சித்ராவோ அவள் தலையை பாசமாய் வருடியப்படி கேட்டார்
" சென்னைல தனியாவா இருக்க நீ ?"
" ம்ம்ம் ஆமா அம்மா ... ஆனா நிறைய நல்ல பிரண்ட்ஸ் இருக்காங்க ..கதிர் மாதிரி " என்றாள் ... இப்போது சிலுப்பிக்கொண்டு கதிரின் மனம் .. அவளை தோழி என்று சொல்ல இலகுவாய் உணர்ந்தவன், அவள் தன்னை நண்பன் என்று சொல்வதை ஏற்றுகொள்ள முடியாமல் நின்றான் ..
அனைவரின் மனநிலையையும் மாற்ற விரும்பி , மித்ரவிடம் திரும்பிய காவியா
" இப்போ நான் சொல்லுறேன் , உங்களை பத்தி .. நீங்க சங்கமித்ரா. இவங்க சித்ரா அம்மா, அம்மா பக்கத்துல நின்னா கண்டிப்பா அப்பாதான்.. சோ இவர்தான் தேவசிவம் பா .. உங்களுக்கொரு அக்கா இருக்கணுமே ?"
" வைஷ்ணவி அக்கா இப்போ வீட்டில் இல்ல "
" ஓஹோ ... இவங்க நம்ம பிரின்சஸ் முகில்மதி " என்று சொல்லி முகில்மதியின் தோளில் கைபோட்டு கொண்டாள் காவியா.. ( என்ன இருந்தாலும் வருங்கால நாத்தனார் ஆச்சே !!)
" இதெல்லாம் அநியாயம் தர்ஷினி .. என் தங்கச்சியை உனக்கு தெரியும் என்னை தெரியாதா ?" என்று கேட்டு வைத்தான் கதிரேசன் ..
" ஹலோ பாஸ் .. அதுக்கு நீங்க உங்க குடும்பத்தை பத்தி சொல்லி இருக்கணும் .. அதை விட்டுட்டு இப்படி புகார்மனு தர கூடாது .. ஹிட்லர் ..அதான் எழில் , முகில்பத்தி சொன்னதுனால எனக்கு இவங்களை தெரியும் " என்று உளறி வைத்தாள் காவியதர்ஷினி ..
" அன்பு என் தங்கச்சிய பத்தி என்ன சொன்னாரு ?" என்று கேள்வியுடன் பார்த்தபடி கேட்டான் கதிரேசன் .. அவன் கேட்ட வேகத்தில்தான் தான் உளறி கொட்டியதை உணர்ந்தாள் காவியதர்ஷினி ... முகில்மதியும் கலவரமாய் அவளை பார்க்க
" அதுவா, ஹிட்லர் மித்ராவுக்கு கால் பண்ணுற சில நேரம் , இந்த குட்டி பொண்ணு பக்கத்துல நின்னு மித்ரா அண்ணி மித்ரா அண்ணின்னு செல்லம் கொஞ்சுவதை நான் அப்பப்போ கேட்டு இருக்கேன் .. அப்போதான் இவங்களை பத்தி சொன்னான் " என்று சமாளித்தாள் காவியா .. இப்படியாய் கதிரேசனும் காவியாவும் பேசிக்கொண்டே பெரியவர்களையும் தங்களது பேச்சில் சேர்த்து கொண்டனர் .. வாசலில் நின்று பேசுவதை கூட உணராமல் அனைவரும் கலகலப்பாய் சுவாரஸ்யமாய் பேச , இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சுவரோரம் கை கட்டி நின்றிருந்தான் ஷக்தி ..
அனைவருக்கும் ஆறுதல் சொல்லி இருந்தாலும் கூட " இதை எப்படி சரிகட்ட போகிறோம் " என்ற கேள்வி அவனது இதயத்தை துளைக்காமல் இல்லை .. மித்ராவின் பிடிவாதத்தை நன்கு அறிந்தவன் ஷக்தி ..
மித்ரா மட்டுமா அவனை நேசித்தாள் ? அவனும்தானே அவளை அணுஅணுவாய் நேசிக்கிறான் ..? எத்தனை நாட்கள் அவள் குரலை வைத்தே அவளது மனநிலையை உணர்ந்து நடந்திருக்கிறான் ? எத்தனை முறை மற்ற பெண்களை பார்க்கும்போது " இவள் என் மித்ரா இல்லை " என்று மானசீகமாய் சொல்லி சிலிர்த்திருகிறான்? எத்தனை முறை அவளது தேவைகளை அவள் கூறுமுன்னே செய்து இருக்கிறான் ? அப்படி இருப்பவனுக்கு அவளது ஒவ்வொரு அசைவும் நிச்சயம் தெரியும் அல்லவா ? ஏனோ அவன் மனதில் எங்கிருந்தோ ஓர் எச்சரிக்கை ஒலி ஒலித்து கொண்டே இருந்தது.. இடதுகையால் இதயத்தை வருடிக்கொண்டே வெண்ணிலவை பார்த்தான்..
காரிருள் மேகங்கள் நிலவை சூழ்ந்து நின்றன.. " இதே போல நானும் என் மித்ராவை எனக்குள் பொத்தி வைத்துக் கொள்வேனோ ?"என்று அவன் எண்ணும்போதே மேகங்கள் லேசாய் நகர தொடங்கின ..
அதுவரை ஷக்தியைத் தான் பார்த்துகொண்டு நின்றாள் சங்கமித்ரா.
" ஏன் ஷக்தி உனக்கு என் மீது முதலில் காதல் வரல ? இன்னைக்கு சொன்னியே இந்த நாலு வருஷத்தில் உன் மனசில் நான்தான் நான் மட்டும்தான்னு .. அது ஏன் அதற்கும் முன்னாடி நடக்கல ஷக்தி ? ஒருவேளை நான் எப்போதுமே ஒரு தோழி மாதிரி உன்னோடு இருக்கவும் உனக்கு என்மீது காதல் உணர்வு வரலையா ? அப்போ இப்போது மட்டும் எதுக்கு வந்தது இந்த காதல் ? பரிதாபமா ? " என்று குதர்க்கமாய் வாதிட்டது ஒரு மனது .. இன்னோர் மனதோ அவளை எதிர்த்து அவனுக்காக வாதிட்டது.
"இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல மித்ரா .. ஷக்தி அருகில் இல்லாதப்போ எல்லாம் நீ அவனுக்காக உருகின .. எப்போதடா அவன் வருவான், எப்போதடா அவனோடு ஒன்றாய் நேரம் செலவளிக்க்கலாம்னு காத்திருந்த .. ஆனா இப்போ ? அவன் கண்ணுக்கெதிரில் இருக்கான் .. நீ என்னடான்னா அவனை பிரிஞ்சு நிற்கிற ? சரி இன்னைக்கு பெருசா அப்படி என்ன நடந்துருச்சு ? காலையில் இருந்து அவனிடம் ஒரு வார்த்தை பேசினியா நீ ? மித்ராவுக்கு ஷக்திகிட்ட பேசாமல் இருக்க முடியுமா ? ஷக்தி இப்படி சோகமாய் நிற்பதை மித்ராவால் பார்க்க முடியுமா ? மித்ரா மாறியது ஷக்தியா அல்லது நீயா ?" என்று கேள்வி கேட்டது அவள் மனம் ..
" இல்லை இவன் என் ஷக்தி .. சரியோ தப்போ .. அவன் கலங்கி நிற்க நான் காரணமாய் இருக்க மாட்டேன் " என்று உணர்ந்தவளாய் அவனருகில் சென்றாள் சங்கமித்ரா .. அதே நேரம், காற்றில் களைந்து போகும் கார்மேகங்களை பார்த்து அந்த நிலவை விட அதிகமாய் பரிதவித்தான் ஷக்தி ..
"ஷக்தி மாமா " என்று மெல்ல அவனை அழைத்தாள் மித்ரா .. கண்களை மூடி அவள் குரலில் வழிந்த நேசத்தை உள்வாங்கிக் கொண்டான் ஷக்தி .. பிறகு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்
" ம்ம்ம் சொல்லு டீ " என்றான்.
" என்ன ஷக்தி ?" என்றாள் அவள் .. அவளது கேள்வியில் ஒன்றும் புரியாமல் மீண்டும்
" என்னடி " என்றான் ..
" எப்படி நீ இவ்வளோ இயல்பா பேசுற நீ ?"
" ஏன் என்னாச்சு ?"
" என்ன ஆச்சா ? ஷக்தி !!!!" வேதனைகளை தேக்கி வைத்து அவனை பார்த்து வைத்தாள் மித்ரா .. அவளது பார்வையை தனது பார்வையால் துளைத்தப்படி
" எதுவும் நடக்கல மிது ... எதுவும் நடக்கல " என்றான் ..
" இல்லை நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் "
" அப்படின்னு நான் சொன்னேனா ?"
" சொன்னதான் எனக்கு தெரியனுமா ? எனக்கு நீ சொல்லலைனாலும் தெரியும் .. சொல்ல போனா எனக்கு மட்டும்தான் உன்னை ரொம்ப நல்லா தெரியும் "என்றாள் எப்போதும் போல உரிமையாய் ..
" எல்லாம் தெரியும் .. காதல் மட்டும் தெரில தானே ?" என்று சோகமான புன்னகையை உதிர்த்து கேட்டான் ஷக்தி ..
" ஷக்தீ " என்று பேச முடியாமல் நின்றவளுக்கு அவன் தலைகோதி கை கோர்த்து தோள் சாய்ந்து கொள்ளவேண்டும் போல இருந்தது .. அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன்.
இதயத்தை காட்டி " இங்க வலிக்கிறது டா .. இட்ஸ் ஓகே நீதானே விடுடா " என்று சொல்லி அவளை கடந்து நடந்தான் ஷக்தி.. சங்கமித்ரா கண்ணீர் மல்க அவனையே பார்த்து நிற்க மனம் பொறுக்காமல் மீண்டும் அவளருகில் வந்தான் ..
" ஹே அழுமூஞ்சி .. ஏன்டீ இப்படி அழுது வடியுற ?"
" ம்ம்ம் தலையெழுத்து போடா .. நீயேண்டா என்னை அழ வைக்கிற ?" என்று கேட்டு வைத்தாள் ..
" ஹா ஹா ... நான் அழ வெச்சா நீ அழுவியாக்கும் "
" பின்ன சிரிப்பாங்களா டா "
" ம்ம்ம் ஆமா "
" ஷக்தி ??"
" சிரி மிது .. சந்தோஷமா இரு "
" ..... "
" பீ ஹேப்பி ஆல்வேஸ் "
" உன் மூஞ்சி .. போடா "