(Reading time: 31 - 62 minutes)

24. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ரு வாரமாக அன்பு இல்லத்திற்கு செல்லாததால் அலுவலகம் முடிந்து மாலை அங்கு செல்ல திட்டமிட்ட சந்தியாவுடன் தானும் வருவதாக அவளை சிறிது நேரம் தனது அறையிலே காத்திருக்க சொன்னாள் மது. காத்திருக்கும் நேரத்தில் மதுவின் மேஜையின் எதிரில் அமர்ந்து கொண்டே மடி கணினியில் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தாள். சில மின்னஞ்சல்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த மது, இன்டெர்காமில் சேகர் என்பவரை அழைத்து,

“சேகர், நாம கரக்ட்டா தான் டெலிவரி பண்ணியிருக்கும். ப்ரூப் இருக்கு. பழைய ஈமெயில்ஸ் எல்லாம் சரி பார்த்துட்டேன். மறுபடியும் இன்வாஸ்  அனுப்புங்க. அப்படியும் அவங்க கணக்கை முடித்து காசை அனுப்பவில்லை நம்ம கம்பெனியோட  அமெரிக்க வக்கீல்  மூலமா சட்ட நடவடிக்கை எடுக்கணும்.” என்று முதலாளி தோரணையில் பேசியது சந்தியாவை வியப்புற வைத்தது.

 

அந்த நேரம் அறைக்குள் நுழைந்தது மஹா. அங்கு இருந்த சந்தியாவை பார்த்தவுடன் “ஹாய் சந்தியா, கால் வலி எப்படி இருக்கு?” அன்பாக நலம் விசாரித்தாள். அவளும் பதில் சொல்ல, பின் சந்தியாவிடம்,

 

“ரிக் பராஜெக்ட்ல  உன்னோட ப்ளான் சரியா ஒர்க் அவுட் ஆகிடுச்சு. தேங்கஸ்” என்று நன்றி சொல்லிவிட்டு மது கேட்டு இருந்த கோப்பை கொடுத்து விட்டு விடை பெற்றாள் மஹா.

 

அவள் சென்றதும், “இந்த மஹா காதிகிட்ட உன்னோட ப்ளான் சரியில்லைன்னு குறை சொன்னாங்க. இப்போ ஆளே தலை கீழ்” என்றாள் மது.

 

“நீயும் முதல்ல என்னை தப்பா தானே மது நினைச்சே?”, சந்தியா.

 

“ஆமாம். பாஸ்கிட்ட யாராவது அப்படி பேசுவாங்களா? “, எதிர் கேள்வி கேட்டாள் மது.

 

“நீயும் கார்த்திக் எனக்கு அஜூ விஷயத்தில் உதவி  பண்றார்ன்னு பொறாமைல குத்தலா பேசுன தானே மது? அதான் அப்படி ரியாக்ட் பண்ணேன். ஆனா, அப்போ சத்தியமா தெரியாது நீ ஒரு குழந்தைன்னு...” என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

 

“அதுவா...உன் இண்டர்வியூக்கு முந்தின நாள் தான் கார்த்திக் அமெரிக்காவில் இருந்து  வந்தான். வந்ததுல இருந்து உன்னை பத்தி கேட்டுகிட்டே இருந்தான். கார்த்திக்கிற்கு பொண்ணுங்களை பிடிக்காது. இவன் ஏன் இப்படி கேட்டுகிட்டே இருக்கான்னு எனக்கு டவுட். அடுத்த நாள் காலையில்  சிவா அண்ணாவை பாக்கணும்ன்னு கிளம்பினவன், ஒன்பது மணிக்கு  உனக்கு ஹெல்ப் பண்ண சூர்யாவை சாப்பிட கூட விடாம ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொன்னான்.”

 

“நீ வேற ஸ்மார்ட்ன்னு ரெக்ரூட்மெண்ட் டீம்ல எல்லாரும் சொன்னாங்களா,    இத்தனை வர்ஷம் பழகுன என்னை கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்ன  காதிக்கு ஒரே நாள்ளே உன் மேல ஆசை வந்துடுச்சோன்னு ரொம்ப இல்லை… கொஞ்ஞ்ஞ்சம் பொறாமை. அதான். ஆனா, காதி இல்லை கடவுளே வந்தாலும் உன்னை கவுத்த முடியாதுன்னு உள்ளங்கை நெல்லிக் கனி போல என் ஞானத்திற்கு எட்டி விட்டது.” என்றாள் பெருமையாக.

 

“ஹையோ….என் அறிவுக் கொழுந்து...” சற்று எக்கி மதுவின் தலையை தடவி  சொடக்கு போட்டு திருஷ்டி கழிப்பது போல செய்தாலும் மனதிற்குள்,

 

“காதி மேல காதல்ன்னு ஏதாவது ட்ரைஆங்கிள் பார்ம் ஆக்கிடாதம்மா!!! தமிழ் சினிமாலே இதை சமாளிக்க முடியாம ஒரு ஹீரோயின் கதையை முடிச்சு தான் கதையை  முடிப்பாங்க” என புலம்பினாள் சந்தியா.

 

“இப்போ புரியாதா என்னை ஏன் பிக் கேர்ள்ன்னு சொல்றாங்கன்னு” , விளம்பர பாணியில் கேட்டாள் மது...

 

“நீ சேகர் கூட பேசுனப்போ நான் கூட ஒரு நிமிஷம் அப்படி தான் தப்பா நினைச்சேன்”

 

மது முறைத்தாள்.

 

“சரி நீ பிஸ்னஸ்ல பெரிய ஆள்  தான்...ஒத்துக்கிறேன்...கூல் டவுன்….பேபி பிக் கேர்ள் “ என  சமாளிப்பாக சொல்லி விட்டு,

 

“கார்த்திக்கை கல்யாணம் பண்ணனும் நிஜமாவே ஆசை இருக்கா உனக்கு?” கேட்டாள்.

 

“ஆசைன்னு  சொல்ல முடியாது… அவன் மேல இருந்த நம்பிக்கை.  எங்க குடும்பத்தில நெருங்கின சொந்தத்தில் கல்யாணம் பண்ண மாட்டாங்க. ஆனா, எனக்காக காதிகிட்ட கேட்டு பாத்தாங்க.

 

“இத்தனை வருஷத்தில என்னைக்காவது என்னை உன் புருஷனா நினச்சு பாத்திருக்கியா மது? “ன்னு காதி கேட்டான்.

“ஊகூம். ஆனா, எனக்கு வேற யாரும் மேலயும் நம்பிக்கை வரலை. உன்னை புருஷனா நினச்சா நம்பிக்கை வருது”ன்னு சொன்னேன்.

 

அதுக்கு காதி, “என்னால சத்தியமா அப்படி நினச்சு கூட பாக்க முடியலைடா  மொட்டை” ன்னு சொல்லி கண் கலங்கினான்.

 

“ப்ச்..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எதுக்கு காதி கவலை பட்டான்னு புரியலை.  நான் அழகா இல்லைன்னு நினைக்கிறாயா” ன்னு கேட்டேன்.

 

“லூசு. அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு. இப்போ என்னால கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியாது. இதை பத்தி இனி என்கிட்ட பேசாத ப்ளீஸ்” ன்னு அழுகுற மாதிரி சொல்லிட்டு போயிட்டான்.

 

அப்ப கூட நான் அழகா இல்லைன்னு காதிக்கு பிடிக்கலை போலன்னு  நினச்சேன். நேத்து ராத்திரி நீ சொன்ன பிறகு தான் அவன் நிலைமை புரியது. நானுமே ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வுக்காக மட்டும் தான் காதியை கல்யாணம் செய்யணும்ன்னு நினச்சேன். அவ்வளவு தான். இந்த அளவுக்கு நெருக்கமான வாழ்க்கை யார் கூடவும் என்னால வாழவே முடியாது. ” தீர்மானமாக சொன்னாள் மது.

 

“உன்னை தான் கல்யாணம் பண்ணனும்ன்னு  ஒருத்தன் எட்டு வருஷமா ஒத்த கால்ல நின்னுகிட்டு இருக்கான்...நீ என்ன இப்படி பேசிகிட்டு இருக்க?” அதட்டுவது போல கேட்டாள்..

 

“என்னையா?” அதிர்ச்சியும் வியப்பும் ஒரு சேர கேட்டவள்,  “ நீ பொய் சொல்ற!” நம்ப முடியாமல் சொன்னாள்.

 

“உன் மேல அவர் உயிரையே வச்சிருக்கார் மது. உன்னை கல்யாணம் செய்ய ஆசை இருக்கு. அதை சொன்னா எங்க நீ மறுபடியும் டிப்ரஷன் வந்து சிரம படுவியோன்னு,  நீயா மனம் மாறுவன்னு  காத்துகிட்டு இருக்கார்.  “ என விவரித்தாள்.

 

“யாரு அது? “, மது அதிர்ச்சி விலகாமல் மீண்டும் கேட்டாள்.

 

“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?  யாருக்காகவும் உன் முடிவை மாத்த மாட்ட தான?” அலட்சியமாக கேட்டாள் சந்தியா.

 

“ஆமா மாற மாட்டேன் “, உறுதியாக சொன்னாள் மது.

 

“அவரும் மாற மாட்டார். வாழ்ந்தா உன்னோடு தான் வாழ்வாராம். இல்லாட்டி பேச்சிலராவே  இருந்துடுவாராம். ஏற்கனவே எட்டு வருஷம் கழிந்து போச்சு...இன்னும் எத்தனை வருஷமோ???!!!!” அவருக்காக வருந்துவது போல சொல்லிக்  கொண்டே கிளம்பினாள் சந்தியா.

 

மதுவின் மனம் அந்த அவருக்காக லேசாக இளகியது. “சந்து யாருன்னு சொல்லு. எனக்காக வெயிட் பண்ணாம செட்டில் ஆக சொல்லி நான் பேசுறேன். “

 

“உனக்கு அவர் யார்ன்னு தெரிஞ்ச்கிக்கணும்ன்னு ஆசை இருந்தா வெளிப்படையா கேளு. அதுக்காக இப்படி சுத்தி வளைச்சு எல்லாம் கேட்டா நான் சொல்ல மாட்டேன்.” என்றாள் சந்தியா குறும்பாக.

 

“எட்டு வருஷம் என்ன எம்பது வருஷம் காத்து கிடந்தாலும் எனக்கு இரக்கம் வேணா வரும். ஆனா ஆசை வராது சந்தியா. “ மது சொல்லும் போது அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

“உன்னை நினச்சு தவிக்கிறவருக்காக உன்னால இரக்கப் பட முடியதுன்னா நல்லது! உன் ஒதுக்கத்தை விட  இரக்கம் பெட்டர்! இதை பத்தி அப்புறம் பேசலாம். இப்போ ஹர்ஷினிக்கு புது போர்வை வாங்கணும். டைம் ஆகுது கிளம்பு “ அவளை அவசரப்படுத்தினாள்.

 

ஹர்ஷினியை சொன்னவுடன் சுவிட்சு போட்டது போல மது அழுகை நின்று விட்டது. மனம் பறந்து அவளின் விருப்பமான குழந்தை மீது பாய்ந்தது. “இதுக்கும் அந்த சோடாபுட்டி ஏதாவது சொல்லுவாரா?” வருத்தத்துடன் கேட்டாள்.

 

“ நான் பாத்துக்கிறேன். நீ வா. ” என்று சொல்ல இருவரும் காரில் ஏறினர். காரை  ஓட்டுனர் ஓட்ட பேச வசதியாக இருக்கும் என இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.