(Reading time: 13 - 25 minutes)

 

"தி...இன்னிக்கு தான் எல்லா உண்மையும் சொன்னான்.எனக்கு,அவன் மேலே கோபம் தான் வந்தது.ஆனாலும் எங்களுக்குள்ளே இருக்கிற நட்பு என்னை விட்டுக் கொடுக்க விடமாட்டேன்குது....அன்னிக்கு அவன் இருந்த நிலையை யோசிம்மா...இப்போ நான் அவனை மன்னிக்க சொல்லலை. உன் மன்னிப்பை வாங்கிற தகுதியை பெற அவனுக்கு ஒரு வாய்ப்பு தான்னு தான் கேட்கிறேன்...மதுபாலாவிடம் பதில் இல்லை.

"இந்த உலகத்திலேயே ரொம்ப பெரிய தண்டனை மன்னிப்பு தான்..அந்த தண்டனையை என் நண்பனுக்கு தா மது...!"-அவள் விசித்ரமாய் ரகுவை பார்த்தாள்.

"அக்கா...நான் அப்பாகிட்ட பேசணும்க்கா....அவர்கிட்ட பேசிட்டு தான் என் முடிவை சொல்ல முடியும்.."அவள் தன்னிடம் பேசாமல் பவித்ராவிடம் பதில் அளித்தது,ரகுவிற்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

"பேசு மது...!தாராளமா பேசு நான் உன்னை வற்புறுத்தலை....உனக்கு சரின்னு தோணுறதை பண்ணு.நான் கிளம்புறேன்."-!!ரகு சென்றவுடன்....

"நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கிறேன்கா."

"சரி மது..."-பவித்ரா அவ்விடத்தை அகன்றவுடன்,ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள் மதுபாலா.இரவு தந்தையிடம் பேசும் பட்சத்தில் அவர் என்ன கூறுவார்?மறுபடியும் ஆதித்யா சரணுக்கு தன் வாழ்வில் இடம் கொடுக்க நேரிடமோ?அப்படி நடந்தால்,இயல்பான மனநிலையில் இருக்க முடியுமா?என்று பல வேறு கோணங்களில் யோசிக்கலானாள் அவள்.

ன்றிரவு.....

தன் கைப்பேசியை எடுத்து தன் தந்தை மகேந்திரனை அழைத்தாள்.

'ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள்  மழலையின் மொழி கேட்டு'-என்ற பாடல் இனிமையாக ஒலித்தது.பின் இணைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

"ஹலோ...மது."

"அப்பா."

"என்னடா?ராத்திரி நேரத்துல போன் பண்ணிருக்க?எதாவது பிரச்சனையா?"

"இல்லப்பா...உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்.அம்மா தூங்குறாங்களா?தொந்தரவு பண்ணிட்டேனா?"

"கங்கா தூங்கிட்டாடா!என்ன நீ தொந்தரவு அது,இதுலாம் பேசிட்டு..உன் போன் எடுக்காம,என்ன பண்ண போறேன்?"

"அப்பா..."

"நீ என்ன கேட்க வந்தயோ கேளுடா!"

"அப்பா...நான் எதாவது இது வரைக்கும் தப்பு பண்ணிருக்கேனா?"-அவளின் அந்த கேள்வி அவரை திகைக்க வைத்தது.

"என்னாச்சுடா?ஏன் இப்படி கேட்கிற?"

"இல்லப்பா...நான் சின்ன வயசில பிரிந்த ஒருத்தர்,இப்போ தான் பண்ணது மொத்தம் தப்பு தான்னு,வந்து மன்னிப்பு கேட்கிறாரு,எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலைப்பா...அதான்.!"-அவள் சுற்றி வளைத்து கூறினாலும்,அவருக்கு புரியாமல் இல்லை.

"அவர் பேர் என்னம்மா?"

"அதுப்பா...."

"சரி விடுடா...!என்னடா?இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகுவியா??உங்க இரண்டு பேருக்கும் வந்து பிரிவு நிரந்தரம் இல்லைடா!அது...தற்காலிகமானது தான்.உனக்கு அவர் மேல அன்பு இல்லைன்னா,நீ அவருக்காக இப்படி வருத்தப்பட்டுக்க மாட்ட!இப்போ உனக்கு என்ன தெரியணும்?அவரை மன்னிக்கலாமா?வேணாமா?தானே!"

"ஆமாப்பா...!"

"சின்ன வயசில உனக்கு மஹாபாரதம் கதை சொல்லுவேன் ஞாபகம் இருக்காடா?அதுல,நிறைந்த சபையில திரௌபதி மானம் சூறையாடப்படும்,அவளோட கணவர்கள் முன்னாடியே யாக வேள்வியில் தோன்றிய அந்த மஹா பத்தினி தாயை மோசமாக பேசுவான் துரியோதனன்.ஆனா,அதே சமயத்துல கெட்டவனா இருந்தாலும் பரவாயில்லைன்னு மன்னிப்பு தருவா...அந்த பாஞ்சாலி! அதுக்கு அப்பறம் போர் நடந்தது...அதெல்லாம் வேற விஷயம்.திரௌபதி நினைச்சிருந்தா அஸ்தினாபுர அரசவையே மண்ணோட மண்ணா அழித்திருக்கலாம்! அந்த சக்தி அவங்களுக்கு இருந்தது.ஆனா,அவங்க அப்படி செய்யலை.மன்னிப்பு மூலமா எதிரிகள் திருந்த வாய்ப்பு தந்தாங்க...அதை கவுரவர்கள் பயன் படுத்திக்கலை அவ்வளவு தான்..! இது மூலமா வழக்கம் போல உனக்கு வழி காட்டிட்டேன்...இனி நீ தான் யோசிக்கணும்.உன் முடிவு எதுவாக இருந்தாலும் அது என் முடிவு சரியா??"

"ம்...சரிப்பா!"

"சரிடா...நேரமாகுது பாரு..!போய் தூங்கு..விழிச்சிட்டு இருந்த அப்பறம் டாக்டர் மேடம் தப்பு தப்பா மருந்தை எழுதி தந்திட போறீங்க...போங்க போய் தூங்குங்க..."

"சரிப்பா..."-என்று இணைப்பை துண்டித்தாள்.இது சரி தானே! தந்தையும்,ஆசானும் ஒரே பணியை அல்லவா செய்கின்றனர்?மறுப்பவர்கள் எவரேனும் உண்டா?தன் மகளின் மனநிலையை புரிந்து,மஹாபாரத பாஞ்சாலியை உதாரணம் காட்டி,அவள் முடிவே தன் சித்தம் என உரைக்கும் தந்தையை விட சிறந்த ஆசான் வேண்டுமா??அதுசரி ...இனி மதுபாலாவின் முடிவு தான் என்ன??அக்கறைக்கு,இக்கறை பச்சை பசேலென்று இருக்கும் இயற்கை இறுதி காலத்தில் ஆடும் கோர தாண்டவமா?அல்லது....செஞ்சூரியன் கதிரொளியினால் மிருதுவாக அணைக்கப்படும் வெண்ணிலவின் தேகமா?பார்ப்போம்.....

றுநாள் காலை.......

வழக்கமான காலை விடியல் விடிந்தது.இது என்ன என்றுமே இல்லாத நிம்மதியும்,மகிழ்ச்சியும் மதுபாலாவின் முகத்தில் தெரிகிறதே..! இது பலரின் முகத்தில் சோகத்தை அல்லவா வரவழிக்கும்??

"அக்கா...வெளியே போயிட்டு வரலாமா??"

"மது??"

"என்னக்கா?"

"நான் ஒண்ணு கேட்கட்டா?"

"என்ன?"

"ரகு அண்ணா..."

"ரகுவிற்கு என்ன?"

"அவர் நேற்று சொன்னதைப் பற்றி......"

"என்ன சொன்னான்....ஓ..!அந்த சி.பி.ஐ.ஆபிஸர் விஷயம்ல?"

"மது என்ன நீ வித்தியாசமா பேசுற?"

"இல்லக்கா...!"

"அப்போ! முடியாதுன்னா சொல்ற??ஏன்....மது யாராக இருந்தாலும் திருந்த ஒரு வாய்ப்பு தரணும்...ஆனா,நீ ஏன் இப்படி பண்ற?நீ செய்றது நியாயமே இல்லடா....!"-என்று பேசிக் கொண்டே சென்றாள் பவித்ரா.

"அக்கா...நீ ஏன் அக்கா...பட்டிமன்றத்துல பேசுறா மாதிரியே பேசுற??இப்போ உனக்கு என்ன தெரியணும்?"

"சரண் விஷயத்துல உன் முடிவு தான் என்ன?"-அவள் சிறிது நேரம் மௌனம் காத்தாள்.பின்,

"சொல்றேன்க்கா...எல்லா பிரச்சனைக்கும்,ஒரு முடிவு சொல்றேன்....சாயந்திரம் சரணை பார்க்குக்கு  வர சொல்லு...!இன்னிக்கு அவனோட தண்டனையை அவனுக்கு நான் தரேன்."-அவள் பேசிய தோரணையில் இருந்தே! பவித்ராவிற்கு அவள் முடிவு புரிந்தது.உங்களுக்கும் புரிந்திருக்கும் தானே? 

தொடரும்...

Go to EUU # 03

Go to EUU # 05

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.