(Reading time: 26 - 51 minutes)

ந்த வீட்டின் நீச்சல் குளத்தோடு அமைந்த தோட்டப் பகுதியில் புபே முறையில் உணவு பரிமாறப் பட்டது. இரவு உணவு முடிந்த பின், வீட்டின் பின்புறம் கடல் காற்றை வாங்கிக் கொண்டே அரட்டை கச்சேரியை தொடர்ந்தனர்.

சந்தியாவின்  கட்டளையை செயலாற்ற கார்த்திக் சிவாவுடன் அங்கிருந்த கும்பலில்  ஐக்கியமானான். கும்பலோடு இருந்தாலும் ஜோடிப் புறாக்களாக சக்தி - எம்.எஸ், மது - நிரு சுற்றிக் கொண்டிருந்தனர்.

சந்தியாவும் யாதவ்வும் இணைந்து  விளையாட்டுகளை நடத்த ஆரம்பித்தனர். “டூயட் ரவுன்ட்” என்று இருவர் இணைந்து பங்கேற்கும் விளையாட்டை ஆரம்பித்தனர்....சினிமாவில் நாயகனும், நாயகியும் பேசும்  வசனம், அல்லது பாட்டு, அல்லது நடனம் என்று ஏதாவது ஒன்றை ஜோடியா வந்து செய்து காண்பிக்க வேண்டும்!

முதலில்  சின்னா தாத்தாவும், சுலோ பாட்டியும் இணைந்து,

“ஓஹோ..என் தன் பேபி..”

பாட்டை பாட, விசிலடித்தும், கை தட்டியும்   இளையவர்கள் ஆரவாரித்துக் கொண்டாடினர்…

அடுத்து எம். எஸ்.ஸும், சக்தியும்… “காக்க காக்க” படத்தின் வசனத்தை பேசினர்…

சக்தி: “நான் ஒரு குவாலிபைட் மேத்தமேட்டிசியன்...சிம்பிளா சொல்லணும்னா நான் ஒரு கணக்கு மேதை“ என வசனத்தை ஆரம்பிக்க, “சக்கு மக்கு, நீ ஒரு மக்கு மேதை” என நண்பர்கள் கிண்டலடிக்க அந்த இடம் களைகட்டியது.

எம். எஸ்: “ம்ம்...அப்புறம்”, என போலீஸ் மீசையை தடவியவாறு (சூர்யா போலவே இம்மி பிசகாமல் செய்து காமிக்கிறாராம்)

சக்தி: “ஆங்….சின்ன வயசுல நான் ரொம்ப குண்டா இருப்பேன். இப்போ டயட், எக்ஸர்சைஸ்ன்னால இப்படி இருக்கேன்”

எம். எஸ்: அவளை ஏற இறங்க பார்த்த படி “ஒல்லியா?!!!!” என்றார் அதிருப்தியாய்.

சக்தி: “ஆமா, ஒல்லியா” , உறுதியான குரலில்,

அதற்கு “யப்பா...முழு பூசணிக்கா சோத்துல ஒளிந்து  கொள்ள ட்ரை பண்ணுதுப்பா” என சிவா கிண்டலடிக்க அவனை முறைத்தாள் சக்தி..

எம். எஸ்: “இவ்வளோ நாள் நீ எங்க இருந்த”

சக்தி: “இங்க தான் இருந்தேன்..நீங்க தான் என்னைப் பார்க்கலை”

சிவா அதற்கு, “பாத்திருந்தா டுயூட்டி கிளம்புறப்போ திருஷ்டி சுத்த பூசணிக்காய் கிடைத்திருக்கும்” என மீண்டும் கேலி செய்ய,

“பாருங்க என்னை பூசணிக்கான்னு கிண்டல் பண்ணிகிட்டே இருக்கான். இவனை என்கவுண்டர்ல போட்டு தள்ளுங்க” என சக்தி சொன்னவுடன் அவர் பேன்ட் பாக்கெட்டில் கையை விட, அரண்டு போன சிவா உயிர் பயத்தில், படக்கென எம்.எஸ். முன் சென்று முட்டி காலிட்டு,

“ப்ளீஸ் சார்… என்னை கொன்னுடாதீங்க நீங்க பூசணிக்காயை காட்டி கேட்டா கூட  புடலங்காய்ன்னு தான் சொல்லுவேன்.. “ என அவர் கையை பிடித்து கெஞ்சுவது போல சொன்னதும்  அனைவரும் சிரித்தனர்...

“நான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இல்லை. சைபர் கிரைம்.” என்றவர், பாக்கெட்டில் இருந்து சீவிங் கம்மை எடுத்து வாயில் போட்டார்…

இதை கண்ட சிவா, “என்ன சார் கம் எடுக்க தான் கன் எடுக்கிற மாதிரி பில்டப் கொடுத்தீங்களா...நீங்க நிஜ போலீஸ்ஸா? சிரிப்பு போலீஸ்ஸா” என நக்கலடிக்க, அவர் முறைக்க, “சீரியஸ் போலீஸ்ன்னு சொல்ல வந்தேன்...நாக்கு சுளுக்கி வழுக்கி சிரிப்புன்னு...ஹி..ஹி…நீங்க எத்த பெத்த ஆபிசர்” என வழிந்தான். அவனை பெரிதாக கண்டு கொள்ளாமல்,

சக்தியைப் பார்த்தவாறு, “நீ எதுக்கு பீல் பண்ற சக்தி! குண்டா இருக்கிறதும் அழகு தான! என் பூசணிக்காயை எனக்கு பிடிச்சிருக்கு!” என அவள் தோள் மீது கைப் போட்டு எம்.எஸ் காதலுடன் பார்க்க சக்தி பூரித்தாள்! நண்பர்கள் ஓவென கத்தி கரவோசம் எழுப்பினர் நண்பர்கள்.

“அடுத்து நிரு மது ஜோடி” என அறிவித்தான் யாதவ்.

“நாங்க  பாடுது” என நிரஞ்சன் ஆர்வமாக சொல்ல,

அதற்கு சிவா, “தெய்வமே! ப்ளீஸ்...இந்த இடத்தை கலவர பூமியாக்கிடாத!” என்றான் பயந்தவாறு.

யாதவ் நிருவையும் மதுவையும் பார்த்து, “உங்க ரெண்டு பேருக்கும் அலைபாயுதேலே மாதவன்  ப்ரபோஸ் பண்ற டயலாக்ன்னு டிசைட் பண்ணிட்டோம்” என சொல்லி விட்டு “அதானே ஒளவை?” என சந்தியாவிடம் கேட்க அவள் தலையசைத்தாள். கார்த்திக் கர்ம சிரத்தையாய் அங்கு நடப்பவைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

“ஹே...நிருவுக்கு ப்ராக்டிஸ் டைம் வேணும்ப்பா…” என மது சில நிமிடங்கள் அனுமதி கேட்க, “வேற யாராவது பெர்பார்ம் பண்றீங்களா” என சந்தியா மற்றவர்களிடம் கேட்டாள்.

“காதி நல்லா பாடுவான்...பாடு காதி” என்றார் சின்னா தாத்தா.  “அப்போ நானும் காதியும் சேர்ந்து டூயட் பாடுறோம் “ என்றாள் காயத்ரி.

“அடுத்த ஜோடி எங்க காலேஜ் லேடி காகாவும் கார்த்திக்கும்” என யாதவ் அறிவிப்பு வழங்க சந்தியாவிற்கு பொறாமை வந்தது! கார்த்திக் தேர்ந்தடுத்த பாட்டை இருவரும் பாடினர்.

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்

ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்

ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

ஓயாத தாபம் உண்டாகும் நேரம் நோயானதே நெஞ்சம்

ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம்

நடந்தவை எல்லாம் கனவுகள் என்று

மணிவிழி மானே மறந்திடு இன்று

ஜென்ம பந்தம் விட்டுப்போகுமா..

பாடி முடித்ததும் விழித்த அவன் கண்கள் அவனையும் மீறி அவனுக்காக   எதிர்பார்த்து காத்திருந்த அவள் விழிகளை பார்வையால் உரசி விட்டு திருப்தியுடன்  திரும்பியது! இப்படியே சந்தோஷமாக நேரம் கழிய, சற்று நேரத்தில் சந்தியாவிடம் வந்த சிவா,

“சிஸ்டர் எனக்கு ஜோடியே இல்லை...நீங்களாவது  வாங்க…நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் கண்ணை மூடினா போதும்.” என அழைக்க, சரியென ஒத்துக் கொண்டாள்.

சிவா சொன்னதும் அவனருகில் நின்ற கார்த்திக் அவன் காதருகில், “மச்சி, இன்னும் கல்யாணம், ஹனிமூன்னு எதுவுமே நடக்கலையேடா...அதுக்குள்ள அவளை கண்ணை மூட சொல்ற...அப்புறம்  கன்னி பையனா என் காலம் கழிந்திடுமே”, என கிசுகிசுக்க,

கடுப்பான சிவா, “தூங்குற மாதிரி நடிக்க சொன்னதுக்கு ஏன்டா பக்கம் பக்கமா காதல்  டயலாக் சொல்லி கழுத்தறுக்கிற. காதுக்குள்ள வந்து குடைஞ்சுகிட்டே இருந்தா என்னால சரியா பெர்பார்ம் பண்ண முடியாது! கொஞ்சம் நேரம் அப்படி ஓரமா ஒதுங்கி இரு...” என்று கார்த்திக்கை விரட்டாத குறையாக அனுப்பி விட்டான்.

அந்த கும்பலுக்கு நடுவே தலையணையை போட்டு சந்தியாவை உறங்குவது போல நடிக்க, அவளை பார்த்த சிரித்த வண்ணம் சில நொடிகள் நின்றான். அடுத்த இரண்டு நொடிகள் சுவரைப் பார்த்து சிரித்த வண்ணம் நின்றான்.

“இவன் என்ன பண்றான்?” என யாதவ் கார்த்திக்கிடம் கேட்க, “பெர்பார்ம் பண்றானாம்” என்றான் கார்த்திக். அனைவரும் சிவாவின் செய்கை புரியாமல் குழம்பும் பொழுது,

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்….

அண்ணன் வாழ வைப்பான் என அமைதி கொண்டாள்

என அவன் பாடியவுடன் அங்கே சிரிப்பலை. அதைக் கண்டு சந்தியா எழுந்து, “தங்கை அமைதி கொண்டாள் இல்லை..வெறி கொண்டாள்..” என சந்தியா எழுந்து அடிக்க வர  மறுபடியும் கலகலப்பு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.