பாட்டி அவ்வப்போது சொல்லும் ‘சுமி இறந்த அடுத்த நாளே ஆஃபீஸ் போனவன் அவன்,” என்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் புரிந்து ரேஷ்மிக்கு இப்போது மனம் சுட்டது!
துக்கத்தை எல்லோரும் ஒரே விதத்தில் அணுகுவார்கள் என்று நினைப்பதே தவறு! அன்று அப்பாவிற்கு தேவைப்பட்டது அக்கறையும் அன்பும்...
அதை அவள் உட்பட ஒருவருமே அப்போது மட்டுமல்லாமல் கடந்த இருபது வருடங்களாகவே புரிந்துக் கொள்ளவில்லை!
மனதில் வருத்தம் இன்னும் அதிகமான அதே நேரத்தில் ரேஷ்மியின் மனதில் கேள்வி ஒன்றும் வந்தது... அப்பா மனம் வருத்தப்பட்டது சரி, ஆனால் அதற்காக ஏன் அவளையும் அவரை விட்டு தள்ளியே வைத்திருந்தார்??? அவளிடம் அவர் ஒரு வார்த்தை அன்பாக பேசியதாக கூட அவளுக்கு நினைவில்லையே... ஏன் அவளையும் அவரின் வாழ்வில் இருந்து விலக்கி வைத்தார்???
மற்ற நேரங்களை போல அவளுக்கு இப்போது கோபம் வரவில்லை... மாறாக ஏதாவது காரணம் இருக்கும் என்ற எண்ணம் தான் தோன்றியது!
அப்பாவைப் பற்றி இப்போதாவது முழுவதுமாக தெரிந்துக் கொள்வது என்ற முடிவுடன் டைரியை தொடர்ந்து படித்தாள் ரேஷ்மி!
✽✽✽
அலுவலகத்திலும் கமலை வித்தியாசமாக தான் பார்த்தார்கள். துக்கத்தை மறைக்க உடனே வேலைக்கு வந்திருக்கிறான் என்று அவர்களே தீர்மானித்துக் கொண்டார்கள்.
அது புரிந்தாலும் கமல் எதையும் யாரிடமும் மறுத்து சொல்லவில்லை.
அன்று மாலையே அதிக பணம் கொடுத்து அவனுக்கு மிகவும் பிடித்த சுமித்ராவின் படம் ஒன்றை பெரிய அளவில் ஃப்ரேம் செய்து அறையில் கொண்டு வந்து வைத்தான்.