புவனேஸ்வரி மொபைல் அஞ்சு நிமிஷம் எக்ஸ்ட்ராவா யூஸ் பண்றத பார்த்திருக்கீயா நீ??? இவ்வளவு நாள் தான் உன் அண்ணனும், ராஜியும் அவளை சுதந்திரமா இருக்க விடலை. இப்போவாவது அவ ஃப்ரீயா இருக்கட்டுமே. அந்தப் பொண்ணு ஆருத்ரா ரொம்ப நல்ல மாதிரி. அவளோட புவனேஸ்வரி பழகுறது கட்டாயம் உதவும்!” சுரேஷ் எந்த படபடப்பும் இல்லாமல் அமைதியாக மனைவிக்கு விளக்கம் கொடுத்தார்.
சித்ரா பல்லைக் கடித்தாள். விபரம் புரியாமல் பேசும் மனிதரிடம் என்ன சொல்லி விளக்குவது?
மீண்டும் புவனேஸ்வரியை திரும்பிப் பார்த்தாள் சித்ரா. புவனேஸ்வரி இப்போது ஜன்னலில் பார்வையை பதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்ராவிற்கு குழந்தை இல்லை! ஆனாலும், ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் சொற்றொடரின் அர்த்தம் சித்ராவிற்கு இப்போது புரிந்தது. புவனேஸ்வரிக்கு எது நல்லதோ அதை தான் அவள் சொல்வாள். அன்றும் சொன்னாள், இனிமேலும் செய்வாள்.
சீக்கிரமே புவனேஸ்வரிக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் நடத்த வேண்டும்.
புவனேஸ்வரியின் மனதை புரிந்து நடப்பவனாய், அவளின் நல்ல குணத்தைப் பாராட்ட தெரிந்தவனாய், அழகை ஆராதிக்க விரும்புவனாய், அருமையான ஒருவனை கண்டுப்பிடிக்க வேண்டும்.
இந்த உலகமே அதிசயிக்கும் வண்ணம் புவனேஸ்வரி மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்த்து தன் மனம் மகிழ வேண்டும்.