(Reading time: 43 - 86 minutes)

கார்த்திக்கிற்கும் அன்று தூங்கா இரவு.

 

அவனை பொறுத்தவரை பெண்கள் நேர விரயம். அவன் முன்னேற்ற பாதையின் முட்டுக்கட்டைகள். யாராவது நட்பாக பேசினால் கூட முகம் கொடுத்து பேச மாட்டான். மதுவின் தாயார் கிருஷ்ணவேணி அவர் வாழ்க்கையை அழித்தது இளமையில் வழி தவறி தானே...அது அவர்கள் வீட்டில் எல்லாருக்கும் பாடம்.

 

“ஓ மை காட். நம்மளை எங்கயோ இழுத்திட்டு போயிட்டாளே..எல்லாம் இந்த கட்டினால வந்தது. ஒரு பேன்ட் எயிட்ல முடிய வேண்டியதை சீன் போட்டு...என்னம்மா பேசிட்டா” நினைக்கும் போதே மனம் வலித்தது. அவள் பார்வையில் பொசுங்கி சாம்பலானானே!

 

அவனை பொறுத்த வரைக்கும் அவள் பார்த்த பார்வை ஒரு பெண் பித்தனை பார்ப்பது போல இருந்தது. எந்த பெண்ணையும் தன்னருகில் வர விடாதவன், அன்று அவன் செய்த பிழையால் நொந்து போய் அவள் கேட்ட கேள்வி, உமிழ்ந்த வெறுப்பு, விருப்பமில்லாமல் நெருங்கி விட்டாயே என வேலாய் பாய்ச்சிய பார்வை!

 

அந்த பார்வை அன்று மீரா சொன்னதை நினைவு படுத்தியது…

 

எந்த பாவம் செய்யாம நம்ம வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் காட்சி செய்து பாக்க முடியல. இன்னொரு பொண்ணுக்கு கஷ்டத்தை கொடுத்து அந்த பொண்ணோட பாவத்தையும் வாங்கி கட்டிக்கணுமா? வேண்டாம் காதி

 

அவமானம் கலந்த அவள் முகம்...இதே மதுவிற்கு யாராவது செய்திருந்தால் அவள் மனதுடைந்திருப்பாளே! அண்ணி சொன்னது போல சந்தியாவிற்கு கஷ்டம் கொடுத்து விட்டோமே!

 

சந்தியாவை மயக்க நினைத்து நாம் அவளிடம் மயங்கி விட்டோமோ? நான் இப்படி ஒழுக்கத்தை மீறி, தரம் தாழ்ந்து எந்த ஒரு பெண்ணிடமும் நடந்தது இல்லையே…அமேரிக்காவில் கிடைக்காத சுதந்திரமா? பார்க்காத பெண்களா… சத்தியமாக இல்லை. இவளிடம் வேற… இத்தனை வருடமாய் யாரிடமும் இது போல தோன்றவில்லையே! இனிமேலும் தோன்றிவிடுமா?

 

முதன்முதலில் அவள் பின் பைக்கில் சென்ற போது அவன் மனதில் பதித்திருந்த அவள் வாசமும், அவன் முகத்தில் முட்டி மோதிய அவள் கூந்தல் கொடுத்த சிலிர்ப்பும், நேற்றும் அவள் அருகாமையில் தொலைத்து விட்டதை கண்டு கொண்டது போல அவளை நோக்கி ஈர்த்ததே! முதல் நாள் சந்திப்பில் அவனையறியாமல் அவளது மேல் ஏற்பட்ட ஈர்ப்பு இத்தனை கோபம், வெறுப்பு வஞ்சனைக்கு பிறகும் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறதா? நேற்று அவள் காட்டிய பரிவு! நமது கண்டிப்பான அம்மாவிடம் இந்த அளவிற்கு பெற்றது இல்லையே! அவன் எண்ணங்கள் திசை மாறி பயணிக்க படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.

 

“என்னை தொடக்கூடாது தொடக்கூடாதுன்னு சொல்லிட்டு நீதான்னே என் கைப் பிடிச்சுகிட்டு இங்குட்டும் அங்குட்டும் ஓடுன... என்னை எனக்கு பாத்துக்க தெரியாதா? ஒரு கட்டை போடுறதுக்குள்ள எனக்காக உயிரையும் கொடுப்பேங்கிற அளவுக்கு நடிச்சு என்னையும் நம்ப வைச்சு ச்சே… “ என்று தனக்குள் அவளை நினைத்து சீறியவன், கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, ஒரு கையை பிடரியில் வைத்து, மறு கையை தன் முன் விரித்து,

 

“இந்த கை இத்தனை வருஷத்தில வேற எவளையாவது இப்படி விரும்பி அணைத்திருக்குமா?” என்று கேட்டுக் கொண்டே பார்த்தவன், பின் அதை மடக்கி பிடரியில் வைத்து தாங்கியவாறே,

 

“உன் அப்பாவி முகத்தை பார்த்து தான் இவ்வளவும் ஆச்சு. இனி அந்த முகத்திலே நான் முழிக்கக் கூடாது…. என்னை ரேப்பிஸ்ட் ஆட்டும் சொல்லிட்டியே பாவி! போதும்! இந்த பழியும் வேண்டாம் பாவமும் வேண்டாம்.” என்று நொந்து போய் சொல்லி விட்டு ஒரேடியாக அமெரிக்காவிற்கு செல்ல முடிவெடுத்தவனாய்,

 

ஐபோனை எடுத்து அவள் போட்டோவை அழிக்க போனவன், அதற்கு மனதில்லாமல், வெகு நேரம் தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுத்தான்…. பின் ஒருவழியாக தன்னையறியாமல் கண்ணயர்ந்தான்.

 

மே 19, சனிக்கிழமை

 

புயலென வீட்டிற்குள் நுழைந்த தன்ராஜ், “மழைக்கு ஒதுங்க வந்த என் பொண்ணுகிட்ட ஒழுக்கம் கெட்டு நடந்திருக்கான் உங்க பையன். அவனை நம்பி பொம்பளை பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப முடியுமா?” என ஆத்திரமாய் சதாசிவத்தை நோக்கி வர,

 

சத்தம் கேட்டு அங்கே வந்த கார்த்திக்கை பாத்தவுடன் “உன்னை மாறி ஆளுங்க எல்லாம் உலகத்திலே இருக்க கூடாதுடா...ராஸ்கல்” என்று சொல்லிக் கொண்டே, தனது இராணுவ கைத் துப்பாக்கி எடுத்து

 

“டுமீல்...டுமீல்….டுமீல்….டுமீல்….டுமீல் ….டுமீல் “ அத்தனை குண்டுகளும் காலியாகும் வரை சுட, கார்த்திக் ரத்த வெள்ளத்தில்….

 

“மம் …….மீ….” கதறிக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான் கார்த்திக். குனிந்து பனியனை பார்த்தான் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தது. ரத்தக் கரை எதுவும் இல்லை.

 

“அப்பா உயிரோட தான் இருக்கோம். கனவு தான்” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், “மிலிட்டரிகாரர் பொண்ணு மேல கை வச்சா...பின்ன இப்படி தான் கனவு வரும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே மணியை பார்த்தான். அதிகாலை ஐந்து மணியை நெருங்க பத்து நிமிடங்கள் இருந்தது. பசி வயிற்றை கிள்ளியது. அவளுக்கு பசியாத்தியவன் நடந்த பிரச்சனையில் தான் உண்ணாமலே படுத்து விட்டான்.

 

மாடியிலிருந்த தனது அறையில் இருந்து கீழே வந்தவன், வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து ஐபேடில் ‘டோரா’ நிகழ்ச்சி பதிவை பார்த்துக் கொண்டிருந்த நித்தி, நிக்கியை கண்டான். அவர்கள் அருகில் உட்கார்ந்தவாறே சூர்யா தூங்கி வழிந்து கொண்டிருந்தான்.

 

அதை பார்த்த கார்த்திக், மெதுவாக நித்தியின் காதுக்குள் ஏதோ சொல்லி கட்டை விரலை உயர்த்தி காட்ட அவளும் சம்மதமாய் தலையசைத்த படி சூர்யா மீது ஏறி அவன் காதில் “ஆ….”வென கீச்சுக் குரலில் சத்தமாக கத்தினாள். பதறி எழுந்த சூர்யா “ம்...ஆ….” என அரக்க பறக்க முழிக்க, அவன் முன் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த கார்த்திக் சிரிந்த படி,

 

“டேய், இன்னும் உங்க குடும்பத்துக்கு ஜெட் லேக் சரியாகலையா? ரொம்ப லச்சணமா பிள்ளைகளை பாத்துக்கிற...உன்னை நம்பி இவங்களை விட்டுட்டு அண்ணி எங்க போனாங்க?” என கேட்க,

 

“பிள்ளைங்களுக்கு பால் ஆத்த போனா...டேய் அவகிட்ட சொல்லிடாதடா. என்ன அறியாம அசந்துட்டேன்.” என்றான் கெஞ்சலாக.

 

“ட்ரை பண்றேன்” என்று விட்டு,

 

“எனக்கும் பசிக்குது...ஏதாவது சாப்பிட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே சூர்யாவை கடந்து நடந்த கார்த்திக்கின் கையை பிடித்த சூர்யா,

 

“கைல என்னடா கர்சீப் கட்டு...மஞ்சளோட….பாட்டி வைத்தியமா?” என கேட்க,

 

பிள்ளைகளுக்கு பாலை எடுத்துக் கொண்டு வந்த மீரா, அவன் கையை கவனித்தவளாய் “லேடீஸ் கர்சீப்பா….அப்போ ப்யூட்டி வைத்தியமா தான் இருக்கும்” என எடுத்துக் கொடுக்க,

 

“யார்ரா அது …. மஞ்சள் எல்லாம் வச்சு மந்திரிச்சு கட்டிட்டாங்களா?” என சூர்யா கிண்டலடிக்க,

 

“நக்கல்!! நீ பண்ணதை அண்ணிகிட்ட சொல்லவா?” என கார்த்திக் மிரட்ட,

 

“என்னத்தை செய்திருப்பாரு? உட்கார்ந்துகிட்டே தூங்கியிருப்பாரு….” என்றாள் மீரா அலட்சியமாக.

 

மாட்டி கொண்ட திருடனாட்டம் சூர்யா முழிக்க,

 

“அண்ணி உன்னை முழுசா தெரிஞ்சு வைச்ச பெட்டர் ஹாப்” என்று சொல்லிய படியே நின்ற இடத்தில் இருந்தே ஒரு கையால் ஹய் பை கொடுப்பது போல செய்ய, பதிலுக்கு மீராவும் அவ்வாறு செய்ய,

 

“இப்படி தூங்கி தூங்கியே எத்தனை பேரை ஒரேடியா தூங்க வச்சியோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்” என்று சிரிக்க,

 

“ம்…..ஒரு மோஸ்ட் வான்ட்டட் நியூரோ சர்ஜனை பாத்தா உனக்கு காமெடி பீஸ்ஸாட்டம் தெரியுதா….சரி அடுத்து உன் தலைய உருட்டுவோம். அப்படியே உன் அந்த கர்சீப்பையும் அதுக்கு பின்னால உள்ள கதையையும் அவுத்து விடு. பாக்கலாம்.” என்று கேட்க,

 

“ப்ச்...ஒரு பேன்ட் எயிட்ல முடியுறது. கட்டு போட்டா அந்த பேய்” என்றான் கார்த்திக்.

 

அவனிடம், “நேத்து ஏன் ரெண்டு பேரும் அப்செட்டா இருந்தீங்க?” என கேட்டாள் மீரா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.