(Reading time: 39 - 78 minutes)

19. காதல் பயணம்... - Preethi

ன்றோடு அஸ்வத்துடன் பேசி 10 நாட்கள் ஆனது. முன்பை போல் எப்போதும் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கவில்லை. நீர் வற்றிவிட்டது போலும் என்று தோன்றியது அனுவுக்கு.. அதைவிட, பெற்றோர் தன்னை கவனிப்பதும் வருந்துவதும் அவள் கண்களில் படத்தான் செய்தது. தான் கூறியதையெல்லாம் நம்ப அவர்கள் ஒன்னும் சிறுவர்கள் அல்லவே... மாற்றிக்கொண்டாள், பெற்றோருக்காகவும், தன் தோழிக்காகவும் மனதை தேற்றிக்கொள்ள பழகினாள்.

“என்ன பார்க்குற? என்னடா இத்தனை நாள் வராம இப்போ வந்திருக்காளேன்னு நினைக்குரியா? தப்பு தான் யார் வந்திருந்தாலும் உன்னை மறந்திருக்க கூடாது தான்... நீ தான் எப்பவுமே என்னோட பெஸ்ட் பிரிண்ட்” என்று மண்டியிட்டு பல நாட்களுக்கு பிறகு, அவளது தோழனான கணேஷிடம் பேசிகொண்டிருந்தாள்.(அதாங்க நம்ம லார்ட் கணேஷ் கிட்ட தான் மேடம் பேசிட்டு இருக்காங்க)

தேஜு திருப்பூர் வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. அவளிடமும் சில மாற்றங்களை லதா உணரத்தான் செய்தார். ஆனால் தேஜு ஒன்றும் உடைந்து போகவில்லை. ஊரில் இருந்து வந்த மறுநாளே அனுவின் வீட்டிற்கு வந்து அவளின் நிலை அறிந்துக்கொண்டாள். தேஜுவுடன் பேசும் பொழுது முழு மனதையும் காட்டுபவள் பெற்றோருக்காக தன்னை கொஞ்சம் மாற்றிக்கொண்டு உற்சாகமாக இருப்பது போல் நடித்தாள். அதை கவனித்த தேஜுவுக்கு அவளை தேற்றுவது கடினமாக இருக்காது என்று தோன்றியது.

Kaathal payanam

“என்ன மேடம் காலங்காத்தாலேயே என்ன உன்னோட பிரிண்டு காதை கடிச்சிகிட்டு இருக்க? என்ன சொல்லுறாரு?”

தேஜுவை கண்டதும் தானாக முகம் மலர்ந்துவிட, “வேற என்ன சொல்ல போறாரு?? எங்க இத்தனை நாள் என்னை கண்டுக்கவே இல்லையேன்னு கோவமா இருக்காரு...” என்று சிறிது புன்முறுவலோடு கூறினாள்.

“அதுசரி அவருக்கு பேச ஆளு இல்லன்னு உன்னை கூட்டு சேர்த்துக்குறாரா?” என்று கிண்டல் செய்தவாறு அவளது படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

“என்னை சொல்லிட்டு நீ என்ன இந்த நேரத்துல தூங்குரிங்க மிஸ்.தேஜு ரவி” என்று கிண்டல் கேள்வியோடு கேட்டாள்...

“தூக்கமா வருது அனு... நைட் தூங்கவே இல்லை” என்று சொல்லிவிட்டு நாக்கை கடிந்துக்கொண்டாள் தேஜு.

அவளது கதையும் அனு அறிந்ததுதான், ஆனால் மறந்தும் அதை பற்றி பேசுவதாக இல்லை அனு, ஏன் அவள் நேற்றிரவு உறங்கி இருக்க மாட்டாள் என்று அவளும் அறிந்திருந்தாள். “பின்ன விடிய விடிய கொரியன் சீரியல் பார்த்தால் இப்படி தான் தூக்கம் கெட்டுபோகும்” என்று அனுவே ஒரு காரணம் தந்து கடிந்துக்கொண்டாள்.

தோழி தனக்காக காராணத்தை மாற்றுகிறாள் என்று புரிந்துபோக மெல்லியதான சிரிப்புடன், “ஒய் என் கொரியன் சீரியல் பத்தி தப்பா சொல்லாத, அது எவ்வளவு cutea இருக்கும் தெரியுமா!!! ச்சே இந்த மாதிரியெல்லாம் நம்ம ஊருல எடுக்க மாட்டிராங்களே” என்று கொஞ்சம் முகத்தை சுருக்கி அழகாக பேசினாள் தேஜு. அவள் முகத்தை பார்த்த அனுவுக்கு, ச்சே இவளை காயப்படுத்த எப்படி மனம் வந்ததோ என்று நினைத்துக்கொண்டு “ஆமா ஆமா அந்த மாதிரியெல்லாம் சீரியல் எடுத்தால் நம்ம ஊருல போர் கொடி பிடிச்சிருவாங்க” என்று கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருந்தனர்.

இருவருக்கும் அருந்த காபி கொண்டுவந்த ஹேமா இதை பார்த்துவிட்டு மனம் திருப்தி அடைந்தார். அனு ஏன் சோகமாக இருந்தாள் என்று கணிக்க பெரிய அறிவு தேவைப்படவில்லை, அவரும் கவனித்துக்கொண்டுதானே இருந்தார். முன்பெல்லாம் ஏதேனும் காரணம் சொல்லியாவது அனுவுக்கு அஸ்வத்திடம் இருந்து அழைப்பு வரும். ஆனால் இப்போதெல்லாம் அது வருவதேயில்லை. அஸ்வத் மீது நன்மதிப்பு இருந்ததால் அவருக்கும் அஸ்வத்தை பிடித்திருந்தது. காலம் வரும் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று இருந்தனர் பெற்றோர்கள். ஆனால் திடிரென்று அனு மாறி போயிருக்க, எளிதாக காரணம் புரிந்தது அவருக்கு.

இருவரையும் திருப்தியாக பார்த்தவர், “ஹப்பாடா உன் பிரிண்டு இத்தனை நாள் நீ இல்லாம மூஞ்ச எப்புடி வச்சிருந்தாள் தெரியுமா? ஏற்கனவே கொஞ்சம் மொக்கையா தான் இருப்பாள், இதுல இந்த 10 நாளா ரொம்ப.... மொக்கையா இருந்தாள்” என்று கூறி தேஜுவுக்கு hifi கொடுத்து சிரித்தார் ஹேமா...

“ஹ்ம்ம்.. ரெண்டு பேரும் ரொம்ப தான் பண்றிங்க” என்று செல்லமாக அனு கோவித்துக்கொள்ள “சரி சரி முகத்தை இன்னும் சுருக்காத, ஆன்டி என் ப்ரண்ட கிண்டல் பண்ணாதிங்க, நான் வந்திட்டேன்ல இனிமே அனு சிருச்சிக்கிடே இருப்பாள்” என்று கனிவோடு அனுவை பார்த்தாள். இருவரும் அர்த்தமுள்ள புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.   

“சரி சரி கிளம்பு நம்ம பக்கத்தில இருக்க பார்க் போயிட்டு வரலாம்” என்று அவளை சிரமப்பட்டு கிளப்பிசென்றாள் தேஜு. வீட்டில் இருந்தும் ஒன்றும் செய்ய போவத்தில்லை என்பதால் இருவரும் சென்றுவிட்டனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறுவர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. பேசியபடியே அவர்கள் விளையாடுவதை எல்லாம் சுட்டிக்காட்டி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர். மனதில் ஏதோ ஒரேத்தில் காயம் இருந்தாலும் குழந்தைகளை பார்க்கும் பொழுது அது சுத்தமாக மறந்து போவது இயற்கைதானே. அவ்வாறு பேசிக்கொண்டிருக்க தேஜு பேச்சை துவங்கினாள், “இப்படியே வேடிக்கை பார்த்துகிட்டே இருக்க ஐடியாவா? அடுத்து என்ன பண்றதா இருக்க?”

இதையே தேஜு ஒரு வாரத்திற்கு முன் கேட்டிருந்தால் அனுவிடம் பதிலில்லை, ஆனால் கடந்த கொஞ்ச நாட்களாக யோசித்து ஒரு முடிவெடுத்திருந்தாள், “ஏதாவது ரேடியோ ஸ்டேஷன்ல போய் சான்ஸ் கேட்கணும், சென்னைக்கு திரும்பி போயிடலாம்னு இருக்கேன்..” என்று யோசனையோடு கூறினாள்.

“எதுக்கு? திரும்பி தனியாக இருக்கவா? ஒழுங்கு மரியாதையா உருப்படியா ஏதாவது யோசி...”

“பிடிச்ச விஷயத்தை பண்ணாம வேற என்ன பண்ண சொல்லுற?”

“ஹ்ம்ம்...” சிறிது நேரம் யோசித்தவள் தன் தந்தைக்கு அழைத்தாள்....

“ஹலோ அப்பா...”

“...”

“பிஸியா இருக்கிங்களா?”

“...”

“இல்லை, அனு ரேடியோ ஜாக்கி ஆகணும்னு ட்ரை பண்ணிட்டு இருக்காள். உங்களுக்கு தான் நிறைய பேரை தெரியுமே, நம்ம ஊரிலேயே ரேடியோ ஸ்டேஷன் நிறைய இருக்கே. அதில கொஞ்சம் விசாரிச்சு பாருங்களேன்?”

“....”

“சரிப்பா, நான் சொல்றேன். நீங்க பேசிட்டு சொல்லுங்க...”

அணைப்பை வைத்துவிட்டு அனுவின் பக்கம் திரும்பியவள் அவள் தன்னை முறைத்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, “ஏன்டி என்ன பண்ணிட்டேன் இப்படி முறைக்குர?”

“நான் உன்கிட்ட சிபாரிசு கேட்டேனா?”

“ஸப்பாஆ.... இதான் கோவமா?”

“....”

“ம்ம்ம்ம்... எப்பா எவ்வளவு கோவம் வருது... நான் ஒன்னும் சிபாரிசு பண்ணலைப்பா. எங்கெல்லாம் vacancy இருக்குன்னு மட்டும்தான் கேட்க சொல்லிருக்கேன். அதுக்கப்பறம் அது உன் பாடு” என்று தோழியின் மனம் புரிந்ததாலேயே விவரத்தை கூறினாள் தேஜு. செய்தி கேட்டதும் முகம் மலர்ந்துவிட, சில காலம் அந்த ஊரிலேயே இருப்பது தான் சரி என்று தோன்றிவிட ஒத்துக்கொண்டாள்.

“சரி டாக்டர் மேடம் உங்க பிளான் என்ன?”

“என்ன பிளான் படுச்சிகிட்டே இருக்க வேண்டியது தான்” என்று கண்ணடித்து கூறிவிட்டு தொடர்ந்தாள், “இன்னும் ஒரு வருடம் இருக்கே, அதை முடிச்சிட்டு gynaecologist ஆகலாம்னு இருக்கேன். பார்ப்போம் அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு” என்று ஒரு புன்முறுவலோடு முடித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.