(Reading time: 43 - 86 minutes)

ட்டோவிற்கு காத்திருக்கும் சமயத்தில் அத்தனை உறவினர்களும் அவளை சுற்றி கூடி விட, ஸ்ரீமா அவளுக்கு காய்ச்சல் மருந்தாவது கொடுத்து விட முயற்சித்தாள். ஆனால், சந்தியாவோ அந்த இறுக்கத்தில் மருந்தை முழுங்க முடியாமல் குடலை பிரட்டி கொண்டு வர வாந்தி எடுத்து உடம்பில் இருந்த கொஞ்ச நஞ்ச நீர் சத்தும் வடிந்து விட, அரை மயக்கத்தில் கண்களை சொருகினாள்.

 

அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த கார்த்திக்கிற்கு அவள் நிலையைப் பார்த்ததும் உலகமே இருண்டு போனது போல ஆயிற்று. அவளை நோக்கி ஓடி வர, அதற்குள் அவளருகில் நின்ற ஸ்ரீமாவும் லக்ஷ்மியும் அவளுக்கு உதவ,

 

தனது அருகில் நின்ற தன்ராஜிடம் “அங்கிள் இவ்வளோ மோசமா இருக்கா...என் கார்ல உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்” பட படத்தவாறே அவளை தூக்க போனான். “தம்பி நாங்க தூக்கிட்டு வாரோம். நீங்க காரை ஸ்டார்ட் பண்ணங்க” சொல்லும் போதே அவனை முந்திக்கொண்டு மகளை அள்ளி தோளில் சாய்த்து தூக்கினார் தன்ராஜ். ஏமாற்றமாய் இருந்தாலும் அவளை சீக்கிரம் மருத்துவமனையில் சேர்ப்பதே கண்ணாக இருந்ததால் வேகமாக காரை நோக்கி நடக்க, எதிர்பட்டான் பாண்டியன். அவன் சந்தியாவை தன்ராஜ் தூக்கி வருவதைப் பார்த்ததும், அவரின் பதற்றம் அவனுக்கும் தொற்றிக் கொண்டது.

 

“மாமா ..என் சந்..” சொல்ல வந்து நிறுத்தியவன், “நம்ம சந்தியாவிற்கு என்ன மாமா? “ என்று பயந்து போய் அவரிடம் ஓடினான். மகனை பார்த்த வடிவு, குதித்து ஓடி வர முயன்று தோற்று போய் ஊர்ந்து வந்தபடியே அவனை அழைத்து, “ராசா நல்ல நேரத்துக்கு வந்துபுட்ட. கண்டவன் கார்லயும் ஏத்த தெரிஞ்சோம். நம்ம கார்ல அழுங்காம குழுங்காம கூட்டிட்டு போ ராசா என் மருமவளை...அண்ணே அதில போங்க “ என வீட்டருகில் அப்பொழுது தான் நிறுத்தியிருந்த பாண்டியனின் காரை காட்ட, “வாங்க மாமா “ என மிகத் தாழ்மையுடன் சொல்லிக் கொண்டே பாண்டியன் முன்னே நடக்க, கார்த்திக்கிடம் அதில் செல்வதாக கண்களால் சைகை காண்பித்து விட்டு பாண்டியனின் காரில் சந்தியாவை ஏற்றினார் தன்ராஜ். ஏற்கனவே வடிவு பேச்சில் பாண்டியன் தான் மாப்பிள்ளை என அறிந்து சீறிக்கொண்டிருந்த கார்த்திக், தன்ராஜ் செயலில் இன்னும் சினந்தான்.

 

தன்ராஜிற்கு காரின் கதவை திறந்து விட்டு நின்ற பாண்டியனிடம் வந்த கார்த்திக், “ஆர் யு ஸ்யர் இது உங்க கார் தானா?” என கேட்க, “ஆமா..இதோ பாருங்க” என தனது கார் சாவியை பாண்டியன் பெருமையாக காண்பிக்க, படக்கென பிடுங்கிய கார்த்திக், மின்னலென ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான். கோபத்தில் பாண்டியனும், அதிர்ச்சியில் தன்ராஜும் பார்க்க, தன்ராஜிடம் “டாக்டர் இஸ் வெயிட்டிங். அங்கிள் சீக்கிரம்“ என்று பார்கிங்கில் காரை போட்டு விட்டு ஆக்ஸிலெட்டரை மட்டும் சீற விட்டு தனது அவசரத்தை காட்டினான். வேகமாக லக்ஷ்மியும், தன்ராஜும் சந்தியாவுடன் பின்னிருக்கையில் ஏற, பாண்டியன் முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, அடுத்தடுத்து எல்லாம் கார்த்திக்கின் அதிரடி தான். காரை ஓட்டிக் கொண்டே போனில் அனைத்து ஏற்பாடையும் செய்து முடித்தான். அவன் செய்வதை மலைத்து போய் பார்த்தார் தன்ராஜ். பொறாமையில் பார்த்தான் பாண்டியன்.

 

பாதி மயக்கத்தில் இருந்த சந்தியாவை அணைத்த படி தோளில் சாய்த்து “நேத்தே எதுவும் செய்ததோ என்னவோ...ஒரு நாளும் இப்படி யார்கிட்டயும் பேசாம இருக்க மாட்டா” வருத்தத்துடன் அவள் தலை முடியை கோதிய லக்ஷ்மி. நொடிக்கொரு முறை கண்ணாடியில் அவளை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், “ஐ வில் டேக் கேர் ஆப் ஹெர். டோன்ட் வொரி ஆண்டி” என அவன் சொன்ன சில நொடிகளில் மருத்துவனை வர, துரிதமாக செயல்பட்ட செவிலியர்கள் அவளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க, உடனடியாக வந்த மருத்துவரும் அவளுக்கு சிகிட்சை அளித்தார்.

 

மருத்துவர் அவள் உடம்பில் நீர் சத்து மிகவும் குறைந்துள்ளதால் குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரைத்தார். அளவுக்குதிமான காய்ச்சலால் வாந்தி வந்திருக்கலாம் எனவும் அவளுக்கு காய்ச்சல் மருந்தும் நரம்பு வழியாகவே ஏற்றப்படுவதால் சற்று நேரத்தில் கட்டுக்குள் வந்து விடும் எனவே பயப்படத் தேவையில்லை என சொல்ல அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

 

நல்ல சொகுசான அறையை தான் சந்தியாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திக். சந்தியாவிற்கு சிகிச்சை அளித்த பின், அனைவரும் பரபரப்பு குறைந்து சகஜ நிலைமைக்கு வர, பாண்டியனையும் கார்த்திக்கையும் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தி வைத்தார் தன்ராஜ்.

 

“உன் ஆடி காருக்கு எல்லாம் அசர மாட்டாரு என் மாமா…நான் தான் இந்த வீட்டு மாப்பிளை” என்று பெருமையடிப்பது போல கார்த்திக்கை பார்த்தான் பாண்டியன். “மண்ணு மாதிரி இருக்கான். இருந்தும் இருந்தும் இவனையா கட்டிக்க போறா....விட மாட்டேன்“ என பாண்டியனை பார்த்து மனதிற்குள் கங்கணம் கட்டிக் கொண்டான் கார்த்திக்.

 

அடுத்த அரை மணி நேரத்திற்குள் உறவினர் புடை சூழ வந்தாள் வடிவு. அவர்கள் கிளப்பிய சத்தத்தை கேட்டு வந்த செவிலிய பெண், கும்பலாக அறையில் இருக்கக் கூடாது என கூற, தன்ராஜ் வடிவை தவிர அனைவரையும் அனுப்பி விட்டார்.

 

கார்த்திக்கிடம் வந்த வடிவு, “வீட்டாளுகளே நாலு பேருக்கு மேல இருக்கோம். தம்பி இங்கவே உக்காந்துட்டு இருக்கு. வேலை வெட்டி இல்லையாப்பா?” என்று கேட்க, கடுப்பான கார்த்திக் தன்ராஜை பார்க்க,

 

“ஹாஸ்பிட்டலே அவங்களோடது. அவர்கிட்ட வேல இல்லையான்னு கேக்குற. யார்கிட்ட என்ன பேசனும்னு தெரியாது. வாயை அடக்கு.” என திட்ட அவமானத்தில் மேலே எதுவும் பேச முடியாமல் அமைதியாய் மகனை பார்த்தாள்.

 

பாண்டியன் மனதிற்குள் தனது தாயை தன்ராஜ் கார்த்திக் முன் பேசுவது பிடிக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் தன்ராஜை எதிர்க்க கூடாது என எண்ணிக் கொண்டவனாய் அவரிடம், “மாமா, அம்மா இங்க இருந்தா ஏதாவது வம்பு பேசிகிட்டே இருப்பா. நான் வீட்டிக்கு அனுப்பிட்டு வந்துடுறேன்” என்று கண்களால் கிளம்ப குறிப்பு காண்பித்து விட்டு அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

 

அவர்கள் சென்றதும் தன்ராஜிடம் வந்த கார்த்திக், “அங்கிள் உங்கள் வீட்டில ஏதாவது விஷேசமா? இவ்வளோ கெஸ்ட் இருக்காங்க” என்று ஒன்றுமே தெரியாதது போல கேட்டான்.

 

அவன் கேட்டதும் தன்ராஜ், “ம்….சந்தியாவிற்கு நிச்சயதார்த்தத்தை இன்னைக்கு பண்ணி முடிச்சிடலாம்ன்னு நினச்சது. ஹும்….” என்று பெருமூச்சு விட்டு விட்டு, “தடங்கலா இருக்கு. சரியா படலை. இப்போதைக்கு வேண்டாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.” என்று தனது எண்ணத்தை சொன்னார். அதை கேட்ட கார்த்திக் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.

 

“நானே உங்ககிட்ட இதை பத்தி பேசனும்ன்னு நினைச்சேன். சந்தியா போன வருசம் பண்ண ரிசர்ச் எங்க இண்டஸ்ரில உலகம் முழுக்க பாப்புலர். அவளுக்கு ஐ.க்யூ. மத்தவங்களை விட அதிகம். கொஞ்சம் அனுபவம் கிடைச்சா போதும் நல்லா ஷைன் பண்ணுவா. பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக அவளோட கேரியரை க்ளோஸ் பண்ணிடாதீங்க. இது என்னோட ஹம்பிள் ரிக்வஸ்ட்“ என்று கார்த்திக் மிகப் பணிவாக சொன்னான்.

 

அதற்கு, “எங்க சந்தியாவுக்கா அவ்வளவு திறமை இருக்குன்னு சொல்றீங்க?” என வியப்பாக வினவினார் தன்ராஜ்.

 

“ஆமா அங்கிள், அதான் நல்லா யோசிச்சு எந்த முடிவும் எடுங்க. “ என்றவன் பின் தனது கைகடிகாரத்தில் மணி பார்த்த படி,

 

“ப்ளைட்க்கு லேட்டாகிடுச்சு. ஐ ஹேவ் டு ரஷ்… சந்தியாவுக்கு பெரிசா ஒன்னும் இல்ல. சோ இன்னும் கொஞ்ச நேரத்தில பெட்டராகிடுவா. நான் பாத்த மட்டும் அர்ஜுன், ஆக்சிடென்ட், ஸ்ப்ரைன், இப்போ டோட்டல் ஷட் டவுன்… இந்த வாரத்தில நாலு நாள் ஆஸ்பத்திரிக்கு அழைஞ்சிருக்கா… நம்மளையும் அழைய வைச்சிட்டா. ஊருக்கு உழைக்கிறேன்னு அவளை சுத்தாம கவனிக்காம ஸ்டாமினாவே இல்ல அவளுக்கு. ஒரு நாளைக்கு ஏழெட்டு காபி குடிக்கிறா. நிறைய ஜன்க் சாப்பிடுறா. கொஞ்சம் ஹெல்தியா சாப்பிட வைங்க.”

 

“ஏற்கனவே, சாப்பிடுறதெல்லாம் அவ பேசுறதுக்கே சரியா போயிடுது. இதுல விரதம் வேற. நேத்து தண்ணி கூட குடிக்காம இருந்தது தான் இப்படி உயிருக்கே ஆபத்து வர்ற அளவுக்கு டிஹைரேட் ஆக்கி விட்டு இருக்கு. அடுத்து விரதம் இருந்தா மவுன விரதம் இருக்க சொல்லுங்க. அவளுக்கும் நல்லது. நமக்கும் நல்லது” என்று சொல்ல தன்ராஜ் சிரித்தார்.

 

“ஒரு வாரத்தில அவளை பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. உங்களுக்கு எப்படி தெரியும் சந்தியாவிற்கு உடம்பு சரியில்லைன்னு” என தன்ராஜ் கேட்க அதற்கு கார்த்திக் பதில் யோசிக்கும் முன், அங்கே இருந்த ஸ்ரீமா நடந்த விவரத்தை சொன்னாள். அவளை தொடர்ந்த கார்த்திக், “நேத்து பேக்கேஜ்ல ஒன்னு ரெண்டு ஸ்நாக் வைக்க முடியல. அதை சொல்லிடலாம்னு கூப்பிட்டேன். அப்போ தான்” என ஒரு நொண்டி சாக்கை சொல்லி சமாளித்தான்.

 

பின் அனைவரிடமும் விடை பெற்று விட்டு சந்தியாவை பார்க்க அவளோ கண் மூடி கிடந்தாள். அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாமல் மீண்டும் ஒருமுறை அவளை பார்த்து விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.