“எனக்கு எல்லாத்தையும் கட் அண்ட் ரைட்டா பேசி தான் பழக்கம் புவனேஸ்வரி. எதையும் மனசுல வச்சுட்டு புழங்குற பழக்கம் எனக்கு எப்போவும் கிடையாது. இப்போ முதல் தடவையா என் மனசுல கள்ளத்தனம் வந்திருக்கு. உன்னோட நான் ஃப்ரென்ட்லியா பேசுறேன்னு நீ நினைக்கலாம். ஆனால் நான் அப்படி உன்னை நினைக்கலை. உன்னை வேற உறவுல பார்க்குறேன். உன்னை நான் லவ் செய்றேன் புவனேஸ்வரி. என் உயிரை விட அதிகமா லவ் செய்றேன். உண்மையை சொல்லாம மறைச்சு உன்னோட பேச எனக்கு கஷ்டமா இருக்கு. அதான் நேராவே சொல்லிட்டேன். எனக்கு உன் மேல எப்போ காதல் வந்துச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன். படிச்சுட்டு பொறுமையா யோசிச்சு உன் பதிலை சொல்லு.”
✽✽✽
மனதுள் அலைமோதும் எண்ணங்களுடன் கையில் இருந்த கடிதத்தை மீண்டும் வருடினாள் புவனேஸ்வரி.
அந்தக் கடிதத்தில் தன் பெற்றோர், குடும்ப நிலை என அனைத்தை பற்றியும் மறைக்காமல் எழுதி இருந்தான் ஜெய். அப்படியே தன் படிப்பை முடித்து விட்டு வெளிநாட்டு ஹோட்டலில் வேலைக்கு செல்லும் ஆசையைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தான்.
இந்த கடிதத்தை அவன் கொடுத்தப் போதே அத்தையிடம் பேசி அறிவுரை கேட்டிருந்தால் ஜெய்யின் இதயத்தை நொறுக்க அவசியம் இல்லாமல் போயிருக்குமோ?
அன்றைய பதினேழு வயதில் அது எதுவும் புவனேஸ்வரிக்குத் தோன்றவில்லை! ஜெயின் மேலே அவளுக்கும் ஈர்ப்பு இருந்தது.