(Reading time: 15 - 30 minutes)

 

ப்ளீஸ் விஷ்வா... ஏதோ சொல்ல வேகமாய் வாய் எடுத்தவள் தன்னை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு இந்துவை பார்த்து சொன்னாள் ' நீங்க கிளம்புங்க இந்து'

இந்து இருவரையும் பார்த்து தலையசைத்து விட்டு நகர்ந்தாள். மாறிப்போயிருந்த அபர்ணாவின் முகத்தை விட்டு அகலவில்லை விஷ்வாவின் பார்வை. அவள் முகம் இப்படி மாறிப்போய் அவன் பார்த்தது இல்லை.

இந்து நகர்ந்தவுடன் அப்பூ.... என்றான் விஷ்வா. என்னாச்சுடா... திடீர்ன்னு ஒரு மாதிரி ஆகிட்டே?

திகைப்பு பரவிக்கிடந்த விஷ்வாவின் முகத்தை பார்த்த மாத்திரத்தில் சட்டென சுதாரித்தாள் அபர்ணா.

'அதெல்லாம் ஒண்ணுமில்லை விஷ்வா.' அழகாய் புன்னகைத்தாள் அவள். நாம கிளம்பலாம். நான் அப்புறம் பேசறேன் உன்கிட்டே.

அவரவர் வண்டிகளை நகர்த்திக்கொண்டு கிளம்பினர் இருவரும்.

வழி நெடுக அபர்ணாவின் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தான் பரத்.

ரவு  மணி பன்னிரெண்டை தாண்டி இருந்தது. எத்தனை முறை புரண்டு புரண்டு படுப்பது.

'நான் மரக்கட்டை கண்ணம்மா. என்னையும் காதலிக்க வெச்சிட்டியே. சொன்னானே அவன். காதலிக்க வைத்த நானே அவனை காயப்படுத்த போகிறேனே?' தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள் அபர்ணா.

என் உயிரானவனுக்கே நான் துரோகம் செய்கிறேனே.... மனம் முழுவதும் அழுத்தம். ஏனோ அவனிடம் பேச துடித்தது மனம்

விஷயம் தெரிந்தால் என்ன செய்வான் அவன்? என் காதல் பொய்யென்று நினைத்து விடுவானா?.  என்னை மொத்தமாய் வெறுத்து ஒதுக்கி விடுவானா? அந்த எண்ணம் வந்த அடுத்த நொடி அவளே அறியாமல் அவள் கை கைப்பேசியில் அவன் எண்ணை அழுத்திவிட்டிருந்தது.

நல்ல உறக்கத்தில் இருந்தவன் சட்டென கண்விழித்தான். அருகில் இருந்த கைப்பேசியை எடுத்தபபடியே எழுந்து அமர்ந்தான்  'கண்ணம்மா' என்றே ஒளிர்ந்தது அவன் திரை.

அடுத்த சில நொடிகளில் 'கண்ணம்மா சொல்லுடா...' அவன் குரல் அவள் செவிகளை சேர்ந்து, இதயத்தை கிள்ள, சட்டென கண்களில் குளம்.

'கண்ணம்மா சொல்லுடா...'. சொல்லிவிடலாம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம். அதன் பிறகு. விஷ்வாவின் புன்னகை காணாமல் போய் விடக்கூடுமே.

ஹேய்... என்னாச்சுமா இந்த நேரத்திலே கூப்பிடறே?

அவன் இதமான குரலில் அவள், இதயம் கரைந்து கண்களை தாண்டி வழிந்த நீரை துடைத்தன அவள் விரல்கள். உன்னை இவ்வளவு நேசிப்பவனுக்கு நீ துரோகம் செய்கிறாயே குத்திக்காட்டியது அவள் மனம்,

எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா அவனிடம். உதடுகள் வரை வந்து தேங்கி நின்றன வார்த்தைகள். சொல்ல முடியவில்லை அவளால். மாலையில் சந்தோஷத்தில் மிதந்த விஷ்வாவின் முகம் கண் முன்னால் வந்து வந்து போனது.

அவள் சுவாசிக்கும் சத்தம் மட்டும் கேட்டது அவனுக்கு.

என்னவாயிற்று அவளுக்கு? என்று யோசித்தபடியே  என்னாச்சு பொண்டாட்டி?  என்றான் அவன்

அவன் அப்படி அழைத்த மாத்திரத்தில் உடைந்தாள் அவள். அவனிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட எத்தனித்த மனதை கண்களை இறுக மூடிக்கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ஏதாவது பேசுடா.... யோசனையுடன் வருடியது அவன் குரல்.

பரத்... நீங்க எனக்கு... நான் ... லவ் யூ பரத்......  எனக்கு ... உங்களை ரொம்ப பிடிக்கும்....  குரல் உடைந்து குலுங்கினாள் அபர்ணா.

அபர்ணா.... அழறியா? ஏண்டா.?

சத்தியமா பரத்..... எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ...... லவ் யூ சோ மச் பரத்....

ஹேய்.... என்னாச்சுமா உனக்கு?

நீங்க என் உயிர் பரத், என் காதல் பொய் இல்லை பரத், சத்தியமா பொய் இல்லை பரத்.... குலுங்கி, தேம்பி, அவள் குரல் ஒரு நிலைக்கு வரும் வரை எதுவும் பேசவில்லை அவன்.

சில நிமிடங்கள் கழித்து அவள் சுதாரிக்க மெல்லக்கேட்டான் அவன்.  அபர்.....ணா ..... நிஜமா உன் மனசிலே என்னடா  குழப்பம்?

பதிலில்லை அவளிடம்.

'என்கிட்டேயிருந்து எதையாவது சொல்லாம மறைக்கறியாடா? அடுத்தக்கேள்வி

மௌனம்.

கண்ணம்மா... பதில் சொல்லு கண்ணம்மா...

கொஞ்சம் நிதானித்து, தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு 'ஆமாம். உங்க கண்ணம்மா உங்ககிட்டே பொய் சொல்றா. உங்களை ஏமாத்திட்டு இருக்கா.' இன்னும் நிறைய ஏமாத்த போறா என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

சட்டென்ற மௌனம் அவனிடத்தில். வியப்பும் யோசனையும் அவன் கண்களில் பரவி மறைய,  மெல்ல சிரித்தான் அவன். 'இன்டரெஸ்டிங். ஆனால் உன்னாலே அதெல்லாம் .முடியாது கண்ணம்மா'.

முடியும். உங்க கூடவே இருந்துகிட்டு உங்களையே ஏமாத்தபோறேன். என்றாள் அவள் கன்னங்களில் மீதம் இருந்த கண்ணீரை துடைத்தபடியே.

'ஏமாத்த போறவங்க இப்படி போன் பண்ணி சொல்லிட்டு ஏமாத்த மாட்டங்கடா.' மறுபடி சிரித்தான் அவன். ' சரி அப்படி என்ன செய்யப்போறாங்க மேடம்.?'

'அதை சொல்லமாட்டேன்.' என்றாள் அவள்.

சரி சொல்லவேண்டாம். முயற்சிப்பண்ணு. ஆனால் உன்னாலே முடியாது.

'முடியும்.' என்றாள் உறுதியாக.

சரி. ட்ரை பண்ணு.

உங்களுக்கு என் மேலே கோபம் வரலியா? வியப்புடன் கேட்டாள் அவள்.

அழகான சிரிப்பு எழுந்தது அவனிடம். 'கோபமா? நீ என் பொண்டாட்டிடா என்றான் அவன். என் பொண்டாட்டி மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. என்னை ஏமாத்த முயற்சிப்பண்ணு. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்' அவன் உறுதியான குரலில் சொல்ல அவள் கண்களில் மறுபடியும் நீரேற்றம்.

லவ் யூ .... என்றாள் உடைந்துப்போன குரலில்.

'தெரியும்டா. அப்படியே நீ என்னை ஏமாத்த நினைச்சாலும் நீ தோத்துப்போற இடமும் அதுதான்னும் தெரியும்.'  பெருமூச்சுடன் புன்னகைதான் அவன்.

பதில் சொல்லவில்லை அவள். கண்களை தாண்டி  வழிந்திருந்த கண்ணீரை துடைத்தப்படி ஒரு பெருமூச்சுடன் தன்னை சரிப்படுத்திக்கொண்டாள் அபர்ணா.

இப்போ மனசு கூல் ஆயிடுச்சாடா? இதமாய் கேட்டான் அவன்.

ம். என்றாள். உங்களுக்கு கை எப்படி இருக்கு?

எனக்கு ஒண்ணுமில்லை. நல்லா இருக்கேன் சரியா? நீ கவலை படாமே நிம்மதியா தூங்கு. குட் நைட். என்றான் புன்னகையுடன்.

குட் நைட்டுடன் அவள் அழைப்பை துண்டிக்க, அப்படியே படுக்கையில் சாய்ந்தான் பரத். அவள் வார்த்தைகளே காதில் எதிரொலித்துக்கொண்டிருக்க, அவன் இதழ்களில் புன்னகை ஓடியது. அதே புன்னகையுடனே சில நிமிடங்களில் உறங்கிப்போனான் பரத்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.