(Reading time: 25 - 49 minutes)

 

முழுமதியும் தேய்ந்து பாதியானது… தனது பொலிவை இழந்து உருகியது… மீண்டும் வளர்பிறை கண்ணுக்கு தெரியுமா என்று ஏங்கியது…

சாகரியும் அதே நிலையில் தான் இருந்தாள்… பதினைந்து நாட்கள் ஆனது ஆதர்ஷைப் பார்த்து..

என்ன செய்ய முடியும் அவளால்???.. அவனிருக்கும் இடம் தேடி அவனைப் பார்க்க துடித்தாள் அவள்… ஆனால் எப்படி செல்வாள்?... அவன் எதுவும் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொன்ன பின்பும் தன்னவனின் ஆணையை மீறி நடக்க அவளால் முடியாது தான்… எனினும் அவனைப் பற்றி சாதாரணமாக நலம் கூட யாரிடமும் விசாரிக்க முடியாது போனதே… அந்த கவலை தான் அவளின் மனதை பாரமாக அழுத்தியது…

நிம்மதி தேடி அலைவோருக்கு எல்லாம் நானிருக்கிறேன் என்று காட்சி தந்தார் அந்த ஸ்ரீராமன் தனது துணைவி சீதா பிராட்டியுடன்…

“நீ இருக்கிறாய் என்று தான் நானும் நம்பி வந்தேன்…. என்னவரின் அருகில் இருந்து பார்த்துக்கொள்… என்னால் தான் அவரின் அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை… அவர் விரைவில் குணமாகி வரவேண்டும்… அவருக்காக நான் விரதமிருந்து வருகிறேன்.. இன்றோடு அதுவும் முடிகிறது… என் வேதனையும் முடிந்துவிடாதா இன்றே….” என்று வேண்டிக்கொண்டவள் சித்து நந்துவை அழைத்தாள்…

அவர்களின் கையில் ஐஸ்க்ரீம் இருப்பதை பார்த்தவள், “இது ஏது?...” என்று கேட்டாள்..

“எங்க ஃப்ரெண்ட் வாங்கி தந்தாங்க….” என்றனர் இருவரும்…

“ஓ… சரி… எங்கே உங்க ஃப்ரெண்ட்?...”

“இங்கே தான் சாமி கும்பிட்டிட்டு இருக்காங்க…”

“ஓ… அப்படியா… சரி… இங்கேயே இருங்க… நான் இப்பொழுது வந்துவிடுகிறேன்….” என்று சொல்லி சென்றுவிட்டாள்…

மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து பிரதக்ஷனம் செய்தாள் அந்த வேகாத வெயிலில்…

ஒரு சுற்று இரு சுற்று என்றால் பரவாயில்லை… 21 சுற்றுகள் அடி பிரதக்ஷனம் செய்தால், என்னவாகும்???...

சட்டென்று தலை சுற்றி கீழே விழ இருந்தவளின் கையை பிடித்துக்கொண்டனர் நந்துவும் சித்துவும்…

ஏற்கனவே விரதம் இருந்து கொண்டிருப்பவள், உச்சி வெயிலில் இவ்வாறு செய்ததால் நிலை தடுமாறி விழப் போனாள்… நல்ல வேளை அந்நேரம் கடவுளாக அந்த மழலைகள் வந்து காப்பாற்றினர் அவளை…

கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து அமரவைத்துவிட்டு, சித்து தண்ணீர் கொண்டு வர சென்றான்… நந்து அவள் முகத்தை துடைத்துவிட்டு, “ஏன் சாகரி இப்படி பண்ணுற?... பாரு விழப்போன நீ… நல்லவேளை ஃப்ரெண்ட் சொன்னதும் நாங்க உடனே அங்கே வந்தோம்…  நாங்க வரலைன்னா என்ன ஆகிருக்கும்…???...” என்று வருத்தப்பட்டாள்…

“விழுந்துருப்பேன்… அவ்வளவுதானே… “ என்று நினைத்தவள் நந்துவிடம் அதனை சொல்லவில்லை…

சித்து தண்ணீர் கொண்டு வந்ததும் அதை அருந்தியவள், சிறிது நேர இடைவெளிக்குப்பின், “நந்து சித்து குருக்கள் சாமி கிட்ட நான் பூ கொடுத்திருந்தேன்… அதை சாமிக்கு சாத்தியாச்சான்னு கேட்டுட்டு வாங்களேன் ப்ளீஸ்…” என்று கெஞ்ச, “சரி அண்ணா போகட்டும்.. நான் இங்கே உன்னுடன் இருக்கிறேன்…” என்றாள் நந்து…

“ஆமா.. சாகரி… ந்ந்து சொல்வது தான் சரி…” என்றான் சித்து…

“இல்ல சித்து… நாம இன்னும் அர்ச்சனை பண்ணலை… நான் இந்த பிரதக்ஷனத்தை முடிச்சிட்டு தான் பண்ணனும்.. அதான் அதற்குள் பூ பறிக்கணுமே… நந்து பூப்பறிச்சிட்டு வரட்டும்… நீ குருக்கள் சாமி கூட இருந்து சாமியை வேண்டிக்கோ… நான் இப்போ வந்துடுறேன்… எனக்கெதுவும் இல்லை…” என்று ஒருவாறு சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மெல்ல எழ முயற்சித்தாள்…

கால்கள் பின்ன, மீண்டும் தள்ளாடியவளின் வளைக்கரம் பிடித்து தோள் பற்றினான் அவளின் ஆதர்ஷ் ராம்… 

ஒருகையில் அவள் தளிர் விரல்கள் அடங்கியிருக்க, இன்னொரு கை அவளது மென்மையான தோளை சுற்றி படர்ந்திருந்தது ஆதரவாய்…

தனது கரம் பிடித்தவனை ஆதூரத்துடன் கண்டவளின் விழிகள் அவனை முழுமையாக அளந்தது உச்சி முதல் பாதம் வரை… ஜுரத்தின் பாதிப்பு அவன் உடம்பில் தெரிந்தது… அதனைப் பார்த்தவளின் உள்ளம் வருந்தியது…

“ராம்…” என்றவளின் வார்த்தை தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள…

“எனக்காக ஏண்டா இப்படி உன்னை வருத்திக்குற?... இனி இப்படி எதும் செய்துவிடாதேடா… நான் உனக்கும் முன்பே வந்துவிட்டேன்… நீ ஆசையாய் எப்போதும் பறிக்கும் நந்தவனத்தில் இன்று நான் தான் பூப்பறித்தேன்… என்னை இத்தனை நாட்கள் நீ தேடியிருப்பாய் என்று எனக்கு தெரியும்… இருந்தும் என்னால் நான் வர இயலாது போன காரணத்தை உன்னிடம் தெரிவிக்கமுடியவில்லைடா… ஆனால்… நான் இங்கு வந்ததும் தெரிந்து கொண்டேன், உனக்கு என் சுகமின்மை தெரிந்து போயிற்று என்று… சித்து நந்துவிற்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தது நான் தான்… நீ செய்யும் செயல்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன்… உனக்கும் தெரியாமல் உன்னைத் தொடர்ந்து நடந்து வந்தேன்… ஆனால் நீ என்னை கவனிக்கவில்லை… எனக்கு அது வசதியாய் போனது… உன் பின்னாலே நானும் வந்தேன்… நீ கீழே விழப் போவதற்கு முந்தின சுற்றிலேயே நான் அறிந்து கொண்டேன் நீ விழப் போகிறாய் என… நந்து சித்துவை எனக்கும் முன்னாடி நடக்க செய்து உன் பின்னாடியே வரவைத்தேன்… அதனால் தான் நீ விழும் முன், உன்னை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள்… உன்னை தாங்கி கொள்ள என் கரம் துடிக்க தான் செய்தது… இருந்தாலும் அடக்கிக்கொண்டேன்… பிறகும் நீ அவர்களை அனுப்பிவிட்டு நடக்க முயற்சிப்பாய் என நான் எண்ணவில்லை… எனினும் உன் அருகிலே இருந்தேன் உனக்கும் தெரியாமல்… கடைசியில் அது நல்லதாக போனது நான் உன்னருகில் இருந்தது… உன்னை பிடித்துக்கொண்டேன் சீதை…” என்றவனின் விழிகளில், வார்த்தைகளில் அவளை விழாது பிடித்துவிட்ட சந்தோஷம் தெரிந்தது…

அப்போது தான் அவளும் கவனித்தாள்… அவனின் கைகளுக்குள் தன் விரல்கள் இருப்பதை…

அவள் தன்னவனின் ஸ்பரிசத்தை அப்போது தான் உணர்ந்தாள்... அவள் உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு கிட்டியது… கைவிரல்கள் நடுக்கம் கொள்ள, … வியர்வைத்துளிகள் அரும்ப ஆரம்பிக்க, நனைந்த மலராய் அவளைக்கண்டவன் அவளின் தவிப்பில் எதை அறிந்தானோ புன்னகையுடன் கைகளை விலக்கிக்கொண்டான்….

“சாரிடா… தெரியாம…. வந்து நீ… விழுந்துடுவியோன்னு தான்…. சாரிமா….” என்றான் தயங்கி தயங்கி…

பதில் எதுவும் சொல்லாது வெட்கத்துடன் ஓர் அடி எடுத்து வைத்தவள் மீண்டும் தடுமாறி சரிய…

இம்முறையும் அவன் அவளின் பூங்கரத்தைப் பற்றிக்கொண்டான்….

மேனி எங்கும் சிலிர்க்க… தன் வசம் இழந்தவள் அவனது அருகாமையில், தொடுகையில் மேலும் உறைந்தாள்…

அதை உணர்ந்த அவன் மனம் அவளுக்காக வருந்தியது…. காதலை விதைத்து அவளை அலைக்கழித்தேன்… இப்போது ஸ்பரிசத்தினால் நேர்ந்த தீண்டலில் அவளை இன்னும் ஆசை என்னும் தீக்குள் தள்ளுகிறேனே…

“வேண்டாம் ஆதர்ஷ்… அவள் பாவம்… அவள் உணர்வுகளோடு விளையாடாதே… காதலியாகவே இருந்தாலும் அவள் உனது மனைவியாகவில்லை இன்னும்… நீ வேறு பாதி நாள் எங்கேயாவது போய்விடுகிறாய்… இல்லை… உனக்கு முடியாமல் போய்விடுகிறது… பார்வைகளில் காதல் வளர்த்தே அவளை வதைப்பது போதாதா?... இதில், இப்படி நீ செய்தால் அவளின் நிலையை எண்ணிப்பார்… அவளுக்கு உதவி செய்ய தான் அவள் கரம் நீ பற்றினாய்… இருந்தாலும் அதற்கே அவள் தள்ளாடினாள்… முதன் முதல் தீண்டிய ஆடவன் தொடுகை அவளை பெண்ணாக மாற்றுகிறது… அதற்கு நீ மேலும் இடம் தராமல் நிறுத்திக்கொள்… அது தான் நீ உயிராக நினைக்கும் உன்னவளுக்கு நல்லது…“ என்று அவன் மனம் அவனுக்கு எடுத்துரைக்க… மெதுவாக கையை விலக்கிக்கொண்டான், அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து…..

பிறகு அந்த ஸ்ரீராமனை தரிசித்துவிட்டு நால்வரும் அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தனர்…

சித்து நந்து அவன் வராததற்கு லேசான வருத்தம் காட்டினர்… பின் அவர்களுக்கு கதை சொல்லி சமாதானப்படுத்தியவன், அவளின் உடல் நிலையை காரணம் காட்டி தன்னோடு காரில் அழைத்துச்செல்ல விரும்பினான் அவளின் வீட்டிற்கு…

முதலில் மறுப்பு தெரிவித்தவள், பின் அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு சம்மதித்தாள் முழு நிறைவுடன்…

காரின் முன் சீட்டில் அவளை அமர சொல்லிவிட்டு, பின் சீட்டில் நந்துவும் சித்துவும் அமர்ந்து கொண்டனர்….

அவன் சீடியில் பதிவு செய்து வைத்திருந்த பாடல் ஒவ்வொன்றாக ஒலிக்க ஆரம்பித்தது…

அவன் சற்றும் எதிர்பார்த்திராத அந்த பாடலும் ஒலிக்க…. ஆதர்ஷ் தனக்கு எடுத்துரைத்த மனசாட்சியை மறந்தான்… சித்து நந்துவை மறந்தான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.