மாப்ளை இருக்காங்களா? அவர் இருந்தா கொடு சந்தியாவுக்கு நிச்சயம் பண்றோம்ன்னு ஒரு வார்த்தை சொல்லிடுறேன்” என தணிந்த குரலில் குணாவிடம் கொடுக்க சொன்னார்.

 

“அப்பா அவர் ஆபிஸ் போயிட்டாரு. அப்பா ப்ளீஸ்….இந்த விஷயத்தையாவது கேளுங்க. சின்ன வயசுல பாண்டி மாமா என்னை காப்பாத்துறப்போ நடந்ததை தப்பான விஷயமா அவ அடி மனசுல பதிஞ்சு கிடக்கு. அதை சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம உள்ளுக்குள்ளே போட்டு புளுங்கிகிட்டு இருக்கா. இதை யார்கிட்டயும் வெளிப்படையா அவளால விவரிச்சு சொல்ல முடியலை. நீங்க பாண்டியனுக்கு கல்யாணம் பண்ண ஆசை படுறீங்க சரி தான். ஆனா வாழப்போறது அவ தான. நாளைக்கு அவளால மனசு ஒத்து வாழ முடியாட்டி நமக்கு தானப்பா சங்கடம். ப்ளீஸ்ப்பா கொஞ்சம் யோசிங்க ” என்று கெஞ்சினாள். கோபப்பட்டால் இறங்காத அப்பா கெஞ்சலிலாவது இறங்குவார் என முயற்சித்தாள்.

 

“ஹம்...ம்...சரி பாக்கலாம்” என ஒப்புக்கு சொல்வது போல சொல்லி போனை வைத்தார் தன்ராஜ். ஆனால் மனதுக்குள் முதல் முறையாக மகள் வாழ்க்கை பற்றி பயம் துளிர் விட்டது. அதுவும் அவள் அறையினுள் முடங்கி கிடக்கிறாள் என்பது அவருக்கும் கவலையளித்தது.

 

ந்தியாவை ஒரு நாளும் அவ்வாறு பார்த்தது இல்லை. அதுவும் வடிவுக்கரசியும், தண்டட்டி பாட்டியும் வந்து விட்டால் அவளுக்கு அல்வா சாப்பிடுவது போல. அவர்கள் லக்ஷ்மியை ஒரு வார்த்தை பேச விடாமல் கேடகமாக காப்பாள். இது ஓரளவிற்கு தன்ராஜிற்கு தெரியும் என்றாலும், சில சமயங்களில் கண்டித்து விட்டு பல சமயங்களில் கண்டும் காணாதும் இருந்து விடுவார்.

 

மாடியிலிருந்து தனது பூத உடலை அசைத்து அசைத்து மெதுவாக இறங்கி வருகையில் வரவேற்பறையில் நின்று கொண்டு தன்ராஜ் பேசுவதை, ஒற்றுக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் வடிவுக்கரசி. அவர் போனை வைத்ததும், கண்ணைக் கசக்கி கொண்டு வந்தவள், “அமேரிக்காகாரி தான போன் பண்ணது. எம்புள்ளைய வேண்டாம்ன்னு சொல்லிதுப்பாளே.” என ஏக்கத்துடன் கேட்க,

 

“அப்படியெல்லாம் இல்ல வடிவு” என தன்ராஜ் அவளை சமாளித்தார்.

 

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் பட்டிக்கட்டுக்காரின்னு என்னை வேண்டா விருந்தாளியா தேன் உன் புள்ளக எல்லாம் பாக்குதுக. எம்புருஷன் கெதியா இருந்திருந்தா இப்படியெல்லாம் அசிங்கப் பட்டு சம்மந்தம் கலக்கவிட்டுருப்பாகளா....என் ராசா….என்னை விட்டுட்டு எங்கய்யா போன? போறாப்போ என்னையும் கூட்டுட்டு போயிருக்கலாலயா….என்னை நட்டாத்தில விட்டுட்டு போயிட்டீயயா…. நாயா பேயா….. பாடாபட்டு, காட்டுலயும் மேட்டுலயும் அலைஞ்சி புள்ளைய வளத்து ஆளாக்கி என்ன ப்ரோசனம்….” என்று புலம்பிவிட்டு ஒரு பெருமூச்செறிந்தாள்.

 

பின், “அவனுக்கு ஒரு கண்ணாலம் காச்சி பண்ணி பாக்க விடமாட்டிங்கிறாளுகளே என் மதினியும் புள்ளகளும்” என கண்ணீர் செரிந்து கொண்டே புடவை முந்தானையில் மூக்கை சீரிய படி .

 

தங்கை அழுகவும் அவளுக்கு பாவம் பார்த்தவர், “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ புலம்பாம தூங்கு. ” என்று அந்த நேரத்திற்கு வடிவுக்கரசியை அமைதியாக்கினார் தன்ராஜ். மேலே சந்தியாவை போய் பார்த்து பேச எண்ணியவர் வடிவுக்கரசியின் தொல்லையால் அந்த எண்ணத்தை அடுத்த நாள் காலைக்கு ஒத்தி போட்டார்.

 

ந்தியா சஷ்டி கவசத்தை படித்து விட்டு மனம் லேசாக படுக்க சென்றாள். ஆனாலும் மனம் முழுக்க கார்த்திக் நிறைந்திருந்தான். அவனை நினைக்கும் போதெல்லாம் அவளையும் அறியாமல் கண் கலங்கியது. தாவணி இழந்து அவன் முன் கூனி குறுகி நின்றதை நினைக்கும் போது விழியினோரம் வழிந்த கண்ணீர் வேகமாக ஊர்ந்து தலையணையை நனைத்தது....அவன் வேண்டுமென்றே செய்யவில்லை என் யூகித்தாலும் மனம் பாரமாகவே இருந்தது. அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது...அவன் பாராமுகமாக இருந்தானே அது வலித்தது. அவனை ஓடிப் போய் கட்டி பிடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல இருந்தது. வலியும் நீதானோ….அதற்கு மருந்தும் நீதானோ….இதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்கிறார்களோ? அவனை அழைத்தாள் பலமுறை ….மனதிற்குள் மந்திரம் போல…

 

சட்டென ஏதோ நினைவு வந்தவள் போல அவள் அறை கதவை பூட்டி விட்டு, கார்த்திக் போர்த்தி விட்ட டிஷர்ட்டை எடுத்தவள், கட்டிலில் கிடந்த தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் முதுகை சாய்த்து, காலை சுருக்கிய படி உட்கார்ந்து கொண்டு , காலின் முட்டி மீது அவன் டிஷர்ட்டை விரித்தாள். அதில் கொட்டை எழுத்தில் வரைபடம் போல எழுதப் பட்டிருந்த “After U ---> V” வாசகத்தை படித்து விட்டு “முருகா! இது உன் விளையாட்டா? “ என்று நினத்துக் கொண்டே, “கார்த்திக் ஐ ஹேட் யு” என்று சொல்லி அந்த டிஷர்ட்டை கட்டி கொண்டு வெகு நேரம் ஏங்கி ஏங்கி அழுதாள். பின் சற்று நேரத்தில் “உன்னை எப்படிடா வெறுக்க முடியும்? ஹேட் டு சே ஹேட் யு” என்று சொல்லி முத்தமிட்டு கொண்டே தான் அழுதாள்….அவஸ்தையினால் வந்த கண்ணீர்.

 

குடம் குடமாக அழுது தீர்த்தவளுக்கு கண்ணீர் ஊற அவகாசம் வேண்டும் என கண்கள் கதறுவது அவளுக்கு கேட்டு விட்டதோ? கண்ணீரை துடைத்து விட்டு, படுக்க தயாரானாள். தினமும் அவனை பாட சொல்லி தூங்குபவள் அன்று அவனை தேடவில்லை….மனம் நிறைய அவன் நிறைந்திருப்பதால் அவனை தேடவில்லையோ?

 

காதல் என்று அறிந்து, உணர்ந்து, கசிந்து உருகிய தினத்தை அவனுடைய நினைவுகளோடே கழிக்க விரும்பியவள் தலையணையை தன் மனம் கவர்ந்தவனாக உருவகப் படுத்திக் கொண்டாள். கார்த்திக் சொல்லி கொடுத்த “பில்லோ ஹக்”கிற்கு பழகியவள் தலையணையை எடுத்து அவன் டிஷர்ட்டுக்குள் திணித்து, டிஷர்ட்டை முகர்ந்து முத்தமிட்டு “கார்த்திக்...ஹக் மீ ப்ளீஸ்” என்று கொஞ்சலாக சொல்லிக் கட்டி அணைத்த படி,

 

“நீ செய்த சில்மிஷத்துக்கு தண்டனையா இன்னைக்கு நான் தான் பாடுவேன். பாடியே தீருவேன். இந்த பழனியப்பன் எங்கயும் ஓட முடியாத படி வள்ளிக்கண்ணு இறுக்கி கட்டிபிடிச்சுக்கிவா” என்று தலையணையை இறுக அணைத்துக் கொண்டு,

 

சினேகிதனே சினேகிதனே

ரகசிய சினேகிதனே

சின்ன சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சினேகிதனே…

இதே அழுத்தம் ….அழுத்தம்

இதே அணைப்பு…... அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்..

வாழ்வின் எல்லை வரை வேண்டும்….

 

உருகி பாடி விட்டு, “சொல்லுங்க பாஸ்…..கோவை சரளாவோட பிச்சைக்கார சினேகிதனே விட பெட்டரா தான இருந்தது….” என்று அவனிடம் கேட்பது போல தலையணையை பார்த்து சிரித்த படி கேட்டு விட்டு மீண்டும் அணைத்தாள். அவனுடன் கழித்த நேரங்களை எண்ணி ரசித்து அசைபோட்ட படியே அன்று இருந்த களைப்பில், தலை ஒரு புறம் வலிக்க துவங்க முடியாமல் கண்களை சொருகினாள். அந்த ஒரு வார நிகழ்வுகளில் அவன் மேல் பைத்தியமாகிப் போனாலே பேதை பெண்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.