(Reading time: 39 - 78 minutes)

 

திருப்பூர் வந்து சில நாட்கள் கடந்திருந்தது. அஸ்வத் தன் கண்ணீரை துடைத்த சில நிமிடங்களே போதுமென சில நாட்களை கடத்த துவங்கினாள் அனு. அதோடு ஒரு புது தெம்பும் கிடைத்தது எப்படியும் அஸ்வத் தன்னை வெறுக்க மாட்டான் என்று. தேஜு தன் படிப்பிலும், அனு தன் ரேடியோ ஸ்டேஷனிலும் நிரு, அஸ்வத் பொறுப்பாக அவர்கள் வேலையிலும் நாட்களை கடத்தினர்.

அப்படி வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தான் நிருவுக்கு அந்த அழைப்பு வந்தது. எடுக்கலாமா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தவன், அழைப்பை எடுத்தான் மறுபுறம் அனு பேசினாள்.

“ஹலோ”

....

“பேசு அனு...”

“என்ன பேச சொல்லுற நிரு, எனக்கு அளவுக்கு அதிகமாக கோவம் தான் வருது. தேஜு இப்போ எப்படி இருக்காள்னு தெரியுமா?”

“அச்சோ அவளுக்கு என்ன ஆச்சு சொல்லு அனு?”

“ரொம்ப அக்கறை இருக்க மாதிரி நடிக்காத நிரு, அப்படி இருந்தால் விட்டுவந்திருக்கமாட்ட.... அவள் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தலை இன்னும், எல்லாம் மனசிலேயே வச்சிகுறாள். எனக்கு அதுதான் இன்னும் பயமா இருக்கு.”

“அனு நீ நினைக்குற மாதிரி இல்லை, நான் இப்போ மாறிட்டேன் எனக்கு தேஜுகிட்ட பேசணும் போல இருக்கு அவளோட நம்பர் தரியா?

“எதுக்கு அவள் என்ன உதைக்கவா? சரி என்ன முடிவு எடுத்திருக்க அதை முதல்ல என்கிட்ட சொல்லு” என்று கேட்டாள்.

“இத்தனை நாள் வேலை பார்த்ததுக்கே என்னால கார் வாங்க முடிஞ்சிது பிளஸ் கொஞ்சம் savings இருக்கு, சோ ஆன்டிக்கிட்ட பேசிப்பார்க்கலாம்னு இருக்கேன்.”

“உன்னை இந்த முறையாவது நம்பலாமா? இது உன் வாழ்க்கை மட்டுமில்லை என்னோட தோழியோடதும் கூட...”

“நான் அவளை பிரிஞ்சு ரொம்பவே உணர்ந்துட்டேன் அனு, இனிமேல் அவளை ரொம்ப சந்தோஷமா வச்சிக்கணும்னு ஆசைபடுறேன்”

“ஹ்ம்ம்... சரி நீ சொன்னது கொஞ்சம் பழைய யோசனை தான் இருந்தாலும் அதை நான் சொல்லுற மாதிரி பண்ணு” என்று கூறி தன்னுடைய பிளானை கூறினாள்.

“ஹே சூப்பர் அனு.. நல்லா யோசிக்குறியே அஸ்வத் தான் பாவம் நீ இவ்வளவு யோசித்தால் அவன் பொய்யே சொல்ல முடியாதே” என்று எப்பவும் போல் கிண்டல் செய்ய மறுபுறம் சத்தமில்லாம் போனது.

“ஹலோ அனு...”

“ம்ம்ம்ம்”

“என்ன ஆச்சு? உனக்கும் அஸ்வத்துக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்கவும் அனு முழு கதையும் கூறினாள். பொறுமையாக கேட்டவன், “சரி விடு சீக்கரமே அவன் அந்த பிரச்னையை மறந்திடுவான். நான் வேற அவன்கூட சண்டை போட்டுட்டேன். நானே கால் பண்ணி பேசணும்..”

“ம்ம்ம்.. ஆனால் இப்போ பண்ணாத இப்போதைக்கு நம்ம பேசினது யாருக்கும் தெரிய வேணாம். கூடியசீக்கிரம் நம்ம பிளான் பண்ணபடி நடந்ததும் உன் ப்ரிண்டகிட்ட பேசு இல்லாட்டி உளறிட போறான்” என்று கிண்டல் செய்தாள் அனு.

ஒருவழியாக 4 இல் 2 பேர்(பிரிண்ட்ஸ) சேர்ந்துவிட பிரச்சனை கொஞ்சம் சரியானது.4 மாத கணக்கே வேகமாக ஓடிவிட இன்னும் 1 மாத கணக்கு மீதி இருக்க அஹல்யா ஒரு புது ஜீவன் வெளியே வர காத்திருந்தாள். தினமும் அனு தன் வேலை முடித்துவிட்டு வந்து பாதி நேரம் அஹல்யாவோடு செலவிட்டாள். முன்பை போல இல்லாவிட்டாலும் ஓரளவு சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் அனு. அஸ்வத்தின் பெயர் எடுக்காத வரை அந்த உணர்வே இல்லாமல் அஹல்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை தொட்டு தொட்டு பார்த்து மகிழ்ந்தாள்.

மாதங்கள் வாரங்கள் ஆகி குழந்தை பிறக்கும் நாளும் வந்தது. அர்ஜுன் விடுமுறை போட்டுவிட்டு திருப்பூர் வந்துவிட, ஒரு நாள் முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதித்துவிட்டனர். முதல் பிரசவம் ஆயிற்றே முகத்தில் அப்பட்டமாக பயம் தெரிந்தது அஹல்யாவிற்கு, அவளை விட அர்ஜுனின் முகம் இன்னும் பயந்து போயிருந்தது. சொன்ன நாளில் அவளுக்கு வலியும் வந்துவிட, அவள் கத்துவதை கேட்கும் பொறுமை இல்லாமல் அவ்விடத்தை நகர்ந்து சென்றுவிட்டான் அர்ஜுன். உள்ளேயும் போக முடியாமல் வெளியேவும் நிற்க முடியாமல் தவித்தான் அவன். அண்ணனை பார்க்கும் பொழுது கொஞ்சம் பரிதாபமாக தான் இருந்தது அனுவுக்கு.

சரியான தருணத்தில் அழகான முத்து, சிப்பியை விட்டு வெளியே வந்தது அழகான அழுகையுடன்... அந்த அழுகை மற்றவர்க்கு மகிழ்ச்சியை தந்தது. விட்டால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றுவிடுவான் போல கதவோரமே நின்றான் அர்ஜுன். முகம் எல்லாம் சந்தோஷத்துடனும் ஆவலுடனும் எல்லோரும் காத்திருக்க, நர்ஸ் குழந்தையை ஏந்தி வந்தார்.

அழகான குட்டி கண்கள் அவனை போல, சீரான மூக்கு அவளை போல, வரைந்தார் போல இதழ் அதுவும் அவளை போல, அடர்ந்தியான முடியும் புருவமும் அவனை போல அழகான பாலகன் அவர்கள் குடும்பத்தில் பிறந்திருந்தான். பார்த்தாலே அள்ளி கொஞ்ச தோன்றியது அனைவருக்கும். அந்த சிசுவோ எங்கோ ஒரு உலகத்திற்கு கூட்டி வந்த பயத்தில் அழுதது. சில நொடிகள் குழந்தையை கொஞ்சியவன் அஹல்யாவை எப்போது நார்மல் அறைக்கு கொண்டுவருவார்கள் என்று பொறுமையை இழந்து நடந்துக்கொண்டிருந்தான்.

சில நொடிகளிலேயே அனைவருக்கும் செய்தி தெரிவித்துவிட, இனிப்புகள் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

“லியா....”

மெதுவாய் கண்களை திறந்து பார்த்தாள் ஒரு சந்தோஷ முறுவலோடு. தாய்மை... பெருமையான உணர்வு மனம் நிறைந்து போனது இருவருக்கும். அவள் வேதனை படுவதை பார்க்க முடியாமல் அவள் தலை கோதி “நமக்கு பையன் மட்டும் போதும் லியா” என்று அவள் கைகளை தன் கையில் வைத்துக்கொண்டு கூறினான். அதை கேட்டவளுக்கு சிரிப்பாக இருந்தாலும் ஆனந்தமாய் இருந்தது. மெதுவாய் சரி என்று தலை அசைத்து அவன் கையில் முத்தமிட்டாள்.

அவளை காண வானரம் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்தது. முதலில் அனு வந்தாள் “அண்ணி....” என்று ஆனந்தமாய் கத்திக்கொண்டே வந்து ஆற தழுவிக்கொண்டாள்... “ரொம்ப தேங்க்ஸ் அண்ணி எனக்கு ஒரு மருமகன் ரெடி பண்ணிட்டிங்க” என்று கிண்டல் செய்துக்கொண்டிருந்தாள். எந்த நேரத்தில் சொன்னாளோ மூக்கு வேர்த்தார் போல அர்ச்சனா வந்தாள் “ஹலோ ஹலோ... உன்னை விட சீனியர் நான் தான் நாங்க பார்த்துக்குறோம். வேணும்னா 2வது மருமகன் ரெடி பண்ண சொல்லு” என்று கூறியபடி வந்து நின்றாள். அவள் கூறுவதை கேட்டு எல்லோரும் சிரிக்க, “ஏண்டி இதுக்கெல்லாம் சண்ட போடுறிங்க” என்று அஹல்யா கூற, “அதெப்படி இப்பயே சொல்லிட்டேன் முதல் பையன் என்னோட மருமகனாக்கும்” என்று வீம்பு பண்ணாள் அர்ச்சனா.. அனுவும் தொடர்ந்து விட்டுகுடுக்காமல் வாதாட கடைசியாக “சரி இதுதான் final அவன் பெரிய பையன் ஆனதும் எந்த அத்தையை பிடுச்சிருக்கோ அடுத்தவங்க எதுவும் சொல்ல கூடாது” என்று முடிவிற்கு வந்தனர்.

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நவீன் சிரிக்க, “ஏய் அறிவாளிங்களா உங்களை எதுக்கு அவனுக்கு பிடிக்கணும் உங்க பொண்ணுங்களை தான் பிடிக்கணும் சோ இப்போதைக்கு எதுவும் வாய் குடுக்காம சும்மா இருங்க” என்று பஞ்சாயத்தை முடித்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்க, முந்தின நாள் இரவு கிளம்பி காலையே விஜயம் தந்தனர அஸ்வத்தும், தேஜுவும். இருவரும் அவர்கள் பங்கிற்கு ஆசையாய் குழந்தையை கொஞ்சி நலம் விசாரித்து என்று நேரம் கழிந்துக்கொண்டிருக்க, அனைவரும் எதிர் பார்க்கா வண்ணம் வந்து நின்றான் நிரஞ்ஜன்.

“எப்பா இத்தனை நாளா உனக்கு இந்த பக்கம் வழியே தெரியலையாடா” என்று ஆரம்பித்தார் துளசி.

“சாரிம்மா” என்று அவன் அருகில் செல்ல, செல்லமாக அனைவரிடமும் திட்டு விழுந்தது. எல்லா அர்ச்சனையும் முடிந்ததும் அஹல்யாவிற்கும் அர்ஜுனுக்கும் வாழ்த்து கூறியவன். கண்களால் தேஜுவை தேடினான். அவன் தேடுவதை உணர்ந்த அர்ச்சனா தான் அருகில் வந்து “ஏன்டா உனக்கு விஷயத்தை சொன்னது நான் என்னை தேடாம உன் ஆளை தேடுற??” என்று திட்டினாள்...

அவனும் சிரித்து “அது இல்லை அக்கா...” என்று சமாளித்தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.