(Reading time: 14 - 27 minutes)

 

னதில் நினைப்பதை கூட வார்த்தை மாறாமல் மறைத்து ஒளிக்காமல் இவனிடம் சொல்ல முடியும் இந்த நிலைக்கு பெயர் என்ன?

ஆனால் உன்மையில் இது காதல்தானா?

அம்மா இவனை திருமணம் செய்து வைக்கிறேன் என்ற போது வந்த வெறுப்புக்கும் அருவருப்புக்கும் என்ன விளக்கம்?

அது இவளுக்கு நீதியின் மேல் உள்ள பசி தாகம். தவறு செய்து தன்னை அவமதித்துக் கொள்ள, அசிங்கபடுத்திக் கொள்ள, இயலாத சுயமரியாதை. வியனை அவனை சார்ந்தவர்களை கஷ்ட படுத்த இயலாத உண்மைக்காதல். அவனோடு நிம்மதியாய் வாழவேண்டும் என்ற பேராசை.

உண்மை ஜெயம்.

ஆக இது அக்மார்க் காதல்தான்.

புரிதல் குடையாய் விரிந்து மழையாய் பொழிய செய்கிறது மனதை.

வேலியில்லா காற்றில் விடை தேடா கேள்வியாய் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிதந்தாள் மையல் பிடி புகுந்தவள்.

அவளை அவளுக்கே பிடிக்கிறது. அத்தனையும் அவளுக்காக அப்பொழுதுதான் பிறந்தது போல் ஓர் உணர்வு.

அவளுக்குள் அவள் உலகம் உண்டாகியது.

அத்தனையும் அழகாயியது அறியா நொடியில்.

காதல் கொள்ளும் தருணத்தைவிட அதை உணரும் தருணம் அழகு.

கண நேரத்தில் இது வரை கடந்து வந்த வாழ்க்கை காணாமல் போனது.

இன்றுதான் இவள் பிறந்திருக்கிறாள்.

இதுவரை இவள் இருந்த இடம் எது?

எதிரில் இருந்தவன் மட்டுமே யுகயுகமாய் அறிந்தவனாய் தெரிகிறான். ஏனைய அத்தனையும் அந்நியம்.

ஆக இவனுள் தான் இத்தனை யுகமாய் உயிர்த்திருந்தாளோ இவள்? இன்று தான் பிறப்பனுபவிக்கிறாளோ?

புதிதாய் பிறந்திருப்பவள் இவள். பின் தாய்மை போன்ற உணர்வு அவன் மேல் ஏன் எழுகிறது?

தாய்மை கொண்டால் தலைமை உணர்வல்லவா வர வேண்டும், மாறாக தலைவனாக அவனைத்தானே காண்கிறது இவள் மனம்.

தலைமைக்கு உட்படுதலில் தன்னிகரில்லாத சுகம் காதலில் மாத்திரம் சாத்தியம் போலும்.

 இவள் இல்லாமல் போய் அவன் மாத்திரமே இவளாக!

தோல்வியில் இத்தனை சுகம் இருக்குமா? இவனிடம் தோற்பதில் எத்தனை சுகம்?

அவ்வளவுதான் அத்தனை நேர மையல் மனோரம்மியம் மடிந்தது.

தோல்வியில் சுகம் காண்பவள் ஜெயிக்க முடியாது.

மறக்க வேண்டியதுதான் இவள் ஒலிம்பிக்கை.

ஒழிக காதல்.

வாழ்க தங்கமெடல்.

தடகளத்தில் ஜெயிப்பது மட்டும் மெடலாகாது...முதல் வெற்றி மனதை வெல்வதில்தான் தொடங்குகிறது.

ஜெயிக்கவேண்டும்.

சிலிர்த்தது அவளுக்கு.

சுய நினைவிற்கு வந்தாள். அவள் காலில் விழுந்த ஒரு திரவத்தினால் விழுந்த சிலிர்ப்பு அது.

“தேய்ச்சுகோங்க....ஃபீட் குளிராம இருக்கும். மத்த நேரம்னா உங்க ஐடியாக்கு ஒத்துகிட்டு இருக்க மாட்டேன்...இப்ப குளிர் ரொம்ப குறைவா இருக்கிற சீசன். அதோட இன்னும் எவ்ளவு தூரத்தில் ரோடு இருக்குன்னு தெரியலை. அதனாலே நைட் இங்கே தங்கிட்டு வெளிச்சம் வந்ததும் காலைல கிளம்பலாம். பாதை கண்டு பிடிக்க வசதியா இருக்கும்...”

இவள் அவனை தன்னவனாக மனதில் கண்டால் அவனும் அப்படியே உணர வேண்டும் என எதாவது கட்டாயமா என்ன?

அருகில் தீயின் சூடு இதம் தர பார்த்தால் அவன் சுள்ளி சேர்த்து தீயிட்டுக் கொண்டிருந்தான்.

புத்திக்கு இப்பொழுதுதான் உறைக்கிறது சூழல்.

“இதெல்லாம்....?” ஆச்சர்யமாக கேட்டாள்.

“கார்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வச்சிருப்பேன்... அந்த ஆயில், இந்த மேட்ச் பாக்ஸ் மாதிரி சிலதை அதில இருந்து எடுத்து பாக்கெட்ல போட்டு வந்தேன்... ஆயின்மெண்ட் இருக்குது....எங்கயாவது அடி பட்டிருந்த போட்டு கோங்க...என் சாக்ஸை தாரேன் போட்டுகோங்க...என் ஷூஷ் உங்களுக்கு வசதியா இருக்காது.”

விளையாடுத்தனம் இருந்தாலும் மிகவும் பொறுப்பானவனும் போலும்.

ஆரதித்தது காதல் கொண்ட மனது.

விளையாட்டுத்தனமா? இடித்தது ஒரு மனது.

அவன் அண்ணன்ட்ட விளையாட நினைத்ததால தான  இந்த பள்ள பிரவேசம்....மூன் லைட் ஹங்கர்....பசிக்கிதுடி மிர்னி...

ப்ரேயர் பண்ணிட்டு படுங்க....நான் விழிச்சுதான் இருப்பேன்...பயப்படவேண்டாம்..”

“ம்..” தலை அசைத்தாள்.

ப்பொழுது தூங்கினாளோ மீண்டும் விழிப்பு வந்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது இடம். அருகில் அமர்ந்திருந்த வியன் எதோ ஒரு பாஷையில் படு உற்சாகத்துடன் மொபைலில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். சத்தம் இவளுக்கு தொந்திரவாக கூடாது என மெல்லிய குரல் என்றாலும் உற்சாக ஊற்று.

அருகிலிருந்த சிறு பாறை மேல் அமர்ந்து, பௌர்ணமி நிலவை பின்புலமாக கொண்டு, மிளிர்வில் ஒளிர்ந்த முகத்துடன்,  அவன் பேசிக் கொண்டிருந்தது மனோரம்யம்.

அப்படியே அவளுக்குள் அலையின்றி நுரையின்றி ஆழ இறங்கியது  அக் காட்சி.

பாசமாய் ஒரு பனிகாற்று பாவையின் இதயம் சுட்டது.

மூச்சுவிடுவதே கஷ்டமாக தோன்றியது அவளுக்கு.

எழுந்து அமர்ந்தாள். அவனும் உடனே பேச்சை முடித்துவிட்டான்.

“தரையில் படுக்க கஷ்டமா இருக்கும்...” இவள் எழுந்ததற்கு அவன் காரணம் சொன்னான்.

ஒரு பிளஅஸ்டிக் புன்னகை பதில்.

பாறையில் இருந்து அவன் இறங்க இவள் எழுந்து நின்றாள்.

கைது செய்து காதலை கழுவிலேற்றாவிட்டால் இவள் கதை அழுகாச்சி காவியம்.

இரும்பையும் எறும்பையும் கூட கைது செய்து விடலாம் போலும் இடி மின்னலை எப்படி கைது செய்வதாம்?

“தூங்க முடியலைனா உங்க ஒலிம்பிக் ட்ரீம் பத்தி சொல்லுங்களேன்....இன்னும் நீங்க என்ன கேம் விளையாடுவீங்கன்னு கூட எனக்கு தெரியாது...” அவன் ஆர்வமாக கேட்க

“ஹை ஜம்ப்”

ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல இவள் ஓலிம்பிக் கனவு மீண்டுமாய் பீனிக்ஸாகி எழுந்தது.

இவளை விட குறையாத ஆர்வத்துடன் அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.