(Reading time: 15 - 30 minutes)

 

யாரு விஷ்வாவா? இந்துவின் குரலில் வியப்பு.

பின்னே வேறே யாராம்? உங்களுக்கு fire accident ஆகிப்போச்சுன்னு சொல்லி, பயந்து போயிருக்கார் மிஸ்டர் விஷ்வா. அவர்கிட்டே கொஞ்சம் பேசறீங்களா.

'விஷ்வா எனக்காக தவிக்கிறானா' கொஞ்சம் சிலிர்த்துதான் போனாள் இந்து.

என்ன மேடம் போன் பேசறீங்களா? இல்லை நேரிலேயே போய் சாரை பார்த்திடுவோமா? சார் ரொம்ப தவிச்சு போயிருக்கார். அப்படியே பார்த்திட்டு ஒரு அரை மணி நேரத்தில் திரும்பிடுவோம்.

ஏனோ விஷ்வாவை பார்க்க வேண்டும் போலிருந்தது இந்துவுக்கு. 'எங்க அண்ணன்கிட்டே என்ன சொல்றதுன்னு தெரியலை' என்றாள் மெல்ல.

அவள் அண்ணன் என்று சொன்னதுமே மெல்ல மாறியது அபர்ணாவின் முகம். ம் அதுவும் கரெக்ட்தான் என்றாள் அடிக்குரலில்.

இருங்க விஷ்வா கிட்டே ஒரு விளையாட்டு விளையாடுவோம். நீங்க ஹாஸ்பிட்டல்லே இருக்கீங்கன்னு சொல்லுவோம். என்ன செய்யறான்னு பார்ப்போம். என்றபடியே தனது கைப்பேசியை எடுத்தாள் அபர்ணா.

'அய்யோ விஷ்வா பாவம்' இந்து பதற, 'ஹலோ உங்களை விட எங்களுக்கு விஷ்வா மேலே அக்கறை அதிகம்' தன்னையும் அறியாமல்  சொல்லிவிட்டிருந்தாள் அபர்ணா.

அடுத்த நொடி சட்டென நாக்கை கடித்துக்கொண்டாள் அபர்ணா.

சட்டென இந்துவின் கையை பிடித்துக்கொண்டவள்' 'ஐ.. ஐயம் சாரி இந்து, நான் ஏதோ சட்டுன்னு சொல்லிட்டேன். நீங்கதான் விஷ்வாவுக்கு எல்லாம். நான் சும்மா friend அவ்வளவுதான். ப்ளீஸ் என்னை தப்பா எடுத்துக்காதீங்க. நான் விஷ்வாவோட பழகறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா. விஷ்வா கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம் என் கிட்டே சொல்லிடுங்க. நான் நா......ன் விலகிடறேன். நீங்கதான் அவனை நல்லா பார்த்துக்கணும் ப்ளீஸ் ப்ளீஸ் இந்து' கண்களும், உதடுகளும் துடிக்க தவிப்புடன் சொன்னவளை இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள் இந்துஜா.

சில நொடிகள் கழித்து மெல்லக்கேட்டாள் இந்து ' நான் ஒண்ணு சொன்னா செய்வீங்களா?'

கண்டிப்பா. சொல்லுங்க இந்து பரபரத்தது அபர்ணாவின் குரல்.

உங்க friendshipலே என்னையும் சேர்த்துப்பீங்களா? மெல்லக்கேட்டாள் இந்து.

அவளை நோக்கி friend? என்ற கேள்வியுடன் நீண்ட இந்துவின் கையை மன நிறைவுடன்  இறுக்கமாக பற்றி குலுக்கினாள் அபர்ணா.  'தேங்க்ஸ். தேங்க்ஸ் இந்து.'

சிரித்தாள் இந்துஜா. நீங்க சொன்ன மாதிரியே விஷ்வாவுக்கு போன் பண்ணுங்க என்ன செய்யறான்னு பார்க்கலாம்.

ஒலித்த சில நொடிகளில் போனை எடுத்துவிட்டிருந்தான் விஷ்வா.

எது ஹாஸ்பிடலா? எந்த ஹாஸ்பிடல்? பதற்றமே இல்லாமல் ஒலித்தது அவன் குரல்.

ஏதோ ஒரு மருத்துவமனையின் பேரை அபர்ணா சொல்ல, 'சரி அங்கேயே இருக்க சொல்லு அவளை. நான் எங்கேயும் வர மாதிரி இல்லை' என்றான் வெகு சாதரணமாக

'அடப்பாவி பாவம்டா அவ.' என்று சொல்லியபடியே அவள் திரும்ப அங்கே இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்வா.

இருவரும் திகைத்துப்போய் நிற்க, புன்னகையுடன் இருவரையும் பார்த்தபடியே நின்றிருந்தான் விஷ்வா.

அடப்பாவி. நீ எப்படி விஷ்வா இங்கே. அபர்ணாவின் குரல் வியப்புடன் ஒலித்தது.

நீங்களே வரும்போது நாங்க வரமாட்டோமா? இந்தவை பார்த்து கண்சிமிட்டினான் விஷ்வா.

என்னமோ மனசு கேட்கலை அப்பு. அதுதான் நீ கிளம்பின கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நானும் கிளம்பி வந்திட்டேன் என்றான் விஷ்வா.

அட.. அட.. அட....டா... என்றாள் அபர்ணா. லவ்வுன்னா இப்படி இல்லை இருக்கணும்.

ஹேய்... நீ வேறே... அதெல்லாம் ஒண்ணுமில்லை... விஷ்வா அவசரமாய் சொல்ல

'நம்பிட்டோம். நம்பிட்டோம். அதுதான் உன் முகமே சொல்லுதே. சும்மா போய் சொல்லாதே விஷ்வா' என்றாள் அபர்ணா.

சின்ன புன்னகையுடன் இந்துவை நோக்கி திரும்பினான் விஷ்வா. மெல்ல அவள் அருகில் வந்தான். இமைக்க மறந்திருந்தாள் இந்துஜா. அவன் கண்கள் அவள் கண்களையே ஊடுருவிக்கொண்டிருந்தன.

சின்ன வயதிலிருந்து ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு சுற்றியவர்கள்தான் இருவரும். ஆனால் இன்று புத்தம் புதிதாய் பார்ப்பது போலே சில நொடிகள் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர் இருவரும்.

இத்தனை நேரம் மனமெங்கும் பரவிக்கிடந்த தவிப்பு விலகிப்போன நிம்மதியில் மெல்லக்கேட்டான் விஷ்வா  உனக்கு ஒண்ணும் இல்லையே. பயந்துட்டேண்டா நிலாபொண்ணு.

எது? நிலாப்பொண்ணா? ஹேய் ... நல்லா இருக்கே இந்த பேரு.. இடையில் புகுந்தாள் அபர்ணா.

'ஹலோ.. நாங்க பேசறதை எதுக்கு ஒட்டு கேட்கிறே. உதைப்பேன் உன்னை. ஓடு அந்த பக்கம்'  மலர்ந்த முகத்துடன் பொய்யாய் மிரட்டிய விஷ்வாவை, புன்னகையுடன் ரசித்தபடியே நகராமல் நின்றிருந்தாள் அபர்ணா. அவனிடம் இவ்வளவு மகிழ்ச்சியைப்பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது.

'அதெல்லாம் முடியாது. இந்த இடத்தை விட்டு நான் அசையக்கூட மாட்டேன். பேசுங்க பேசுங்க. கேட்போம் இன்டரெஸ்டிங்கா இருக்கு.' தனது கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்தப்படி சொன்னாள் அபர்ணா.

அவளைப்பார்த்து பொய்யாய் முறைத்துவிட்டு திரும்பினான் விஷ்வா. உனக்கு அடி எதுவும் படலியே இந்து.

ம்ஹூம். மெல்ல தலையசைத்தாள் இந்து, அண்ணனுக்குதான் கையிலே கொஞ்சம் காயம்.

அப்படியா... கொஞ்சம் இறங்கியது விஷ்வாவின் குரல். மெல்ல மாறியது அபர்ணாவின் முகம்.

அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து, சற்று தள்ளிபோய் நின்றாள் அவள். மனம் அழுந்தியது அவளுக்கு.

'love you from the bottom of my heart கண்ணம்மா' அவன் குரல் காதில் கேட்பது போலே ஒரு உணர்வு..

அவள் கண்களில் நீர் சேர்ந்தது 'சாரி. சாரி பரத். நான் உங்களுக்கு ரொம்ப தப்பு செய்யறேன். ப்ளீஸ் பரத். வெரி சாரி. லவ் யூ பரத்.' வாய்விட்டு சொல்லிக்கொண்டாள் அபர்ணா.

சில நிமிடங்கள் கழித்து அவர்கள் அருகில் மெல்ல நடந்து வந்தவள். 'சரி போதும் இந்து. நீங்க உள்ளே போங்க. உங்க அண்ணன் தேடுவாங்க ' என்றாள்.

ஆமாம். அந்த கடங்காரன் வெளியே வந்துட்டான்னா கஷ்டம். நீ உள்ளே போ இந்து.' விஷ்வா எப்போதும் போல் சொல்ல, தன்னையும் அறியாமல் சட்டென உயர்ந்து விட்டிருந்தது அபர்ணாவின் குரல்.

ப்ளீஸ் விஷ்வா.. கடங்காரன் அது இதுன்னு சொல்லாதே.

புருவங்கள் உயர வியந்துப்போய் திரும்பினான் விஷ்வா. 'இது என்னது புதுசா இருக்கு.? நீ  அவனுக்கு சப்போர்ட் பண்றே.

அது... அது வந்து... இல்லை... அவர் பாவம் விஷ்வா... அவருக்கு கையிலே அடி பட்டிருக்கு... அதான்.

எல்லாருக்கும்தான் அடி படுது. அதுக்கு என்ன பண்ண முடியும்.?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.