அன்று காலை முதல் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் அப்படியே ‘அவளிடம்’ ஒப்பித்தான்.
அவனின் செய்கைகளை மற்றவர்கள் பார்த்தால் பைத்தியம் என்று நினைக்கலாம்... ஏன், அவனே இப்படி வேறு யாராவது நடந்திருந்தால் பைத்தியக்காரன் என்று தான் சொல்லி இருப்பான்... ஆனால் இப்போது அதை பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை...
சுமித்ரா அவனுடனே தான் இருக்கிறாள் என்ற நம்பிக்கை, இருண்டுப் போயிருந்த அவனுடைய வாழ்வில் மெல்லிய ஒளியை தந்திருந்தது...
அதை கலைக்க அவனுக்கு விருப்பமில்லை...!
மறு தினமும் அப்படியே செல்ல... அன்று மாலையில், சுமித்ராவுடன் செலவிட்ட கணங்களை யோசித்தப் படியே அலுவலகத்தில் இருந்து வந்துக் கொண்டிருந்தான்....
“இங்கே பாருங்க... ஒரு கணவனுக்குன்னு இருக்க கடமைகள் போலவே ஒரு அப்பாக்குன்னும் கடமைகள் இருக்கு... ரேஷ்மி நம்ம பொண்ணு... அவளை நல்ல படியா வளர்த்து, படிக்க வச்சு... அவளுக்குன்னு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்குற பொறுப்பு நமக்கு இருக்கு... எனக்கு ப்ராமிஸ் செய்துக் கொடுங்க... ரேஷ்மிக்கு எது நல்லதோ அதை செய்வீங்கன்னு...”
கமலுக்கு திகைப்பாக இருந்தது! எப்படி மறந்துப் போனான்???
அவர்களின் ஒரே மகளை நல்ல விதமாக பேணி, பாதுகாத்து வளர்க்கும் கடமை அவனுக்கு இருக்கிறது... சுமித்ராவிடம் சத்தியம் செய்து வேறு கொடுத்திருக்கிறான்...!
வீட்டிற்கு சென்ற உடனேயே ரேஷ்மியை தேடினான்...
அவள் அவன் கண்ணில் படவில்லை...
“ரேஷ்மி எங்கேம்மா???” என்று பூங்கோதையிடம் கேட்டான்.