“உனக்குத் தெரிஞ்ச அதே ஜெயமுருகன் தான் சித்ரா. கொஞ்சம் வருஷம் முன்னாடி நம்ம ஷண்முகராஜன் வீட்டுல வேலை பார்த்தானே அவன் தான். இப்போ பெரிய ஆள் ஆயிட்டான். எனக்கு அவன் பெரியப்பாவை முன்னாடியே தெரியும். இவன் அவர் சொந்தக்காரன்னு தெரியாது. அவர் நம்ம தமிழ்நாட்டுல மட்டும் செஞ்சுட்டு இருந்த ஆட்டோ மொபைல் பார்ட்ஸ் பிஸ்னஸ இந்தப் பையன் நல்லா எக்ஸ்டன்ட் செய்துட்டான். முதல்ல பக்கத்து ஸ்டேட்ஸ், அப்புறம் நார்த்ன்னு போனான். இப்போ வெளிநாட்டுக்கு கூட சப்ளை செய்றாங்களாம். அவனோட பெரியப்பா வாயைத் திறந்தாலே அவனைப் பத்தி தான் பேசுறார். இத்தனைக்கும் அவன் சொந்த செலவுக்குன்னு சின்னதா ஒரு தொகை எடுத்துக்குறது தவிர சம்பளம், லாபத்துல பங்குன்னு எதையுமே தொடுறது கிடையாதாம். அவரு அவனுக்கே அந்த பிஸ்னஸ் கொடுத்துடலாம்னு இருக்கார். அதைப் பத்தி லீகல் டாகுமென்ட்ஸ் ரெடி செய்ய என்னை பார்க்க வந்திருந்தார்.”
சித்ராவின் முகத்தில் பல ரகமான உணர்வுகள் வந்துப் போனது. யோசனையுடன் பின் சீட்டில் இருந்த புவனேஸ்வரியை திரும்பிப் பார்த்தாள். புவனேஸ்வரி அந்தப் பார்வையை எதிர்பார்த்தவள் போல அத்தையின் பார்வையை நேராக, அமைதியாக எதிர் கொண்டாள். சித்ராவிற்கு ஓரளவிற்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனால் கணவன் மேலே கோபமாக வந்தது.
“அவனோட தங்கச்சி வீட்டுக்கு எல்லாம் புவனேஸ்வரியை எதுக்கு அனுப்பி வைக்குறீங்க?” சித்ரா சுள்ளென்று கணவரிடம் எரிந்து விழுந்தாள்..
“என்ன பேசுற சித்ரா? புவனேஸ்வரிக்கு இன்னைக்கு வரைக்கும் ஒரு ஃப்ரென்ட் கூட கிடையாது. அவ வயசுப் பொண்ணுங்க எல்லாம் மொபைல், வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம், ஃபேஸ்புக்ன்னு இருக்காங்க.