விஜய் அஜயின் அறை எது என்று அவளுக்கு முன்பே காண்பித்து இருந்தான். அதனால் ஈஸியாகவே அஜயின் அறையை கண்டுப்பிடித்தாள் ரோஹினி.
விஜய் சொன்னது போல அந்த அறை கதவு திறந்து தான் இருந்தது!
சத்தம் போடாமல் மெல்ல நடந்து உள்ளே சென்றாள்.
அஜய் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். அவன் படுத்திருந்த கட்டில் அறை சுவரை ஒட்டி இருந்தது!
மெல்ல கட்டிலுக்கு பக்கத்தில் சென்ற ரோஹினி, அஜய் கட்டிலின் நடுவில் படுத்திருக்கவே, சுவரை ஒட்டி இருந்த இடது பக்கத்தை விட்டு விட்டு, கட்டிலின் வலதுப் பக்க ஓரத்தில் சென்று நின்றாள்.
கையிலிருந்த மை டப்பாவை திறந்து வலதுக் கையில் மையை எடுத்துக் கொண்டாள்...
அவள் நின்றிருந்த இடத்தில் இருந்தும் எட்டி தான் அஜயின் முகத்தை தொட முடிந்தது...
எனவே, கட்டிலின் தலைபாகத்தின் பக்கத்தில் இருந்த ‘மொழு மொழு’ மேஜையில் இடதுக் கையை ‘பேலன்ஸ்’க்காக கெட்டியாக பிடித்துக் கொண்டு, எட்டி, வலதுக் கையால், விஜய் சொன்னதைப் போலவே அஜய் முகத்தில் பெரிய மீசை வரைந்து, தாடியும் வரைந்து, கொசுறாக நெற்றியில் நீட்டமாக பொட்டும் வைத்தவள், மனம் துள்ள அஜயின் முகத்தைப் பார்த்தாள்.
ஒரு வினாடி அதிர்ச்சியில் உறைந்துப் போனாள்!
அவன் அவளை பார்க்க முடியாது எனும் தைரியத்தில் யார் முகத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாளோ, அந்த அஜய் கண்களை கொட்ட கொட்ட விழித்து வைத்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.