அவர் கூச்சல் போட்டுவிடக் கூடாதென வாயை பொத்தி அழைத்துச் சென்றான் தில்லை, சம்யுக்தாவோ தில்லையை திட்டிக் கொண்டே சென்றாள். அவளின் சத்தம் அங்கு யாருக்கும் கேட்கவில்லை, விழாவிற்காக ஆங்காங்கு பெரிய பெரிய ஸ்பீக்கர்கள் கட்டியிருந்தார்கள். அதில் இருந்து வந்த இசையால் இங்கு நடக்கும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை அனைவரும் நிகழ்ச்சியில் மூழ்கியிருக்க தில்லையும் தனது வேலையில் மூழ்கியிருந்தான்.
”சொல்லு சேகரு எங்க இருக்கான்“ என அவரை விசாரிக்க
”எனக்குத் தெரியாது” என சொல்ல அவரை அடிக்க ஆரம்பித்தான், அதைக் கண்ட சம்யுக்தா அலறினாள்
”அவர் பெரிய ஆளு, கெட்டவர் கிடையாது அவரை அடிக்காத”
”யாரு இவனா, வெளி உலகத்தில பெரிய கார்மென்ட்ஸ் வைச்சி உத்தமனா நடிச்சிக்கிட்டு இருக்கான், இவனே ஒரு ஸ்மக்ளிங் பார்ட்டிதான், கள்ளத்தனமா வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செஞ்சி விலை பேசறவன், அவனுக்கு துணை சேகரு, பொருளை கொண்டு வந்து சரியான இடத்தில கொண்டு போய் டெலிவரி பண்ற வேலையை செய்றவன்”
”உனக்கு சேகர் வேணும்னா இவரை ஏன் பிடிக்கற“
”சேகரு எங்க இருக்காங்கற விசயம் இவனுக்கு மட்டும்தான் தெரியும். அதான் இவரை பிடிச்சேன், கண்டிப்பா இவரை நான் கொல்ல மாட்டேன் எனக்குத் தேவை சேகரு மட்டும்தான் உனக்கு இவர் வேணும்னா நீயே இவர்கிட்ட சேகரு எங்கிருக்கான்னு கேட்டுச் சொல்லு போதும்” என சொல்ல சம்யுக்தாவோ
”அங்கிள் அந்த சேகரை பத்தி சொல்லிடுங்க, வீணா இவன்கிட்ட எதுக்காக அடிவாங்கறீங்க”
”எனக்குத் தெரியாது சம்யுக்தா” என்றார்