" சரி ஓகே .. நீ ஹேப்பியா இருந்தா நான் ஹேப்பியா .இருப்பேன் .எனக்காக சந்தோஷமா இருக்கணும் ஓகே யா ?" என்று கேட்டான் ஷக்தி .. எதை சொன்னால் அவள் மறுக்க மாட்டாளோ அதையே சொல்லி அவளை சிரிக்க வைத்தான் ... அவள் புன்னைகைக்கவும் ":குட்" என்று விரல் உயர்த்தி காட்டிவிட்டு முன்னே நடந்தான்.. அவள் அவனுக்காக சிரித்தாள் .. அவளுக்குத் தெரியும் அவனும் அவளுக்காகத்தான் சிரிக்கிறான் என்று ..
" லவ் யூ டா ஷக்தி " என்று மனதிற்குள் அவள் சொன்ன நேரம், சட்டென ,திரும்பியவன் ஸ்டைலாய் ஒரு புன்னகையை வீசிச் சென்றான்.
காரை பார்க் செய்துவிட்டு வீட்டினுள் நுழைந்த அன்பெழிலனுக்கு கண்ணெதிரில் கண்ட காட்சி கண்களை நிறைத்தது. காவியா நடுவில் நிற்க அவளது வலது புறம் கதிரும் கதிர் அருகே முகில்மதியும் நின்றிருந்தனர். அவளது இடது பக்கம் மித்ராவும் மித்ராவின் அருகில் ஷக்தியும் நின்றிருந்தனர் .. ( சுருக்கமா சொல்லனும்னா ஆளாளுக்கு அவங்கவங்க ஜோடியோடு நின்னுகிட்டு இருந்தாங்க ) ..
" இறைவா கூடிய சீக்கிரம் இது நிறைவேறனும் " என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டே முகில்மதியின் அருகில் நின்றான் எழில். லக்ஷ்மி அம்மாவை பார்த்து கொண்டே " என்னம்மா நான் வர்றவரை யாரும் வீட்டுக்குள்ள நுழைய கூடாதுன்னு சட்டம் போட்டுட்டிங்களா ?"
" ஹா ஹா இல்லப்பா இந்த கதிரும் காவியா பொண்ணும் பேசிகிட்டே இருந்ததில் அப்படியே நின்னுட்டோம் .. வாங்க உள்ள வாங்க " என்றார் .. எழிலோ
" அம்மா இவ, ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தபோதே ஆரத்தி எடுக்கனும்னு நெனச்சேன் பட் இந்த சப்பாணியை பிடிச்சுகிட்டு கதவு கூட திறக்க முடில " என்று சொல்லி காவியாவிடம் இருந்து அடி வாங்கி கொண்டான் எழில் .. "கதிர் எனக்காக நல்லா ரெண்டு அவன் முதுகிலே போடுங்க "என்று அவள் எடுத்து கொடுக்க கதிரும் அவள் சார்பில் இரண்டடி வைத்தான் .. அன்பு அதை தூசு தட்டுவதை போல ஒதுக்கிவிட்டு " அம்மா கொஞ்சம் ஆரத்தி கரைச்சிட்டு வந்து இந்த குரங்குகளுக்கு சுத்தி போடுங்க .. ஷக்தியும் கதிரும் கூட இப்போதானே வீடு வந்திருக்காங்க .. சேர்ந்து திருஷ்டி கழிக்கலாம் " என்றான் .. காதல் கொண்ட உள்ளங்களுக்கு மட்டுமே புரிந்தது இது எழிலின் திட்டம் என்று ..இருந்தாலும் அந்த அழகான தருணத்தை தடுக்க யாருக்கும் மனம் வரவில்லை .. சிறிது நேரத்தில் சித்ராவும் லக்ஷ்மியும் அறுவருக்கும் திருஷ்டி கழித்தார். இடது காலில் அடிபட்ட காவியா வலது கால் வைத்து வீட்டினுள் வர ,
" சூப்பர் டீ .. இப்படிலாம் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சு வெச்சுகிட்டு தான் இடது காலை உடைச்சுகிட்டியா ? "என்று கேலி செய்தான் எழில் யாருக்கும் தெரியாமல் ..
" டேய் .படவா .... வாய மூடு .. ஏதாச்சும் உளறி தொலைச்சு இன்னைக்கே என்னை துரத்திடலாம்னு பார்க்குறியா ?" என்று அடிக்குரலில் உறுமினாள் அவளும் பதிலுக்கு.
அன்பெழிலனின் பெற்றோர் தற்பொழுது திருப்பதிக்கு சென்றிருப்பதால் காவியாவை தனது வீட்டில் தனியாய் இருக்க வைக்க வேண்டாம் என்று எண்ணித்தான் அவளை மித்ராவின் வீட்டிற்கு அழைத்து வந்தான் அவன் .. அவளை அழைத்து வரும்முன்னே மித்ராவின் போனுக்கு அழைத்து தாங்கள் அங்கு வரப்போவதை சொல்ல நினைத்தான் அன்பெழிலன் .. ஆனால் அன்று நடந்த களேபரத்தில் மித்ரா தனது போனை அணைத்து வைத்திருந்தான் .. உடனே ஷக்தியை அழைத்திருந்த எழில் நடந்த அனைத்தையும் அவன் மூலமாக தெரிந்து வைத்திருந்தான் .. ஒருவகையில் காவியா அங்கு இருப்பது சரி என்றே அவனுக்கு தோன்றியது .. அதற்கு முதல் காரணம் காவியாவின் குணம். அவள் நிச்சயம் தனது கலகலப்பான குணத்தால் அவர்களை மாற்றி விடுவாள் ..அடுத்தது மித்ராவை கண்காணிக்க காவியாவை சாக்கு காட்டி எழில் அடிக்கடி வீட்டிற்கு வர முடியும் .. மூன்றாவது அவன் முகில்மதியையும் அடிக்கடி சந்திக்க இயலும் ( அஹெம் அஹெம் இந்த கடைசி காரணத்தை தான் நான் முதலில் சொல்லி இருக்கணுமோ ?)
இப்போ காவியா - கதிர் பற்றி தெரிந்திருந்ததால் காவியா கதிரின் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்து வைத்தான் அன்பெழிலன் .. அனைவரிடமும் பேசிவிட்டு விடைபெறும் முன்பு
" முகில்மதி கொஞ்சம் என்னோடு வர்றியா ? காவியாவின் திங்க்ஸ் என் காரில் .இருக்கு . நான் எடுத்து தந்திடுறேன் " என்று அனைவரின் முன்னிலையிலும் கூறி அவளை தன்னோடு அழைத்து சென்றான் அன்பெழிலன் ..
" ஓஹோ மவனே இதுக்குதான் காரை தூரமா பார்க் பண்ணியா ?" என்று குறும்பாய் கண்களால் சிரித்தாள் காவியா ..
அன்பெழிலனுடன் அமைதியாய் நடந்து வந்தாள் முகில்மதி ..ஓரளவிற்கு மேல் அவனுக்கே அவளது மௌனம் தாங்கவில்லை ..
" முகிலா "
" ம்ம்ம் ?"
" என்னாச்சுடா "
" ஒண்ணுமில்ல எழில் "
" பொய் .சொல்ற ... உன் முகமே சரி இல்லை "
" அப்படிலாம் ஒன்னும் இல்லை "
" காரணம் காவியா தானே ? காவியா யாருன்னு அவ வந்த கொஞ்ச நேரத்திலேயே உனக்கு தெரிந்து இருக்குமே .. அப்படி இருந்துமா நீ கோபமா இருக்க " என்று கேட்டான் அன்பெழிலன் .. தற்பொழுது தனது விரல் நகங்களை ஆராய்வதே தனது தலையாய கடமை என்பது போல, முகம் நிமிர்த்தாமல் அவனை தொடர்ந்து நடந்தாள் முகிலா ..
" ப்ளீஸ் முகிலா ஏதாச்சும் பேசுடா " என்றான் அவன் குரலில் .. அவனது குரலில் நிமிர்ந்தவள்
" காரில் சொல்றேன் " என்றாள் ..
அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்து காவியாவின் பொருட்களை எடுத்து அவளிடம் கொடுத்து கொண்டு இருந்தான் எழில் .. ஏதோ ஒன்று உறுத்த, சட்டென நிமிர்ந்தவன் கலங்கிய விழிகளுடன் இருந்தவளை பார்த்து
" என்னம்மா " என்றான் .. அதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவன் மார்பில் சாய்ந்து அழ தொடங்கினாள் முகில்மதி .. முதல்முறையாய் அவளாகவே வந்து அவனை அணைத்திருந்தாள் ... அதை எண்ணி சந்தோஷப்பட முடியாமல் தடுத்தது அவளது கண்ணீர் துளிகள்.
" ஹே முகில் போதும்டா "என்று சொல்ல அவளது கேவல் .அதிகமானது .
" சொல்லுடா என்னாச்சு "
" என்னை மன்னிச்சிருங்க எழில் .. நான் அப்படி பண்ணிருக்க கூடாது "
" நீ இப்போ என்ன பண்ணிட்ட ??"
" நான் .. நான் .. உங்களையும் ... காவியா அக்காவையும் "
" தப்பா நெனச்சியா ?"
" சத்தியமா இல்லை .. ஆனா காவியா அக்கா மேல சட்டுனு பொறாமை வந்துடுச்சு " என்றவள் மீண்டும் அழுதாள் ..வளர்ந்தாலும் இவள் குழந்தைதான் என்று எண்ணியவன் அவள் முகத்தை நிமிர்த்தி
" இட்ஸ் ஓகே டா... லவ் ல இதெல்லாம் சகஜம் ..அதுவும் நான் உன்கிட்ட எங்களை பத்தி அதிகம் சொன்னது இல்லை .. அட்லீஸ்ட் இன்னைக்காவது சொல்லி இருக்கலாம் .. சொல்லாமல் இருந்தது என் தப்புதானே ?"
".."
" அதுனால தான் உன்கிட்ட தனியா பேசணும்னு இப்படி ஒரு ப்ளான் போட்டேன் "
" இருந்தாலும் இது தப்புதானே எழில் .. காதலில் புரிதலும் நம்பிக்கையும் ரொம்ப முக்கியம் .. நீங்க தன்னிலை விளக்கம் தந்தாதான் நான் உங்களை நம்பனுமா ? அப்போ ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்க தப்பாக சித்தரிக்கப்பட்டா நான் நம்பிடுவேனா ? இது எப்படி சரியாகும் எழில் ? நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கிறேன் தெரியுமா ?" என்று வினவினாள் முகிலா உள்ளே போய்விட்ட குரலில் !
" அடடே ...என் செல்லம்மா ஒன்னு பேசாம கொல்லுறா ..இல்லன்னா பேசியே கொல்லுறாளே " என்று உல்லாசமாய் சிரித்தவன் அவளுக்கு விளக்கம் அளித்தான்...