(Reading time: 26 - 51 minutes)

 

ரிகா சாதாரணமாக என்றால் பேசமாட்டாள் யாரிடமும்… இவன் அவ்னீஷின் அண்ணன், அதிலும் ஷன்வி வாழப் போகிற வீட்டில் தான் இவனும் வசிக்கின்றான்… அவனுக்கு பதில் சொல்லாமல் இருப்பது முறையல்ல என்று எண்ணியே அவளும் அவன் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தாள்…

அவ்னீஷ்-ஷன்வி வருவதைப் பார்த்த ஆதர்ஷ்… அவ்னீஷிற்கு போன் செய்தான்…

“எங்கேடா இருக்கிற?...”

“ஆ…பீ..சி…ல்… அண்ணா…”

“ஓ… இதுதான் ஆபீசா?....” என்றபடி அவனின் முன்னே வந்து நின்று கேட்டான் ஆதர்ஷ்…

அவ்னீஷ் கிட்டதட்ட மயக்கம் போடாத குறைதான்…

“அ….ண்……………..ணா..”

“அதை ஏண்டா இப்படி இழுக்கிற சவ்வு மிட்டாய் மாதிரி…”

“இல்லை… வந்து…”

“அதான் வந்துட்டேனே… சொல்லு…”

“அ….ண்…ணா….. வந்து…”

“நீ ஷன்வியை விரும்பற… அந்த பொண்ணும் விரும்புறா… சரியா?...”

“ஆமா அண்ணா… நீங்க தான் வீட்டில் பேசி சம்மதம் வாங்கணும்…”

“ஷன்வி வருகையே நேற்று வீட்டில் சம்மதம் வாங்கிட்டு டா… சோ… அடுத்து கெட்டிமேளம் தான்… கவலைப் படாதே…”

ஆதி சொன்னதை கேட்ட மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்…

நேற்று அவளின் சம்மதம், இன்று வீட்டின் சம்மதம்… என்று அவ்னீஷ் துள்ளி குதித்து ஆதியை தழுவிக் கொண்டான்…

“டேய்… டேய்… போதும்டா… கொஞ்சம் மிச்சம் வச்சிக்கோ…” என்றதும்

“போங்க… அண்ணா…” என்று வெட்கமும் கொண்டான் அவ்னீஷ்…

“அடப்பாவி இது வேறயாடா?... என்னால முடியலைம்மா ஷன்வி… நீயே இந்த கொடுமையெல்லாம் பார்த்துக்க… நான் வரேன்…” என்றபடி நடந்தவனின் பின்னாடியே வேகமாய் ரிகா போனில் பேச சென்றதை அவ்னீஷும் சரி, ஷன்வியும் சரி பார்க்கவில்லை…

தன் பின்னால் யாரோ வருவதை உணர்ந்தவன், திரும்புகையில் வேகமாய் வந்தவள் அவனின் மீது மோத போக, சட்டென சுதாரித்து அவளின் விரல் நுனி கூட அவன் மீது படாமல் ஒதுங்கி விட்டாள் ரிகா… அந்த பதட்டத்தை அவன் விழிகள் கண்டு கொண்டது…

அவள் தன்னை சமாளித்து கொள்வதையே பார்த்திருந்தவன், அவளாக பேசட்டும் என்று கைகட்டி நின்றான்…

ஒருவழியாக அவள் தன்னை சுதாரித்து தன்னிலை வந்தபின், அவனின் தோரனையைக் கண்டவளின் விழிகளில் கேள்வி எழுந்தது…

அதைக் கண்டவனின் இதழ்களில் புன்சிரிப்பு உண்டானது…

அதை கவனித்தும் கவனியாதது போல், அவனிடம், “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை… ஹரீஷ் இப்போது தான் போன் செய்தார்…” என்றாள்…

“ஹரீஷ்… !!!...”

“ஹ்ம்ம்… ஆமா… ஷன்வியை உங்களின் குடும்பத்தில் ஒருவராய் வீட்டு பெரியவர்கள் முடிவு செய்த போதும், நீங்கள் மட்டும் ஷன்வியைப் பற்றி நல்ல விதமாய் சொல்லாமல் இருந்திருந்தால் சம்மதிக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு சீக்கிரம் ஷன்வியின் திருமணம் ஈடேறியிருக்காது…”

“ஓ…” என்றவன்.. “ஸ்கூல் ஈவ்னிங் 3.30 தானே முடியும்?” என்று வினவ,

அவள் ஆமாம் என்று தலை அசைத்தாள்…

“ஹ்ம்ம்… சரிங்க… நேரமாச்சு… நான் போறேன்…”

“ஒரு நிமிஷம்…”

“என்ன?....”

“வந்து….”

“சொல்லுங்க…”

“வெளியே போகும்போது போறேன்னு சொல்லக் கூடாது, போயிட்டு வரேன்னு சொல்லணும்…”

அவன் வியப்பாய் அவளைப் பார்க்க, அவளோ வெள்ளந்தியாய் சிரித்தாள் அளவாக…

“ஹ்ம்ம்ம்… நான் எதுவும் இல்லாததை சொல்லலை… ஷன்வி பற்றி உண்மையை தான் சொன்னேன்… அதுவும் இல்லாமல் வீட்டில் அவங்களை முதலிலேயே எல்லோருக்கும் பிடித்துவிட்டது…. அது தான் முதல் காரணம்… அப்பறம்….” என்று நிறுத்தி அவளைப் பார்த்தவன், வரேன் என்று சொல்லி சென்று விட்டான்…

அவன் சென்ற திசையையேப் பார்த்து கொண்டிருந்தவள், ஷன்விக்கு நல்லது நல்லபடியாக நடக்க வேண்டுமென்று மனதார வேண்டினாள் அந்த ஸ்ரீராமனை… அதைக் கேட்டு கொண்ட ஸ்ரீராமனோ, தனது மனைவி சீதாவுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தார்…

சுந்தரம் சொன்ன பெண்ணின் தந்தை பற்றி தன் துப்பறியும் நண்பனிடம் விசாரித்தவன், அவன் சொன்ன தகவல்களைக் கேட்டு வீட்டிற்கு சென்றான்…

வீட்டிற்குள் நுழைந்ததும் அவனின் பதிலை எதிர்பார்த்தவாறு எல்லோரும் அமர்ந்திருக்க, “அப்பா, உங்களுக்கு ராமச்சந்திரன் அங்கிள் தெரியும்தானே… அவர் தான்… நீங்கள் உங்களின் மகனுக்கு பேசி முடிக்கப் போகும் பெண்ணின் தந்தை… அவர் நம்ம கம்பெனிக்கு முன்னாளில் பொருட்கள் சப்ளை செய்தவர்… அவர் ஒரு விபத்தில் இறந்துவிட, இந்த பெண் தனியாக தன் தந்தை நடத்தி வந்த தொழிலை ஒரு அநாதை ஆசிரமத்திற்கு தந்துவிட்டு, இந்த ஸ்கூலை நடத்தி வருகிறாள்… அவளுக்கு முழுக்க முழுக்க துணையாக இருப்பது அவளின் வீட்டில் அவளுடனே தங்கி இருக்கும் செல்லம்மாள் பாட்டி தான்… அவர்களுக்கும் யாருமில்லை… இதில் இன்னொரு விஷயம்… ஷன்வி-ரிகா இருவரும் கல்லூரியிலிருந்து தோழிகள், அந்த பெண்ணிற்கும் யாருமில்லை… ஷன்வியைத் தவிர… நீங்கள் தாராளமாக அவ்னீஷிற்கு ஷன்வியை முடிவு செய்யலாம்… இன்றே கூட பேசி முடித்துவிட்டு வந்துவிடலாம்… அவ்னீஷிற்கும் அந்த பெண் என்றால் மிக இஷ்டம்… சீக்கிரம் திருமணம் நடந்தால் அவன் சந்தோஷப்படுவான்…” என்று முழுமூச்சாக பேசியவனை சுந்தரம் சலனமில்லாது பார்த்தார்…

மகன் விரைந்து செயல்பட்டதில் அவருக்கு பெருமிதம் தான்… அவர், கேட்காமலே, தனது நண்பனின் மகள் தான் ஷன்வி என்று தெரியப்படுத்திவிட்டானே.. இதிலெல்லாம் கில்லாடி தான்… என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டவர்,

“சரிப்பா.. எப்போ வச்சிக்கலாம்?...”

“உங்க எல்லோருக்கும் எப்போ பிடிச்சிருக்கோ அப்பவே வச்சிடலாம்… என்னம்மா… சரிதானே…”

“சரிதான் ஆதி…”

“அம்மா… அதற்கு முன் ஒரு விஷயம்… முகிலன் அவ்னீஷிற்கு மூத்தவன், அதனால்…” என்று இழுத்தான்… “உன் ஆசைப்படியே நடக்கும்…” என்றார் சுந்தரம்…

“ரொம்ப தேங்கஸ் அப்பா…” என்று முகிலனின் தோள் மேல் கை போட்டு சந்தோஷத்துடன் அமர்ந்தான் ஆதர்ஷ்…

“அப்பா… ஆனால் அதில்…”

“தெரியும் ஆதி… அதை நானும் உன் அம்மாவும் பார்த்து கொள்வோம்… முகிலன்-மயூரி திருமணம் நடைபெறும்…”

“ரொம்ப சந்தோஷம் அப்பா…”

“உனக்கு சம்மதம் தானே ஆதி?...”

“பரிபூரண சம்மதம் அப்பா…”

“சரி அப்போ நாங்கள் பார்த்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட தயாராக இரு…”

“அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.