Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 03
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
புவனேஸ்வரியின் பக்கத்தில் அமர்ந்திருந்த சித்ரா புவனேஸ்வரியை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
சித்ராவின் கைகள் பாசத்துடன் புவனேஸ்வரியின் தலை முடியை கோதியது. புவனேஸ்வரியிடம் தெரிந்த அண்ணி பார்வதியின் சாயல் சித்ராவின் கவனத்தை ஈர்த்தது. பார்வதி மென்மையானவள் ஆனால் புத்திசாலி. அவள் இருந்த காலத்தில் இந்த வீட்டில் சின்ன பிரச்சனையும் வந்தது கிடையாது. பரமசிவத்திடம் அன்பாக பேசியே அவரை சரியானவற்றை செய்ய வைத்து விடுவாள்.
அதே போன்ற குணமும், திறமையும் புவனேஸ்வரியிடமும் இருந்தது. அண்ணி பார்வதியை விட புவனேஸ்வரியின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று சித்ரா விரும்பினாள்.
அவளுக்கேற்ற பிரின்ஸ் சார்மிங் வருவான் என்ற நம்பிக்கை புவனேஸ்வரிக்கு இருந்ததோ இல்லையோ, சித்ராவிற்கு இருந்தது.
புவனேஸ்வரியின் வட்ட முகமும், பார்ப்பவரின் மனம் கவரும் புன்சிரிப்பும், இடையை தாண்டி நீண்ட அடர்ந்த கூந்தலும், திராட்சையாக மிளிர்ந்த கண் விழிகளும் யாரையும் கவர்ந்து இழுக்க கூடியது.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே புவனேஸ்வரியிடம் அதிகமான அமைதியும், முகத்தில் கண்ணுக்கு தெரியாத திரையும் வந்திருந்தது. காலேஜ் படித்த நாட்களில் சிரிப்பும், பேச்சுமாக இருந்தவள் இப்போதெல்லாம் தேவைக்கு சில வார்த்தைகள் மட்டுமே பேசினாள்.
இதை எல்லாம் சித்ரா கவனித்தாள். பரமசிவத்தின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள் புவனேஸ்வரியை பாதிப்பதை உணர்ந்துக் கொண்டாள்.