(Reading time: 26 - 51 minutes)

 

கிட்டதட்ட அலறியவனின் கை முகிலனின் தோளை இறுக்கியது…

“ஆதர்ஷ்… ஒரு அண்ணனாய் உன் தம்பிகள் இருவரின் திருமணம் நடத்தணும் அதுவும் முகிலன் இருக்க அவ்னீஷிற்கு முதலில் எதுவும் செய்ய வேண்டாமென்று சொல்லும் உனக்கு ஏன் புரியவில்லை… நீ அவர்களுக்கும் மூத்தவன் என்று…” என்றார் கோதை அழுத்தத்துடன்…

“அம்மா… உங்களுக்கு ஏன் புரியவில்லை… எனக்கு விருப்பம் இல்லை என்று…”

“உனக்கு ஏன் ஆதி புரியவில்லை… பெற்ற மகனிற்கு ஒரு நல்லது செய்து பார்க்க வேண்டுமென்ற எங்களின் விருப்பம்…” என்று குரல் கம்ம கேட்டார் சுந்தரம்…

“இந்த ஒருவிஷயத்தில் மட்டும் என்னை விட்டு விடுங்கள் அம்மா-அப்பா… எனக்கு பிடிக்காத திருமணம் என்னை மட்டுமல்ல என்னை சேரும் அந்த பெண்ணிற்கும் உகந்ததல்ல… சிறிதும்…”

“உன் வாழ்க்கைக்கு எது உகந்தது என்று முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கும் உண்டு ஆதர்ஷ்…”

“இருக்கு அம்மா… நிறைய இருக்கு…. என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்லுங்கள்… செய்கிறேன்… இந்த ஒன்று மட்டும் வேண்டாம் அம்மா… என்னைப் புரிந்து கொள்ளுங்கள்…” என்று கை கூப்பும் மகனைப் பார்க்க அந்த தாயுள்ளம் வேதனை அடைந்தது… இருப்பினும் அறுவை சிகிச்சை செய்யாமல் காயத்தை ஆற்ற முடியாது எனும்போது, மருத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததே…

“ஒன்று நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்… இல்லை நாங்கள் இந்த …” என்றவரை வேகமாக இடைமறித்தான் ஆதர்ஷ்…

“வேண்டாம்… அம்மா… சொல்லாதீர்கள்… அதை மட்டும்….” என்றவன் தாயின் முன்னே வந்து நின்றான்…

“வருத்தப்படாதேப்பா… நாங்கள் இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் நிலை உருவாகும் என்று சொல்ல இருந்தோம்…” என்றவரின் பாதம் பணிந்தவன்… மெல்ல தாய் தந்தையரைப் பார்த்து கேட்டான்… “இது தான் உங்களின் முடிவா?...”

“ஆமாம்… இது எங்களின் விருப்பம்… உன் நல்லதிற்கான முடிவும் கூட…”

“முடியாது என்று சொன்னால்…”

“நீ சொல்லமாட்டாய்…” என்று சிரித்தனர், கோதையும், சுந்தரமும்…

“ஏன்?...”

“போக போக அது உனக்கே தெரியும்…”

“அது தான் என்ன?...”

“நானும் அவ்னீஷும் மண வாழ்வை புறக்கணிப்போம்…” என்றான் முகிலன்…

முகிலன் வார்த்தை அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆதியைத் தவிர…

முகிலனின் பதிலில் சற்றும் தளராதவனாய்… “அது நான் உயிரோடிருக்கும்வரை நடக்காது…” என்றான் ஆதி தீர்மானமாக…

“நடக்கும்…” என்றான் முகிலன் உறுதியாய்…

“அதையும் பார்க்கலாம்..” என்றபடி நகரப் போனவனை, கோதையின் குரல் தடுத்தது…

“பெண்ணின் பெயரை கேட்டுவிட்டு செல்…”

“கேட்காமல் போனால் சொல்லாமல் விட்டு விடுவீர்களா?...”

“நிச்சயம் மாட்டோம்…” என்றார் சுந்தரம்…

“அந்த பெண் ------------------“

பெயரைக் கேட்டதும் முதலில் அதிர்ந்தது முகிலன் தான்…

பலமாக சிரித்த ஆதி, “எனில் எனக்கு வேலை சுலபமாயிற்று… அந்த பெண்ணிடம் கேளுங்கள்… சம்மதித்தால் பார்ப்போம்…” என்றான் சஞ்சலமே இல்லாது…

“இந்த பிறவியில் அவள் ஒருத்தி மட்டுமே உனக்கு மனைவி… அதையும் நீ பார்க்கத் தானே போகிறாய்…” என்றனர் அவனைப் பெற்றவர்கள்…

“சம்மதம் வாங்குங்கள் முதலில்…”

“வாங்கிவிட்டால்…?...”

“……………….”

“சொல்லு வாங்கிவிட்டால்…”

“சம்மதம் வாங்கி விட்டு சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்…” என்றபடி வெளியேறி சென்றவனின் திசையையேப் பார்த்து கொண்டிருந்த அனைவரும் சிலையென சில நிமிடங்கள் நின்றிருந்தனர்…

வீட்டினுள் நடந்ததையே நினைத்துகொண்டிருந்தவனின் கார் அந்த வளைந்து நெளிந்த பாதையில் சீராக சென்று கொண்டிருந்தது.. சுற்றிலும் பசுமை, குளுமை, இனிய காற்று… இருந்தும் ரசிக்கும் மனம் அவனிடம் இல்லை… அந்நேரம் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அவனது சிந்தனையை கலைத்தது… மனதை சரிசெய்து கொண்டு பள்ளிக்கு வந்து அவ்னீஷிடம் திருமண விஷயத்தை கூறி விட்டு ரிகாவின் நன்றியையும் பெற்று கொண்டு கிளம்பினான் அவனுக்கு நிம்மதி தரும் இடத்திற்கு…

ஆதர்ஷ் வந்து சொல்லிவிட்டுப் போனதை இன்னும் நம்ப முடியாமல் நின்றிருந்தாள் ஷன்வி…

“ஹேய்… சவி…” என்று அவன் பல முறை உலுக்கியப் பின்னரே சுதாரித்தவள்,

“உண்மை தானா இங்கே இப்போ நடந்தது…” என்று அவனைப் பார்த்து கேட்டாள்..

“அட மக்கு… நிஜம் தான்… நம்பு…”

“ஹ்ம்ம்… சரி…”

“என்னாச்சுடா… ஏன் ஒரு மாதிரி இருக்க?...”

“ஒன்னுமில்லை…”

“சொல்லு… என்னாச்சு சவி…”  என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டதும் அவள் கூறினாள்…

அதைக் கேட்டவனின் மூளை யோசனை செய்து ஒரு ஐடியாவையும் கொடுத்தது… இதைப் பற்றி முதலில் முகிலன் அண்ணாவிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவளை சமாதானம் செய்தான்…

“ஹரி… அம்மா சொல்வதை கேட்டாய் அல்லவா?...”

“ஹ்ம்ம்… ஆமாடா…”

“இப்போ நீ என்ன செய்யப் போகிறாய்…?...”

“என்னடா செய்ய…?...”

“நம்ம மச்சான் வாழ்வுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…”

“சரிடா…”

“வீட்டில் எல்லோரும் ஒரு மாதிரி இருக்காங்கடா… முதலில் அவர்களை சரியாக்கணும்… ஹ்ம்ம்… என்ன செய்ய… யெஸ்… ஐடியா… என்று தன் திட்டத்தை சொன்னான் முகிலன்…

அவனுக்குத் தெரியுமா என்ன?... இவன் நினைப்பதற்குள்ளாகவே ஆதர்ஷ் ஏற்கனவே அதை வகுத்துவிட்டான் என்பது…

நிம்மதியான இடம் என்று ஆதர்ஷால் எண்ணப்பட்ட இடம் அவனது வீட்டின் பூஜையறை… ஆம்… அங்கு வந்து பூஜையறையில் உள்ள ராமர்-சீதாவின் உருவத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனின் பின்னே ஒட்டு மொத்த குடும்பமும் வந்து நின்றது…

“அயோத்ய வாசி ராம்…

ஆனந்த ரூபா ராம்…

தசரத நந்தன ராம ஜெய ஜெய ஜானகி ஜீவன ராம்…

பக்த ரக்ஷ்கா ராம்…

பரித பாவன ராம்…

தசரத நந்தன ராம ஜெய ஜெய ஜானகி ஜீவன ராம்…

லக்ஷ்மன சேதித ராம்…

லக்ஷ்மி மனோகரி ராம்…

தசரத நந்தன ராம ஜெய ஜெய ஜானகி ஜீவன ராம்… ஜானகி ஜீவன ராம்…”

கோதை உருக்கத்துடன் பாடியதை கேட்டவன், எதுவும் சொல்லாமல் சில நிமிடம் அமைதியாக இருந்தான், பிறகு, “அம்மா… ஷன்வி வீட்டிற்கு சென்று இன்றே பேசி முடித்துவிடலாம்… வாங்க… எல்லோரும் சென்று வரலாம்… நானும் கிளம்புறேன்…” என்றவாறு தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட மகனை எல்லையில்லா பாசத்துடனும் வருத்தத்துடனும் பார்த்தார் கோதை….

“ஆதி சொன்னது கேட்டது தானே… போங்க… கிளம்புங்க…” என்று உத்தரவிட்டு, மனைவியின் தோளணைத்தபடி சென்றார் சுந்தரம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.