Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 33 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அந்த நாள் முதல், ரேஷ்மியை தள்ளி நின்று பார்த்து ரசிப்பதை மட்டுமே பழக்கமாக்கி கொண்டான் கமல்...
விமலும், ரோஷனியும் அவளை தங்கள் குழந்தை போலவே தலை மேல் வைத்து கொண்டாடுவதையும், பூங்கோதை அவளை சீராட்டி பாராட்டி செல்லம் கொஞ்சுவதையும் விலகி நின்றே பார்த்தான்...
ரேஷ்மிக்கு அவன் விரும்பியதுப் போல நல்ல குடும்ப சூழல் கிடைத்திருப்பதற்காக அவன் சந்தோஷப் பட தான் செய்தான். ஆனால் அது அவன் விஷயத்தில் ரேஷ்மியை எந்த விதத்தில் தாக்கப் படுத்தும் என்பதை உணராமலே விட்டு விட்டான்!
பூங்கோதை, கவிதா, விமல் என அனைவரும் கமல் மீதிருக்கும் தங்களின் அதிருப்தியை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை கேட்டு கேட்டு வளர்ந்த ரேஷ்மி அவனை வெறுப்புடனே பார்த்தாள்! அவன் பக்கத்தில் வந்தால் கூட விலகி சென்றாள்.
கமல் அதிகம் பேசாமலே இருந்தது எந்த விதத்திலும் உதவவில்லை!
சுமித்ரா இருந்தப் போது, ரேஷ்மி அவனிடம் கோபத்தைக் காட்டினாலோ, அல்லது பாட்டி, அத்தையின் வார்த்தைகளை கேட்டு அவனிடம் வித்தியாசமாக நடந்துக் கொண்டாலோ, சுமித்ரா மகளை அதட்டாமல், பேசியே அப்பாவை பற்றிய அபிப்ராயத்தை, நல்லெண்ணத்தை உருவாக்குவாள்! இப்போது அவளும் இல்லாத சூழ்நிலையில், கமல் எடுத்திருந்த முடிவு ரேஷ்மியை மொத்தமாக அவனை விட்டு அந்நியமாக்கி இருந்தது!
விஷயம் உணர்ந்தப் போது அவனுக்கு மனம் சுட தான் செய்தது! ஒரு தகப்பனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாக குத்த தான் செய்தது! அதையும் மறைக்காமல் ‘சுமித்ரா’விடம் ஒப்பித்தான்! அவளின் மன்னிப்பைக் கேட்டான்! பதிலாக கிடைத்த புன்னகை அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது!
ரேஷ்மிக்கு நல்ல குடும்ப அமைப்பும், அன்பும், பாசமும் கிடைப்பது முக்கியம்... அது அவள் அவனை வெறுத்து ஒதுக்குவதால் தான் கிடைக்கும் என்றால் அப்படியே இருக்கட்டும்...