(Reading time: 43 - 86 minutes)

 

ப்ச்….ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு” என்றான் தயங்கிய படி தாழ்ந்த குரலில். சூர்யா அதிர்ந்தான்.

 

“ஏய் என்னத்தை பண்ணி வச்ச?” அவன் முகத்தில் அதிர்ச்சியும் குரலில் அதட்டலும். “அது…. கிச்சன்ல ஹெல்ப் பண்றப்போ ஆக்சிடென்ட்டலா அவ தாவணி கிழிஞ்சு…..தேட் சிட்டுவேசன் வாஸ் சோ எம்பாரிசிங்” என்றான் கார்த்திக், விவரமாக காதல் காட்சியை கத்தரித்து விட்டு சொன்னான்.

 

மீரா, “காதி, வீட்டில யாரும் இல்லாதப்போ வயசு பொண்ணை உள்ள வைச்சு பேசுனதே தப்பு… அவ வந்தவுடனே எங்க யாரையாவது கூப்பிட்டு இருக்கலாம்ல. அடுத்து நீ சமையல் பண்றபோ யாரையும் உள்ள விட மாட்டியே...அது என்ன என்னைக்கும் இல்லாத அதிசயமா அவளை ஹெல்ப்க்கு கூப்பிட்ட? பழி வாங்குறேன்னு அந்த பொண்ணை என்ன பண்ணலாம்ன்னு நினச்ச? “ என திகைத்த படி அடுத்தடுத்து கேள்விகளை வைக்க,

 

“அண்ணி….அவ வந்தது கோவில் பிரசாதத்தை என் மூலமா அவங்க பூமா அக்காவுக்கு கொடுத்து விடுறதுக்கு. நேத்து முழுக்க முழுக்க ப்ராடக்ட் ப்ரெசென்டேஷனுக்கு எவ்வளோ பிஸியா வேலை பாத்தான்னு எனக்கு தெரியாதா? மூணு மணி நேரம் மலேசியன் டீம் கூட பேசுனா….அரை மணி நேரத்துக்கு ஒருக்க எதையாவது நொறுக்கிற மஞ்சிங் மான்ஸ்டர், அன்னைக்கு தண்ணி கூட குடிக்கல. கேட்டா மேடம் விரதம்னா அப்படி தானாம். அந்த அளவுக்கு ஒரு தீவிர முருக பக்தை….ஆனாலும் அந்த முருகன் பாவம். எப்படி தான் இந்த மாறி அதி தீவிர பக்தைகளை சமாளிக்கிறாரோ….”

 

“இதுல மழைல நனைஞ்சிட்டு, அழுத மூஞ்சோட டல்லா நம்ம வீட்டுக்கு வந்தா. அந்த நிலையில் போற வழியில மயங்கி விழுந்தா?... கொட்டுற மழைல ஆட்டோல அனுப்ப மனசில்லை. அதான் கம்பெல் பண்ணி இருக்க வைச்சேன். அப்போ நான் இருந்த மைன்ட் செட்ல அவளுக்கு புவ்வா கொடுத்து தெளிய வைக்கணும்னு மட்டும் தான் தோணுச்சு. வேற எதுவும் தோணலை. அந்த நேரத்தில கூட நம்பியார் மாறி பழி வாங்க யாராவது யோசிப்பாங்களா? ஆனா அண்ணி, அவ சாப்பிட்டு முடிச்சவுடனே அவ முகத்தில ஒரு தேஜஸ் வந்துச்சே பாருங்க... அதை பாத்துகிட்டே இருக்கலாம் போல இருந்தது. அதான் டெசெர்ட் செய்ற சாக்கில சைட் அடிக்கலாம்ன்னு கூப்பிட்டேன்...அது தான் வினையே....ஒழுங்கா என் கொள்கையை விடாம கடைபிடிச்சிருக்கணும். “ என்று சொல்லி சிரித்தான்.

 

“டேய் நீ ராமனா ...ராவணனா?” என கேட்டான் சூர்யா.

 

“நான் மனுஷன், சூர்யா....உங்க ஹாஸ்பிட்டல் நீ கூட அந்த ரஷ்யன் நர்ஸ்சை சைட் அடிப்பியே..அத மாறி தான்” என்று மூட்டி விட்டான்.

 

“டேய் சகுனி என்னை கோர்த்து விட்டுட்டு நீ எஸ்கேப் ஆக பாக்கிறியா? மீரா டிஸ்ராக்ட் ஆகாத. உன் விசாரணையை விடாத” என மீராவை தூண்டினான் சூர்யா.

 

“அதானே...ஆனா காதி அந்த ரஷ்யன் நர்ஸ் பாயிண்டையும் நோட் பண்ணிட்டேன். முத உன் கதைய முடிச்சிட்டு அந்த கதைய ஆரம்பிக்கலாம். சோ, நீ டிசர்ட் செய்ய கூப்பிட்டு இருக்க. அடுத்து என்ன ஆச்சு? உன்னோட கைல காயம் அப்போ தான் வந்ததா? மேடம் கட்டு போட்டு...ரொமான்ஸ் ஸீன்னா? அப்புறம் எப்படி அந்த தாவணி மேட்டர்…. எல்லாம் விலாவாரியா சொல்லு பாப்போம்” என்று ஆர்வமாக கேட்டாள் மீரா.

 

“சீ...போங்க அண்ணி எனக்கு வெட்கமா இருக்கு” என பெண் குரலில் வெட்கப் படுவது போல பாவனை செய்து விட்டு, “அப்படின்னு சொல்லுவேன்னு நினச்சீங்களா? அவன் தான் பொறுப்பில்லாம தூங்கிகிட்டு பிள்ளைங்களை கவனிக்காம இருக்கான்னா, நீங்க வாயை பாத்துகிட்டு கதை கேட்டுகிட்டு இருக்கீங்க...பிள்ளங்க பசில இருக்காங்க. அவங்களுக்கு பாலை குடுங்க. ஆறி போகப் போகுது. அம்மா மட்டும் இந்த நேரம் இருந்தாங்க நடக்குறதே வேற” என மிரட்டுவது போல பேச்சை மாற்றினான்.

 

“டேய், அம்மாவை இழுத்து பேச்சை மாத்தாத. நீ செய்த வேலை எனக்கே பிடிக்கல. அம்மா இருந்தா உனக்கு சங்கு தான்” என்றான் சூர்யா.

 

“சங்கு ஊதுறவங்களுக்கு பிஸ்னஸ் பிடிச்சு கொடுக்கிறதுக்கு நீ இருக்கியே… அம்மாவை அதுல இழுக்காத. ஆக்சிடென்ட்டலா நடந்த விஷயம். அம்மாகிட்ட சொன்னா இருக்கிற கஷ்டத்தில இன்னும் புலம்புவாங்க. அதோட அவளையும் தப்பா நினைப்பாங்க அதான் வேண்டாம்ன்னு பாத்தேன்.” என்றான் கார்த்திக்.

 

“அவ மேல என்னம்மா உருகுற. அன்னைக்கே சொன்ன மாறி உன் மனசுல அவ இருக்கிறா தான?” கார்த்திக்கிடம் கேட்டாள் மீரா.

 

“என்ன கார்த்திக் லவ்வா?” சூர்யாவும் கேட்டான்.

 

“கண்டதும் காதல் உண்மையா?” என்று கேட்டான் கார்த்திக்.

 

“இல்லன்னு சொன்னா மீரா என்னை அடிப்பாடா” என்று சொல்லி சிரித்தான் சூர்யா.

 

கார்த்திக் புரியாமல் பார்க்க, “எங்களுக்கு நிச்சயத்த திருமணம்ன்னு உனக்கு தெரியுமே! அம்மா நிறைய பொண்ணு போட்டோ காமிச்சாங்க. அதுல எனக்கு மீரா போட்டோ பாத்தவுடன் இவ தான் எனக்குன்னு முடிவு பண்ணிட்டேன். அவங்க வீட்டில இருந்தும் சம்மதம் சொல்றது வரைக்கும் நெஞ்சில திக் திக் தான். அதை தான் மீராகிட்ட அடிக்கடி லவ் அட் பர்ஸ்ட் சைட் ன்னு சொல்லுவேன்.” என்றான் சூர்யா.

 

“இப்போ இதை நீ சந்தியாவை மனசுல வைச்சு தான கேக்குற? உனக்கு பிடிச்சிருக்குன்னு பாத்த அன்னைக்கே அத்தைகிட்ட சொல்லியிருந்தா நாம ஏதாவது அவங்க வீட்டில பேசி கல்யாண ஏற்பாடு செய்திருக்கலாம். இப்போ இந்த நிலைமை வந்திருக்காது.” என்றாள் மீரா.

 

சூர்யாவும் கார்த்திக்கும் புரியாமல் மீராவை பார்க்க, அவள் தொடர்ந்தாள், “சந்தியாவுக்கு இன்னைக்கு நிச்சயம் பண்றாங்க. நேத்து நான் அவளை வீட்டில விடப் போறப்ப அவங்க அம்மா சொன்னாங்க. அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வர்றப்போ கூட அவங்க அப்பா சொந்தத்தில மாப்பிள்ளை இருக்குன்னு சொன்னாரே...அதா தான் இருக்கும்” என்றாள் மீரா.

 

சோபாவில் உட்கார்ந்திருந்த கார்த்திக் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க விருட்டென எழுந்தான். “நேத்து வந்ததாளே! எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லை” என்றான் பல்லை கடித்த படி. கண்களில் கோபக் கனல்.

 

“சும்மா அவ மேலே தேவையில்லாம கோபப்படாத. அவ என்ன செய்வா பாவம்! இது திடீர்ன்னு தான் முடிவு பண்ண மாறி தெரியுது. சந்தியா வேற நேத்து டல்லா இருந்தா. அவங்க பாட்டி லேட்டா வந்ததுக்கு எப்படி கேவலமா அவளை திட்டினாங்க தெரியமா? அவ ஒரு வார்த்தை பேசலை. எனக்கே கஷ்டமா இருந்தது” என்று வருத்தத்துடன் சொன்னாள் மீரா.

 

“ஒரு சொல் சொன்னா கூட விட மாட்டா...கண்ணாடி மாதிரின்னு

 

சொல்லுவா..ஒன்னுமே பேசலையா?” என வியப்பாய் வினவினான் சூர்யா.

 

“அவ எப்படி போனா எனக்கு என்ன? என் ப்ராடக்ட் சரியா முடிச்சு கொடுத்தா போதும்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான். வார்த்தை அவளை விலகி இருந்தாலும் மனம் என்னவோ அவளை சுற்றிக் கொண்டிருந்தது.

 

சற்று நேரத்தில் கிளம்பி, “மது….ஊருக்கு கிளம்புறேன்” என்று அவளது அறைக் கதவை தட்டினான், கார்த்திக். தனது அறை கதைவை திறக்காமலே “ஏர்போர்ட் போயிட்டு போன் பண்ணு காதி...எனக்கு தூக்கம் வருது” சிணுங்கிய படி சொன்னாள் மது.

 

கார்த்திக், “ஏய், லாங் டேர்ம் போறேன். வந்து முகத்தை காட்டிவிட்டு போ மொட்டை” என்றவுடன் சிணுங்கிய படியே கதைவை திறந்த கொண்டு வந்த மது, “என்ன காதி, பொய் தான?” கேட்பது போல பாடினாள் மது.

 

“இல்ல. மொட்டை. நிஜமாவே எப்போ வருவேன்னு சொல்ல முடியாது. டாடி பாலோ அப் அப்போ நேரா சென்னைக்கு வந்துட்டு போயிடுவேன். நிருக்கு தினமும் தமிழ் கத்துக் கொடு. நைட் கால் பண்ணுவான். தமிழ் தாய் வாழ்த்துல இருந்து ஆரம்பி.” என்றான் கார்த்திக்.

 

“ஏன் நிரு திடீர்னு தமிழ் கத்துக்கிறான்?” வியப்பாக கேட்டாள் மது.

 

“ஒரு பேக்கு தமிழ் பொண்ணை ப்ரோபோஸ் பண்ண போறானாம். அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். கொஞ்சம் மனசு வை. நிரு பாவம்” என்று கெஞ்சுவது போல சொன்னான் கார்த்திக்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.