(Reading time: 8 - 16 minutes)

 

கௌஷிக் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையிட்ட கௌரி, “இது அப்படி விடற சின்ன விஷயம் இல்லையே கௌஷிக். இந்த விஷயத்தை கடைசி வரைக்கும் எனக்கும், உங்காத்துக்கும் தெரியாம வச்சுண்டு, கல்யாணத்துக்கு வெளில இருந்து கடன் வாங்கி  இருந்தா, எத்தனை கஷ்டம்.  ஹரி ஸ்திரமா ஒரு வேலைக்கு போகற வரைக்கும் அதை அடைக்க ஸ்ரமம்தானே பட்டிருப்பா”

“அந்த நேரத்துல இது எல்லாம் யோசிக்க முடிஞ்சிருக்காது கௌரி.  உனக்குத் தெரிஞ்சா நீ கல்யாணத்தை நிறுத்திடுவ  அப்படிங்கறது மட்டும்தான் அவாளுக்கு தோணி இருக்கு.  அதனால அந்த வருத்தம், கோவம் எல்லாத்தையும் விட்டுடு.  சந்தோஷமா கல்யாணத்துக்கு தயாராகறதப் பாரு”

“நீங்க சொல்றதும் கரெக்ட்தான்.   நேத்து நீங்க வந்துட்டு கிளம்பினப்பறம் எனக்கு எங்க அம்மாகிட்ட இருந்து செம்ம மண்டகப்பிடி”

“ஏன் என்னாச்சு,  போன வாரம் நான் போன்ல உனக்கு கொடுத்த உம்மாவைப் பத்தி சொல்லிட்டியா”, கௌஷிக் குறும்பாகக் கேட்க, கௌரி முறைத்தாள்.

“ஏற்கனவே இப்பத்தான் கோவில்ல காளி சிலையைப் பார்த்தேன்.  திரும்ப நீ வேற அப்படிப் பார்க்காத.  பயமா இருக்கு”

“ஹ்ம்ம் நக்கல்.  உங்களை யாரு குடு குடுன்னு போய் பத்து சவரன் நகை வாங்கிண்டு வர சொன்னது.  உங்களுக்கே ஏகப்பட்ட செலவு, போறாக்கொறைக்கு இதுல நான் வேற செலவு வச்சுட்டேன்னு ஒரே கத்தல்.  ஹரி வேற, கௌஷிக் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதே, பெரிய தியாகம், இதுல உனக்காக நகைக்கு வேற தண்ட செலவு வச்சுட்டியேன்னு ஓட்டித் தள்ளிட்டான்.  நான் என்ன உங்களை நகை வாங்கிண்டு  வரவா  சொன்னேன்.  அப்பா வருத்தப்படறா அப்படின்னு மட்டும்தானே சொன்னேன்”

“ஹா ஹா ஹா,  மச்சாண்டா.  இதுக்காகவே ஹரியை கல்யாணத்துல ஸ்பெஷலா கவனிக்கணும்.  ஜோக்ஸ் அபார்ட்.   எனக்கு இதை வாங்கறது ஒண்ணும் கஷ்டமா இல்லை கௌரி.  எப்படியுமே நான் உனக்கு வாங்கறதா இருந்ததுதான்.  அதனால கவலைப்படாதே”

“Really I’m blessed கௌஷிக்.  இப்படி ஒரு குடும்பத்துக்குள்ள வர்றதுக்கு”

“ஹே நானும்தான்,  சரி அதை விடு.  நேத்தைக்கு என்னால நடந்த விஷயம் முழுசும் கேக்க முடியலை.  இப்போ கேஸ் எந்த நிலைமைல இருக்கு.   பாலு அங்கிள், என்ன சொல்றார்”, என்று கேட்க,  கௌரியும் அவர்கள் பேசியது, அவர்கள் நடத்தப் போகும் நாடகம் ஆகியவற்றைப் பற்றி கூறினாள்.

“ஹ்ம்ம் இந்த நாடகம் நல்ல படியா நடக்கணும்.  வா அதுக்கும் சேர்த்து இன்னொரு முறை வேண்டிண்டு பீச் கிளம்பலாம்”, என்று கௌரிக்கு கை கொடுத்து எழுப்ப, மறுபடி ஒரு முறை கடவுளைத் தொழுது பெசன்ட் நகர் நோக்கி சென்றார்கள்.

மீனம்பாக்கம் தாண்டி வந்து கொண்டிருக்கும்போதே தங்கள் பின்னால் ஒரு டாடா சுமோ தொடர்ந்து வருவதை கவனித்த கௌஷிக் யாராக இருக்கும் என்று யோசித்தபடியே  சிக்னலில் நிற்க, வண்டியை மெதுவாக்க அந்த சுமோவும், வேகத்தைக் குறைத்தது.  சிக்னல் விழுந்தவுடன் இடது பக்கம் ஒதுங்கி சாலையின் ஓரத்திற்கு கௌஷிக் வண்டியை விட கத்திப்பாரா சந்திப்பில் கௌஷிக்கின் வண்டியை இடித்துத் தள்ளி விட்டு சுமோ பறந்தது.  கௌரியும், கௌஷிக்கும், அவனின் இரண்டு சக்கர வாகனத்திலிருந்து வாகன நெரிசல் மிகுந்த சாலையில் தூக்கி எறியப்பட்டார்கள் . 

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.