(Reading time: 6 - 11 minutes)

13. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

யோ மறந்தே போச்சே……..எப்பிடி மறந்தேன்……ப்ச்…ஏன் தான் இப்பிடில்லாம் ஆகுதோ…..ஐயோ ஷைனி ….சாரிடா செல்லம்……மறந்துட்டேம்பா……..நிஜம்மாவே மறந்துட்டேண்டா……..” தீபக்  , ரவி  இருப்பதையே மறந்து  விட்டவன்  போலக் குழைந்து  கொண்டிருந்தான்  தயா.

 

ஷைனி   தயாவை  நம்பாதவள்  போல  மலங்க  மலங்க  முழித்துக்  கொண்டிருந்தாள்.

 

“டேய்  நீ  பண்றது   உனக்கே   நல்லாருக்காடா……ஒண்ணுமில்லாத    விஷயத்துக்கு  இவ்வ்ளோ   ஆர்ப்பாட்டம்   பண்ணிருக்கே……எங்க   ரெண்டு   பேரையும்   அலைய விட்டுருக்கே……….இதுலே   போலீஸ்   ஸ்டேஷன்   போய்க்   கம்ப்ளெயின்ட் கொடுத்தே   ஆகணும்னு   பிடிவாதம்   வேறே…? ஏண்டா   இப்பிடிப்   பண்றே” ரவியைப்   பார்க்கவே   பயமாக   இருந்தது    தீபக்குக்கு. அதனால் வேற எங்கேயோ  பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ நிஜம்மாவே  மறந்துடுச்சுடா…”

 

“அப்போ நாங்க  கெளம்புறோம்”

 

“ தாங்க்ஸ்டா….சாரிடா…..இதுக்காக என் கிட்டே பேசாமப் போயிராதேடா……”சாரி  ரவி   சார்   உங்களையும் ரொம்பக் க் கஷ்டப் படுத்திட்டான்  தீபக்”

 

ரவி   ஒன்றும்   பேசாமல்   வண்டியில்   போய்  ஏறிக்  கொண்டான்.  தீபக் படியில் கால் வைத்தவுடன்  கால் மடங்கியது   போல  இடறியது…

 

“என்னடா…… தடுக்குது…… சிஸ்டர்   இது  என்ன செடி?”  என்று ஷைனியை  வெளியில் வரச் செய்து விட்டு   “தயா தண்ணி கொண்டு வாடா…..குடிச்சுட்டுக்   கெளம்புறோம்”

என்று தயாவை உள்ளே அனுப்பிவிட்டு  

 

“ ஏதும் பிரச்னைன்னா   எனக்குக் கால் பண்ணும்மா “ என்று   தயா  வருவதற்குள்  ஷைனியிடம் மெதுவாகக் கூறினான்  தீபக்.

 

அந்த ஒரு வார்த்தையில்  கண்ணில்  கண்ணீர்  அருவியாகக் கொட்டியது ஷைனிக்கு.

 

தயா வருவதைப் பார்த்து அவசர  அவசரமாகதக் கண்களைத்  துடைத்துக் கொண்டாள்.

 

“ கால் இடறுனா தண்ணி குடிக்கணும்கிற சென்டிமென்ட்லாம்  இன்னும் பார்க்கிறியாடா என்ன….” என்று நக்கலடித்துக் கொண்டே   தண்ணீரைக் கொடுத்தான்  தயா.

 

பதிலேதும் சொல்லாமல்  தண்ணியைக் குடித்து விட்டுப்  “பார்க்கலாம்டா……வரேம்மா….” என்றவாறு   கிளம்பினான் தீபக்.

திடீர்னு ஓடி வந்த தயா  தீபக்கின் கைகளைப் பிடித்துக் கொண்டு…” என் மேலக் கோபமில்லியே……பேசாம இருந்துர மாட்டியே…?” என்றான்.  தீபக் எரிச்சலுடன்  கைகளை விடுவித்துக்   கொண்டு வண்டியைக் கிளப்பினான்.

 

ருவரும்  பேசாமலே  வந்தார்கள். ரவி  பயங்கரக் கடுப்பில் இருந்தான்.  தீபக்குக்கு அது புரிந்தது. ஒரு வார்த்தை பேசினாக் கொன்னே போட்டுருவான்னு  பயந்துதான் சும்மா  வந்தான்.  

 

“இவனை எங்கேர்ந்துரா புடிச்செ?”

 

“எவ்வ்ளோ கதை சொல்லிருக்கேன் இவனைப் பத்தி….இப்போ போய் இப்பிடிக் கேக்குறே?”

 

“விடுறா….இவன் சங்காத்தமே வேண்டாம்….  இனிமேல்  விடுன்னு சொன்னா  இப்போ போயி    அந்தப் பொண்ணுகிட்டே  வேற போயி……ஏதாவது உதவி வேணும்னா  கேளுன்னு அட்வைஸ் வேற……”

 

“ இல்லேடா…….எப்பவோ இவன் கிட்டே பேசுற நம்மளையே  இந்தப் பாடு படுத்தறான்……..பாவம்டா….அந்தப் பொண்ணு    ….என்ன பாடு படுதோ….”

 

“நீ  சொல்றதும் சரிதாண்டா….”

 

அதுவுமில்லாமே  அந்தப் பொண்ணு  சொல்ற  கீர்த்தி  நான் உதவி பண்ணுன  கீர்த்தியாதான் இருக்கும்னு தோணுதுடா……”

“ம்ம்ம்…..இந்தக்   கொடுமைக்குள்ளே  இதை வேற நோட் பண்ணிருக்கியா…..ஓ…கதை அந்த ரூட்லே  வேற போகுதா…….ரைட் விடு…”

 

“டேய்…..நாளைக்குக் கீர்த்திகிட்டே  ஷைனியைப் பத்திக்   கேக்குறதுக்காக  ஃபோன் பண்ணப் போறேன்….”

“என்னவோ  பண்ணு போ….”

 

வியை வீட்டில் இறக்கிவிட்டு  வீட்டுக்குள்   நுழைந்ததும்   சுபாக்கா ,   கௌஸி,   அம்மா கேட்கப்   போகும்  கேள்விக்குப்   பயந்து…..உள்ளே நுழைந்ததுமே   

 

“ ஒரே தலைவலிம்மா…..நான் படுத்துக்கப்   போறேன்”னு  ரூமுக்குள் நுழைந்து கொண்டான் தீபக்.

 

இன்னிக்குக்  கீர்த்திகிட்டே பேசலாம் என்ற எண்ணமே  காலை நேரத்தை  அழகாகக்  காட்டியது.  முன்பெல்லாம் காலையில் மொட்டை மாடியில் காலைக் குளிரை ரசித்துக் கொண்டே எளக்காய் டீயை ரசித்துக் குடிக்க ரொம்பவும் பிடிக்கும் தீபக்குக்கு. வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அதுவே மெல்லக் குறைந்து சனி ஞாயிறுகளுக்குள் அடங்கிக் கொண்டது. இப்போ அதுவும் குறைந்து  சனி ஞாயிறுகளும்  மெதுவாக வெயில்சுள்ளென்று  அடித்த பின்னர் விழிக்க ஆரம்பித்து  காலைக்  குளிர் ….மொட்டை  மாடி  … ஏலக்காய்   டீ  யெல்லாம் மறந்தே   போயிருந்தது.  

இன்று  என்னவோ மீண்டும்  அந்தப்  பழக்கத்தையெல்லாம்  மீண்டும்  ஆரம்பிக்க வேண்டும்  என நினைத்தவனாக

 “ சுபாக்கா  நான் மொட்டை மாடிக்குப் போறேன்….எனக்கு ஏலக்காய் டீ  மேலக் கௌஸிகிட்டே கொடுத்து விடுங்கக்கா…..” என்றவாறு   படிக்கட்டில் ஏறினான் தீபக்.

கண்களை மூடி  மார்கழிப்  பனியை மெல்ல   ரசித்தவனுக்கு  ஏலக்காய் டீயின்  மணம்  வரவும்    கண்களைத் திறந்தவன்  டீயுடன் சுபாக்கா  நிறபதைப்  பார்த்தவுடன்  அவசரமாக….

” நீங்க ஏங்கா  கொண்டு வந்தீங்க……கௌஸிகிட்டே கொடுத்து விட்டிருக்கலாமே?.......”

“ நேற்று தயாவைத்தானே   பார்க்கப் போயிருந்தே….?”

“எப்பிடிக்கா…….ரகசியத்தைக் கண்டு புடிக்கிறதுலே உங்களை மிஞ்ச ஆளே கிடையாது……எப்பிடிக்கா….கண்டு புடிச்சீங்க….?”

 “அந்தத் திறமையெல்லாம்  எனக்குக் கிடையாதுப்பா….ஆனா…என் தம்பியைப் பத்தி  எனக்கு நல்லாத் தெரியும்….அதுவும் தவிர…. டென்ஷன் கொடுக்குற  வேற எந்தப்  பிரச்னையும்  இப்போதைக்கு உனக்கு இல்லைன்னு எனக்கு நல்லாவே   தெரியும்டா…”

சுபாக்காவிடம்  ஒன்று விடாமல் எல்லாவற்றையும்  சொல்லி  முடித்தவன்…

” பாவம்கா  அந்தப் பொண்ணு அவன் கிட்டே மாட்டிக்கிட்டு  முழிச்சுட்டு இருக்கு”

“நீ ரொம்ப உதவுறதாப்  போய் எதுலேயாவது  மாட்டிக்காதேடா….”

“சுபாக்காவா….பேசுறது?......யாருக்குன்னாலும் ஓடி  ஓடி உதவுற நீங்களா இப்பிடிப் பேசுறீங்க…?”

“தீபக்….நான் பண்ணும் போது புரியாத  பயமில்லாத சிக்கலெல்லாம்…. தனக்குப் பிரியமானவங்க செய்யும் போது புரியுது…..” என்று சிரித்துக் கொண்டே….”வேலைக்கு நேரமாகலையா….கிளம்பு…கிளம்பு”  என்று கீழே இறங்கினாள்

“ஆமாமா…….இதோ வரேங்கா…….” என்றவாறு  தென்னை மரக்கிளையில்   ஊஞ்சலாடும் குருவி ரெண்டைப் பார்க்க ஆரம்பித்தான். ஒன்றையொன்று  கொஞ்சிக் கொண்டேயிருந்தன.  கூடவே   இன்னொரு குருவி வந்து உட்காரவும்  இரண்டும்  கொஞ்சமாகப் பறந்து வேறொரு மரக்கிளையில்  போய் உட்கார்ந்து கொண்டன.  அந்த மரக்கிளையில் கூடொன்றும் இருந்தது. ஒருவேளை அந்தக் குருவிகளின் கூடாகயிருக்கலாம். அந்த  இன்னொரு குருவி  மீண்டும்  இரட்டைக் குருவிகளின்  அருகில் வரவும்  பதை பதைத்த இரட்டைக்  குருவிகள்  கூட்டுக்குள் தஞ்சமடைந்தன..  ஒரு நொடிக்குள்  ஒற்றைக் குருவி   கூட்டின் அருகே வரவும் இரட்டைக்  குருவியில் ஒன்று  வேகத்துடன்  கூட்டை விட்டு வெளியில் வந்து   ஒற்றைக் குருவியை சிறகை விரித்து விரித்து  மடக்கி  விரட்டியது.  அது அந்த மற்றொரு  குருவியைப்  பாதுகாத்தது  சுபாக்கா  தன்  குடும்பத்தை பார்த்துக்  கொள்வது போன்ற நினைப்பைக் கொடுத்தது.  குடும்பம் , பாசம் , அன்பு, ஒருத்தர் மேல்  ஒருத்தர் வைத்திருக்கும் பிரியம்  கொடுக்கும் பயம் எல்லாம் புரிவது போலிருந்தது தீபக்குக்கு.

கீர்த்தியிடம் எப்படிப் பேச வேண்டும்   …என்ன பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டவன் கீழே இறங்கவேண்டும் என்று நினைக்கையில் செல் ஃபோன் அடித்தது……

யாராகயிருக்கும் என்று நினைத்தவன்  ஃபோனைப் பார்த்ததும்  சந்தோஷத்தில்  தானாகவே  புன்னகைத்துக்  கொண்டான்.

அழைத்தது கீர்த்தி. 

தொடரும்

Karai othungum meengal - 12

Karai othungum meengal - 14

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.